10 மே 2017

Bhim: Lone Warrior - M.T. Vasudevan Nair

மலையாளத்தில் ரெண்டாமூழம் என்ற பெயரில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மகாபாரதக்கதை. பர்வா மொழிபெயர்ப்பை படித்த பின் மற்ற மொழி பெயர்ப்புகளை படிக்க கொஞ்சம் பீதியாக இருக்கின்றது. பருவம் நூலில் அத்தனை பிழைகள். இதுவும் அதே சாகித்ய அகடமி பிரசுரம் என்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பையே படிப்பது உசிதம் என்று நினைத்தேன். பிறகு எப்படி ஆங்கில அறிவை வளர்ப்பதாம். அந்நூலை மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றார்கள் என்ற செய்தி புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது. இதை திரைப்படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடனே படித்தேன்.

மகாபாரதத்தை பலரும் பலவிதமாக மாற்றி எழுதிப்பார்த்திருக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க பீமனனின் பார்வையில் நகரும் கதை. இரண்டாவது இடம் எப்போதும் கொஞ்சம் கடினமானது. நமக்கு முன்னாலிருப்பவனை முந்தாமல், அதே சமயம் மிகவும் பின்தங்காமல் சென்று கொண்டிருக்க வேண்டும். முதல்வனின் முட்டாள்த்தனம் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது, அதன் விளைவுகளை பங்கு போடவும் தயாராக இருக்க வேண்டும். பீமன் இரண்டாமவன் அதை மையமாக வைத்து தலைப்பை இட்டிருக்க வேண்டும்.

பாண்டவர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பீமன். குழந்தை (அ) இளம் பருவத்தில் முதன் முதலாக பாரதம் படிக்கும் எவரையும் கவரும் பாத்திரம் பீமன்தான். வலிமை. பதினாயிரம் யானைகளின் பலம் கொண்டவன் என்பதே அற்புதமான விஷயம் அல்லவா. ஆனால் பீமனுக்கு அந்த இடம் கிடைத்ததா என்பது கேள்விதான். ஆரம்பம் முதல் தர்மன் நம்புவது பீமனை மட்டுமே, கெளரவர்கள் கூட அஞ்சுவது பீமனை  மட்டுமே. ஆனால் அவனை விட அர்ஜ்ஜுனன் பெரிய வீரன் என்று கூறப்படும் இடங்களே அதிகம்.
அரக்கு மாளிகையிலிருந்து தப்பி செல்வதிலிருந்து பல அரக்கர்களை கொல்வது, ஜராசந்தனை வெல்வது, அனைத்து கெளரவர்களையும் கொன்றவன் பீமனே. அதே போல் ஐவரில் பாஞ்சாலி மீது அதிக அன்பு கொண்டவன் பீமனே.  ஆனால் பாஞ்சாலி அதிகம் பிரியம் கொண்டது அர்ஜ்ஜுனனிடம். பாண்டவர்களின் முதல் வாரிசு, பீமனின் மகன் கடோத்கஜன். ஆனால் அவன் போரில் அவன் ஒரு பகடையாக உருட்டப்படுகின்றான். அபிமன்யுவின் மரணம் உண்டாக்கும் அதிர்வை கடோத்கஜனின் மரணம் ஏற்படுத்துவதில்லை.


பீமனின் இந்த இரண்டாவது இடத்தை பற்றி அவன் பார்வையில் பேசி போவதுதான் இந்நூல். மகாபாரதத்தின் சுருக்கமான வடிவம். ஒரு நாளில் படித்துவிடலாம். பீமனின் மனவோட்டங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தி போகின்றார். அனைத்து நிகழ்வுகளும் சுருக்கமாக போகின்றது. யாதவர்களின் அழிவில் ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி செல்கின்றது.

பீமன் பாண்டவர்களின் மனசாட்சி. தர்மன் பேசத்தவறும் தர்மங்களையும் பேசுபவன் அவனே. கள்ள மெளனம் என்பதே அவனிடம் கிடையாது. பீமனின் மனசாட்சி பேசிக் கொண்டே இருக்கின்றது. அனைத்தையும் விமர்சிக்கின்றது, தர்மனின் ஊசலாட்டத்தை கண்டு சிரிக்கின்றது, திருதராஷ்டிரனின் போலி பாசத்தை எள்ளி நகையாடுகின்றது, ஷத்ரிய தர்மத்தை விமர்சிக்கின்றது. இந்நூலை முக்கிய நூலாக்குவது இதுதான். இந்த விமர்சனத்தை அவர் எங்கும் புதிதாக செய்துவிடவில்லை. மகாபாரதத்திலேயே வருவது வியாசரே காட்டுவது. அதை கொஞ்சம் விளக்கி காட்டுகிண்றார். அவ்வளவே.

பீமனை அனைவரும் மர மண்டை என்றுதான் கூறுகின்றனர். உணவின் மீது விருப்பம் உள்ளவனை பெரும்பாலும் அறிவு குறைவானவன் என்றுதான் அனைவரும் நினைப்பார்களோ. பருவம் போலவே, இதிலும் கதையை தரையில் தான் வைத்து எழுதியுள்ளார். இதில் வரும் இன்னொரு முக்கிய பாத்திரம் கர்ணன். கர்ணன் பலரால் வஞ்சிக்கப்பட்டாலும், அவனின் பொறாமை குணமே அவனை அழித்தது. துரியோதனின் வஞ்சத்திற்கு சற்றும் குறையாத வஞ்சம் அவனுடையது. வெண்முரசில் அவனை ஒரு தேவனுக்கு ஒப்பாக காட்டும் போது ஒரு மாதிரியகத்தான் இருந்தது. இதில் அது இல்லை. கர்ணனின் பொறாமையே கெளரவர்களின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்பது இதில் தெளிவாக காட்டப்படுவதில் ஒரு மகிழ்ச்சி.

இதை திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கொண்டே படித்தேன். சிறப்பான தொழில்நுட்ப உதவியுடன், நன்றாக செலவு செய்து எடுத்தால் பாகுபலியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு பீமன் சென்று விடுவான். என்ன மோகன்லாலை பீமனாக நினைக்க கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது. கிட்டத்திட்ட மூன்று பாகங்களாக எடுத்து மிரட்டலாம். சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. துரியோதனன் - பீமன் விளையாட்டு போர், இடும்பன், பகன், கீசகன், ஜராசந்தன் என்று தனிப்போர்கள். சித்திரசேனன் என்னும் காந்தர்வனுடன் சண்டை, விராட நாட்டின் படையெடுப்பு, பாஞ்சால நாட்டு படையெடுப்பு, குருஷேத்ர யுத்தம் என்று பெரிய போர்கள், ஜயத்ரதனை விரட்டுவது, மலரை தேடி பொவது போன்ற விறுவிறுப்பான காட்சிகள், அரண்மனைகள், காடுகள், படகுகள், கப்பல்கள், போர் வியூகங்கள் என்று மிகப்பெரிய ஒரு படைப்பாக ஆகும்.

ஒவ்வொரு பகுதிக்கும் வரையப்பட்டுள்ள படங்கள் பிரமாதம்

எம்.டி வாசுதேவன் நாயர் பற்றி ஜெயமோகனின் தளத்தில் 

ஓவியங்களை இங்கே காணலாம், மேலே உள்ள ஓவியம் அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

ஆங்கில மொழிபெயர்ப்பு  இங்கே

தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே 

இதை தழுவி எழுதப்பட்ட மற்றொரு நாவல் இங்கே கிடைக்கின்றது.

2 கருத்துகள்:

  1. மகாபாரதம் பற்றிய எந்தக் கதை ஆயினும் சுவாரஸ்யமே. ஆனால் பாகுபலியை பீட் செய்யுமளவு எடுக்க திறமை அதீதமாய் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. ஏறக்குறைய நான் நினைத்ததை என்னை விட சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். (அதில் வியப்படைய என்ன இருக்கிறது?)

    தமிழில் மொழிபெயர்த்தது யார் தெரியுமா?

    உங்களுக்கு இந்த மகாபாரத நாவல்கள்களில் மிகவும் பிடித்தது எது?

    பதிலளிநீக்கு