16 மே 2017

வைரமுத்து சிறுகதைகள்

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சிறுகதைகள் எழுதுவதாக விளம்பரம் பார்த்தேன். குமுதம் தடபுடலாக விளம்பரம் செய்திருந்தது. மூன்றாம் உலகப்போரின் சூடுதாங்காமல் விகடன் விலகிவிட்டது போல. 

சிறுகதைகள் எழுதிமுடித்த கையோடு உடனே அது புத்தகமாகவும் வந்துவிட்டது, பெரிய விழா, விஜய் டீவியில் பட்டி மன்றம், மலையாள மொழி பெயர்ப்பு. வைரமுத்து ஒரு நல்ல வியாபாரி. தன் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும், வலுக்கட்டாயமாக விற்பனை செய்யவும் தெரிந்தவர். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன். பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.

முன்னுரையில் பல பெரிய பெரிய எழுத்தாளர்களையேல்லாம் வைத்து சிறுகதை பற்றி பெரிதாக எழுதியுள்ளார் ஆனால் உள்ளே சுத்தம். வாரமலரில் கூட வெளியாக தகுதியில்லாத கதைகள். சிறுகதை என்பது இறுதியில் ஒரு திருப்பத்தை தருவது என்ற அளவில் எழுதப்பட்டவை, இல்லை சொல்லப்பட்டவை. எந்த கதையும் அவர் கையால் எழுதியது போல இல்லை, வாயால் சொல்லப்பட்டவை போன்றே இருக்கின்றது. இதே பிரச்சினைதான் அவரது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கும் நேர்ந்தது. எழுதும்போது நம்மை அந்த உலகிற்கு அழைத்து சென்று நம்மையும் கதையில் ஈடுபடுத்தும். சொல்லப்படும் போது அதை இழக்கின்றது.

வைரமுத்து கவிஞர் வேறு, இயல்பாக அந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் வந்து கதையை கெடுக்கின்றன.

சில கதைகள் நல்ல சிறுகதையாக வந்திருக்க வேண்டியவை. வைரமுத்து நடுவில் வந்து பேசிக் கொண்டிருப்பதால் மொக்கை கதையாகின்றது. அனைத்துவித கதைகளையும் முயற்சி செய்திருக்கின்றார், ஆனால் என்ன செய்ய, ஒன்று கூட தேறவில்லை என்று வருத்தப்படவேண்டியவைதான். 

வாரமலரில் வாராவாரம் கதைகள் வெளிவரும். நேரடியான கதைகள், எங்கே கதை புரியாமல் போய்விடுமோ என்று இறுதியில் கதையாசிரியரே கதையை விளக்கி விட்டு செல்வார். அது போன்ற கதைகள்தான் இவை. முழுவதும் படித்து முடிக்க மிகவும் பொறுமை அவசியம். கதை மாந்தர்கள் பேசுவதை விட தன் மேதாவித்தனத்தைதான் பேசிக் கொண்டிருக்கின்றார். உரையாடகள் கூட இயல்பாக இல்லை, வலுவில் புகுத்தப்பட்ட சிலேடைகள், உவமைகள் என்று படு செயற்கை.

இவர் கதைகளுக்கு செய்த விளம்பரத்திற்கு, ஏகப்பட்ட புது எழுத்தாளர்களை எழுதவைத்து அவர்களை சந்தோஷப்படுத்தியிருக்கலாம்.

அப்படியானால், ஒன்றுமேயில்லையா என்றால், கதைகளில் அங்கங்கு வரும் சின்ன வரிகள் கவர்கின்றன. அது அவருள் இருக்கும் கிராமத்தான் இயல்பாக வெளிப்படும் இடம். அந்த கிராமத்தானிடமிருந்து உண்மையாக வெளிவரும் வார்த்தைகள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன. அவர் நல்ல கதை எழுதலாம், அவரது களம் கிராமம், கிராமத்து மனிதர்கள். வெவ்வேறு மாவட்டங்களை பற்றி அந்தந்த மாவட்ட எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தை பற்றி ஓரளவிற்கு எழுதக்கூடிய ஒருவராக வைரமுத்து இருக்கின்றார். அவர் தான் கவிஞர் என்பதை மறந்து, ஒரு கிராமத்தானாக எழுதினால் நல்ல படைப்புகள் கிடைக்கும். கள்ளிக்காட்டு இதிகாசம் ஓரளவிற்கு இருந்தாலும், அங்கும் கவிஞர்தான் அதை கெடுத்தார். தூர்வை, கோபல்ல கிராமம் போன்ற புத்தகங்களுக்கும், இதற்குமான வித்தியாசம் அதுதான். 

அவர் இளையராஜா இசையில் எழுதிய பாடல்கள்கூட தவறாலாம் ஆனால் இதுதவறாது. பொங்கலை தின்று விட்டு படித்தால் போது, சும்மா பிய்த்து கொண்டு வரும் தூக்கம். வீட்டில் அனைவரும் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டதால் தனியாக இருக்கின்றேன். எளிதில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிந்த போது அரு மருந்தாய் கிடைத்திருக்கின்றது. நன்றிகள் அவருக்கு.

3 கருத்துகள்:

 1. விமர்சனம் உங்களுடைய தனிப்பட்டக்கருத்து.
  //அவர் இளையராஜா இசையில் எழுதிய பாடல்கள்கூட தவறாலாம் ஆனால் இதுதவறாது.//
  ஆனால் இது புரியவல்லையே ??


  பதிலளிநீக்கு
 2. விமர்சனம் என்பது எப்போதுமே தனிப்பட்ட கருத்துதான், பொதுவான கருத்துக்களை வெளியிட்டால் அது செய்தி.

  அந்த வரியை அடுத்த வரிகளுடன் சேர்த்து அர்த்தப்படுத்திக் கொள்ளவும்

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு