18 மே 2017

கொசு - பா. ராகவன்

அரசியலை அடிப்படையாக் கொண்ட எழுத்துக்கள் மிகக்குறைவு. சோவின் நாடகங்கள் தனி ரகம். கதைகள், நாவல்கள் வெகு குறைவு. இந்திரா பார்த்தசாரதி வேதபுரத்து வியாபாரிகள், மாயமான் வேட்டை  போன்ற நாவல்களை எழுதியிருக்கின்றார். வேறு யாரும் எழுதியிருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கொசு, ஒரு அரசியல் நாவல். அரசியல்வாதிகளை பற்றி பேசும் நாவல். தலைப்பை கண்டு வழக்கமான பா ராகவனின் நகைச்சுவை கட்டுரை தொகுப்பு என்று நினைத்து கொண்டேன். நாவல் என்றது கொஞ்சம் ஆச்சர்யம். அவரது தொடர்கதை ஒன்றை கல்கியில் படித்த நினைவிருக்கின்றது. அலை உறங்கும் கடல். ஓரளவிற்கு நல்ல கதை.

தொண்டனுக்கு ஒரு நல்ல பதவியை அடைவது என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அந்த கனவுடன் இருக்கும் முத்துக்குமாருக்கு அவன் கட்சியின் சீனியர்கள் கற்று தருவது என்ன என்னபதுதான் கொசு. கட்சியில் பல ஆண்டுகளாக காலம் தள்ளியும் வெறும் வட்டமாக இருப்பவருக்கு, பெரியவட்டமாக ஆசை. அதற்கு ஐடியா கேட்க முத்துக்குமாரை அழைக்கின்றார். அதிலிருந்து மெதுவாக முத்துக்குமார் முன்னேற முயற்சிக்கின்றான். முதல்வன் பட இறுதியில் ஒரு வசனம் வரும், என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா, அதுதான் இங்கும்.



தனக்கு அடுத்து உள்ளவனை பயன்படுத்து தான் மேலேற நினைப்பது, இவனை விட அவன் பின்னால் போவது இன்னும் அதிக பலனை தரும் என்று செல்வது, இருவரிடமும் விசுவாசமாக இருப்பது போன்று நடிப்பது என்று பல திரிசமங்களை செய்துதான் முன்னேற முடியும். அரசியல் பலவித சாத்தியங்கள் உள்ள பகடை, அனைத்து சாத்தியங்களையும் அடைத்து திட்டமிட்டால் கூட, புதிய சாத்தியங்களை திறந்து காட்டி பல்லை காட்டி நகைக்கும். மேடைகளில் அடித்து கொண்டாலும், வர்த்தக உறவுகளை பலப்படுத்துவது, அடிக்கும் கொள்ளையில் எதிர்க்கட்சிக்கும் கொஞ்சம் பங்கை அனுப்புவது என்று நமது அரசியலின் பல் பக்கங்களை காட்டி விட்டு போகின்றார். சிறிய உதாரணம், குடிசை எரிவதை கண்டு அதிர்ச்சியடையும் முத்துக்குமரன், தான் அரசியல்வாதியாக அது போன்ற செயல்களை செய்வதற்கும் தயாராகின்றான்.

இதற்கு நடுவில் வரும் ஒரு மெல்லிய காதல். சுவாரஸ்யமான நடை. பெரிய அளவில் அரசியல் விமர்சனங்கள் ஏதும் கிடையாது, அரசியலின் அசிங்கமான பக்கத்தி ஒரு சிறிய காட்சிதுண்டு. அவ்வளவே. மென்பிரதி இலவசமாகவே கிடைக்கின்றது.

படிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக