23 ஆகஸ்ட் 2013

அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.

சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.

இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.

20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.

12 ஆகஸ்ட் 2013

என் பேர் ஆண்டாள் - சுஜாதா தேசிகன்

தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது. 

கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.

முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.

தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால். 

27 ஜூலை 2013

மகாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - முன் வெளியீட்டு திட்டம்.

இட்லி வடையில் மகாபாரதம் கும்பகோணம் பதிப்பின் முன் வெளியீட்டு திட்டம் பற்றிய பதிவு

http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர்பு விபரங்கள் அதில் உள்ளன.

நான் இணைய விருப்பம் தெரிவித்துள்ளேன். வாங்கினாலும் முழுவதையும் படிக்க எத்தனை வருடங்களாகப் போகின்றதோ.

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.