கு.ப.ராஜகோபாலன் நாற்பதுகளில் எழுதிவந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகளை தொகுத்து அழிசி பதிப்பகம் கிண்டில் பதிப்பாக வெளியிட்டது. வெளியிட்டதை சில நாட்கள் இலவசமாகவும் தந்தது. மாதொருபாகன் புத்தகத்தால் உலகப்புகழ் பெற்ற பெருமாள் முருகன் என்னும் பேராசிரியர் ஏற்கனவே கு.ப.ராவின் கதைகளை தொகுத்து, அதை காலச்சுவடு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் தொகுத்த அதே கதைகளை அழிசியும் வெளியிட்டதால் பிரச்சினையாகி அமேசான் அழிசி வெளியிட்டதை நீக்கி விட்டது. ஏற்கனவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சு நூல்களுக்கும் இதே கதிதான். அழிசி குபராவின் கதைகளை ரிவர்ஸ் ஆர்டரில் வெளியிட்டு இருக்கலாம். இலவசமாக கிடைத்த ஒன்றிரண்டு நாட்களில் வாங்கியது.
குபரா தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கவிஞர் நா. பிச்சமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.சொந்த ஊர் கும்பகோணம், திருச்சியில் படிப்பு, மதுரை மேலுரில் வேலை. பின் பார்வைக் குறைபாடால் அரசு வேலையை விட நேர்ந்தது. பார்வை குறைபாடு இருந்த காலத்தில் குபரா சொல்ல சொல்ல அவரது சகோதரி எழுதுவாராம். பின்னர் மணிக்கொடி ஆசிரியர் வேலை, புத்தகக்கடை என்று அலைந்து திரிந்து காங்கரின் நோயால் 42ம் வயதில் மறைந்தார். குபரா, கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் போது தி.ஜா அவருடன் நெருங்கி பழகினார். மோகமுள்ளில் வரும் எழுத்தாளர் பாத்திரம் குபராதான் என்று எங்கோ படித்த நினைவு. தி.ஜாவின் நாவல்களை விட எனக்கு அவரது சிறுகதைகளே அதிகம் பிடிக்கும், அவரே குபரா எழுதுவது போன்று ஒரு வரி எழுதிவிட்டால் போதும் என்கின்றார். அந்தளவு அவர் குபரா மீது மதிப்பு வைத்துள்ளார்.