01 ஏப்ரல் 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகனின் முதல் நாவல். அகிலன் நினைவு பரிசு பெற்ற நாவல்.

மனிதன் எங்கெல்லாம் தன் காலடியை வைத்தானோ அங்கெல்லாம் தான் காலடி வைத்த இடத்தை அழித்து நாசமாக்கிவிடுவது வழக்கம். மனிதனின் தேவையும் ஆசையும் அவ்வளவு பெரியது. இயற்கையை அளித்து உண்டாக்கிய பல விஷயங்களில் முக்கியமானவை காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள்.

உலகில் அதிக ரப்பர் உற்பத்தி செய்யும் நாட்டில் நமது நாடும் ஒன்று. முக்கிய இடம் கேரளா. ரப்பர் உற்பத்தி என்பது ஒரு வகையில் வளர்ச்சி என்றாலும் அந்த வளர்ச்சி உருவானது காடுகளை அழித்து. ரப்பரும் ஒரு வகை மரம்தானே என்றாலும், அது நம் நாட்டிற்கேற்ற மரமல்ல. அது உறிஞ்சும் தண்ணீர் மிக அதிகம். இரண்டாவது மனிதர் காலடி படாத இடத்தில் மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு சுதந்திரம் இருக்கும். மனிதன் வந்துவிட்டால அவனுக்கு போகத்தான் மற்ற உயிர்களுக்கு. மனித நடமாட்டம் மிகுந்த பல இடங்களிலிருந்து மற்ற மிருகங்கள் வெளியேறி ஓடுகின்றன. இதனை பிண்ணனியாக வைத்து எழுதப்பட கதை ரப்பர். இரப்பர் என்று எழுத வேண்டும் என்பார்கள், இரப்பர் என்றால பிச்சைக்காரர்கள் என்றாகி குழப்பமாகிவிடும். எனவே ரப்பர்தான்


கதை பொன்னு பெருவட்டரின் இறுதி காலத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை முன்னும் பின்னும் போய் வருகின்றது. கலவரத்தில் ஊரை விட்டு கிளம்பும் பொன்னு, அறைக்கல் வம்சத்திரன் மூலம் பன்றி மலையில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கின்றான். கடின உழைப்பால் வளர ஆரம்பிக்கும் அவர்களுக்கு ரப்பர் துணையாகின்றது, அடுத்த அடிக்கு பாய்கின்றனர். அதே ரப்பர் பொன்னுவின் மகன் செல்லையாவின் அழிவிற்கு காரணமாகின்றது.

கதை என்று ஒன்றும் பிரமாதமில்லை. துண்டு துண்டான சித்திரங்கள், சின்ன சிறுகதைகள். அது காட்டும் சித்திரம் அபாரமானது. கதையில் பல கிளைக்கதைகள், சேர நாட்டின் சரித்திரத்தின் சின்ன சின்ன துண்டுகள். நாயர்களுக்கும் நாடார்களுக்கிடையிலான சண்டை, நாயர்களின் வீழ்ச்சி, நாடார்களின் போராட்டம், அவர்களின் வளர்ச்சி, மருமக்கள் மான்ய ஒழிப்பின் மாற்றம் என்று சில வருட கதைகள் அங்கங்கு சொல்லப்படுகின்றது.

கதையின் பாத்திரங்கள் அனைத்தும் நமக்குள் உயிர் பெற்றலையும் படி காட்சிகளால் காட்டியுள்ளார்.  பொன்னு பெருவட்டரின் பாத்திரம், கோபமும், உழைப்பும், முன்னேறுவதில் காட்டும் வெறி, அதற்காக எதையும் செய்யும் குணம். இறுதியில் அவர் செய்தது அனைத்தும் அவரை குற்ற உணர்ச்சி கொள்ள செய்கின்றது. அவர் அவரின் வேலைக்காரனை கண்டு அடையும் குற்ற உணர்வு, நூற்றாண்டு கண்ட காணியை காணும் போதும் அது உச்சமடைகின்றது.

செல்லையா பெருவட்டர், பொன்னு பெருவட்டரின் மகன். விவசாயி வியாபரத்தில் இறங்கினால் என்னவாகும்? வியாபரத்திற்கு கொஞ்சம் கிரிமினல் புத்தியும் தேவை. வியாபாரிகள் கிரிமினல்கள் என்று சண்டைக்கு வரவேண்டாம். அடுத்தவர் செய்யும் தகிடுதத்தங்களை அறிய வேண்டும், மிகுந்த வெள்ளந்திகளாலும் , முட்டாள்களாலும் அது முடியாது. இவர் இரண்டுங்கெட்டான். 

மாடம்பிகளாகவும், தம்புரானாகவும் வாழ்ந்த குடும்பங்களின் இறங்குமுகமான கால கட்டம். எதிர்ப்பு என்று ஒன்று இல்லாத ஒன்றும் காலப்போக்கில் அழியும். கொஞ்சமாவது சவால் என்று ஒன்று இருந்தால்தான் தாக்குபிடிக்க முடியும், மாற்றத்தை தாங்கி வாழ முடியும். கதையில் வரும் அறைக்கல் குடும்பம் அது போன்ற ஒன்று. துண்டு துண்டான வம்சத்தின் ஒரு கிளை. குளம் கோரி. குலம் அழியும் போது பிறந்தவன் அல்லது பிறந்ததால் குலம் அழிந்தது. குலம் கோரி குளம் கோரியாகிவிட்டதா?

பல காலம் எதிர்ப்பே இல்லாமல், சுதாரிக்காமல் வாழும் பெருவட்டரின் சாம்ராஜ்ஜியம் அழிவதும் அதிலேதான்.

காணி தன் பேரனுடன் பெருவட்டரை காணவரும் காட்சியும் அவரது பேரனின் மனதில் ஓடும் காட்சிகளும் மிகவும் பிடித்த ஒரு பகுதி. காணி ஒரு நூற்றாண்டு மாற்றத்தை கண்டவர். யானை ஏறாக்காடுகளில் கரண்டு கம்பத்தையும், யானை மிரண்டோடும் வாழைக்காட்டில் காங்க்ரீட் கட்டிடங்களையும் காணும் அவரது காலம். காட்டு மரம் போன்ற அந்தகாலத்து ஆசாமிகள் இன்னும் இருக்கின்றார்கள்.

முதல் நாவல் என்பதால் எவ்விதத்திலும் குறைந்ததில்லை. வழக்கமான மலையாளம் கலந்த நடை. பொன்னு சிறுவனாக இருக்கும் போது நடக்கும் சம்பவங்களும், காட்டை திருத்தி கழனியாக்கும் காட்சிகளும் கண் முன் ஓடுகின்றன.

ஜெயமோகனுக்கு கிறிஸ்துவத்தின் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. (கிறிஸ்துவர்கள் / கிறிஸ்துவ மதத்தின் மேலல்ல) இங்கும் பல இடங்களில் அவர் வருகின்றார், கூடவே மெலிதான கிண்டல்களும் சேர்ந்தே வருகின்றன. பாஸ்டர் ரெம்ப்ராண்டின் ஓவியத்தை கண்டு செயற்க்கையக உண்டாக்கி கொண்ட ஆன்மீக பாவமும், பெருவட்டரின் மதம் மாறியதன் பிண்ணனியும் உதாரணம்.

ஆகாயத்து பறவைகள் விதைப்பதில்லை அறுவடை செய்வதில்லை.

கதையை இங்கிருந்து படித்து அங்கேயே முடித்து கொள்ளலாம்.

மேலே எழுதியதை படித்தால் முழுமையாக தோன்றவில்லை. இக்கதை காட்டும் விஷயங்களை கோர்வையாக எழுத முடியவில்லை. ஒவ்வொரு சரடும் ஒவ்வொரு பக்கம்  இழுக்கின்றது. ரப்பர் அப்படித்தானே இருக்கும்.ரப்பர் என்று தலைப்பிருந்தாலும், இது சுற்றுப்புற சூழலை மட்டும் பேசும் நாவலல்ல. அதுவும் ஒரு சரடு.

கவிதா வெளியீடு

சிலிக்கான் ஷெல்பில்





2 கருத்துகள்:

  1. //மேலே எழுதியதை படித்தால் முழுமையாக தோன்றவில்லை//

    படித்துக்கொண்டு வரும்போது எனக்குத் தோன்றியதும் இதுதான். ஆனால் நாவலின்போக்கை நீங்கள் சொல்லியிருப்பதால் புரிகிறது. படித்ததில்லை இதுவரை. வாய்ப்பு கிடைக்கும்போது வாசிக்க வேண்டும். முதல் நாவலா... ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
  2. ரப்பர் 20 பக்கங்கள் மட்டும் படித்து அப்படியே நிற்கிறது. நாவலின் ஆரம்பப் பக்கங்களின் விவரிப்புகள் நம் மனதில் அற்புதமான கற்பனையைத் தோற்றுவிப்பவை. திரையில் நாம் காணும் ஆரம்பக் காட்சிகளுக்கு நிகரானது அது. அவசியம் படிக்கவேண்டிய நாவல் ரப்பர் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு