27 ஏப்ரல் 2014

மாயமான் வேட்டை

வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.

அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.

அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.

நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.


மாயமான் வேட்டை, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியல் சுழலில் மாட்டிக் கொள்ளும் ஒருவனின் கதை. நமது அரசியலை பற்றி தெளிவாக கதை பேசுகின்றது. பல வருடமாகியும் நிலை மாறியிருப்பது போல தெரியவில்லை.

ஜெயராம், அமெரிக்கவாழ் பொருளாதார நிபுணர். அங்கு அவனை பார்க்கும் ஒரு மந்திய அமைச்சர், இந்தியாவிற்கு வாருங்கள் என்று சொறிந்துவிட்டு போக, கடைசியில் ரத்தம் வடிய திரும்பி போவதுதான் கதை.

யாரோ எழுதி தந்ததை தன்னுடையதாக முழங்குவதும், அதற்காக அதை எழுதி தந்தவனிடமே தன்னை பாராட்டி கொள்வதும், ஒரு கல்வியாளர் கொஞ்ச கொஞ்சமாக அரசியல்வாதியாக மாறுவதும் இன்றும் காணக்கூடிய காட்சி. அரசியல் என்பது அதில் சேரும் அனைவரையும் கொஞ்ச கொஞ்சமாக மாற்றிவிடும். ஆரம்ப தயக்கங்கள் இருந்தால் அரசியல் அவனை சாப்பிட்டு முழுங்கி விடும், இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஆனால் அரசியலில் இருந்து நல்லது செய்ய வேண்டும் என்றால், அதை அதன் விதிகளுடன் ஆட வேண்டும், ஜெயிக்க வேண்டும். சில இழப்புகள், சில தவறுகள் செய்ய வேண்டியதுதான் வரும். நமது தர்மத்தை எதிரிகள்தான் நிர்ணயம் செய்கின்றார்கள். துரியோதனன் தான் கிருஷ்ணனின் போர் தந்திரத்தை நிர்ணயம் செய்கின்றான். அதை அறியாமல் சிக்கி கொள்பவனின் நிலை, மாயமானை விரட்டியவன் நிலைதான். பரிதாபம். தோல்வி. அவனை மற்றவர்கள் தங்கள் குற்றங்களுக்கு பலிகடா ஆக்கும் சாத்தியமும் உண்டு. இதுதான் கதையின் சாரம்.

இதிலும் அங்கங்கு அறிவுஜீவித்தனமான வாதங்கள் உண்டு, நல்ல வேளை அனைத்திற்கும் அடித்து கொள்வதில்லை. கொஞ்சம் இயல்பான காட்சிகளும் உண்டு, இயல்பான பாத்திரங்கள் என்றால், நான் அதுமாதிரி ஆட்களை பார்த்ததில்லை. வீட்டில் குடிப்பதும், அண்ணனும் தங்கையும் சேர்ந்து குடிப்பதும், திருமணத்தை சர்வசாதரணமாக செய்து கொள்வதும், அதன்பின் தனித்தனியே வாழ்வதும், தமிழ் நாட்டு சூழலில் வாழ்ந்த எனக்கு கொஞ்சம் அன்னியமாக தோன்றுகின்றது.

கதையை சுவாரஸ்யமாக்குவது அடுத்தடுத்து அவனை அலைக்கழிக்கும் அரசியல் விளையாட்டுகளும், உரையாடல்களும். போரடிப்பது அங்கங்கு நீள நீளமாக பேசுவது.

படிக்கலாம். 

1 கருத்து: