23 ஏப்ரல் 2014

வெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி

"உயிர்த் துடிப்பான பாத்திரங்களை படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்பு பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி, பக்கங்களை புரட்டும் போதே கை விரல்களில் தீப்பற்றிக் கொள்கின்றது" என்று பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்ததை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. அப்படிப்பட்ட புத்தகத்தை சர்வசாதரணமாக பல புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தனர். உடனே அதை கைப்பற்றி கடையை காப்பாற்றி விட்டேன்.  படிக்கும் போது எந்த ஆபத்தும் வரவில்லை, என் பெண் கூட அதை வைத்து விளையாடுகின்றாள். படித்த பின்னர் அது கிழக்கு பதிப்பகத்தின் அவதூறு என்று அறிந்து கொண்டேன்.

கொஞ்சம் முன்கதை,

கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தான். அப்போது என்னிடம் இருந்த வசதிக்கு கொஞ்சம் கல்கி புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அதை பார்த்த அவனுக்கு சந்தோஷம். கண்டேன் புத்தகப்புழுவை என்று. எனக்கும் சந்தோஷம். கொஞ்ச நாளைக்குதான். அவன் படிக்கும் புத்தகங்கள் பாலகுமாரனும், ஜெயகாந்தனும். நல்லவேளையாக பாலகுமாரனை அப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்த முதல் ஜெயகாந்தனின் புத்தகமே ரிஷிமூலமாக போனது எனது துரதிர்ஷ்டம். புத்தகத்தை பதுக்கி வைத்து திரும்ப தந்துவிட்டேன். என்னிடம் இருந்து அவன் சில கல்கி புத்தகங்களை வாங்கி சென்றான். திரும்ப தரும் போது "என்னடா உங்க ஆள் (!!) கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா? அவன் வாங்கி சென்ற புத்தகங்களை ஆராய்ச்சி செய்த போது ஒரு அரிய உண்மை புலப்பட்டது. அன்னார் கூறியது சரிதான், ஆனால் அது "ஒற்றை ரோஜா" கதையில் வரும் சம்பவம், பாத்திரமே கதை சொல்லும் படி எழுதப்பட்டது. அதை படித்துவிட்டு குழம்பிய அவனுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்பது தெரியவில்லை. (இதை படிக்கும் துரதிஷ்டம் அவனுக்கு வாய்த்தால் அவனுக்கு : இப்போதாவது அது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்)


அதன் பின் புத்தகங்கள் பற்றி அவனிடம் சிலாகிப்பதை நிறுத்திவிட்டேன். ஜெயகாந்தனும், பாலகுமாரனும் செய்த மாற்றங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. முதல் விஷயம் தன்னை மற்றவர்களை விட ஒரு படி மேலே வைத்துக் கொள்வது, எதிராளியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலாக பல வார்த்தை பேசுவது, முடிந்தால் அவர்கள் பேச வேண்டியதையும் சேர்த்து பேச வேண்டியது, சராசரித்தனமில்லை என்று காட்டி கொள்ள, வம்படியாக விபரீதமாக பேச வேண்டியது. இது எல்லாம் குறைவில்லாமல் இருந்தது. கள் குடித்த குரங்கை தேள் கொட்டியது போல் ஓஷோ வேறு.

ஜெயகாந்தனே கூறுவது போல, சதுரங்கம் போல அதே காய்கள், அதே விதிகள் ஆனால் அதை வைத்து எண்ணிலடங்கா ஆட்டம் ஆடலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த ஒரு ஆட்டம் மட்டுமே போதுமானது. நல்ல வாசகனுக்கு அந்த ஆட்டத்தை விட, ஆடும் முறையும், அதன் செய்தியும்தான் முக்கியம். இவர்கள் முதல் வகை. 

கல்லூரி முடிந்து சென்னையில் திரிந்து, பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த பின், நானும் கல்கியிலிருந்து, சுஜாதா, தி. ஜானகிராமன், சாண்டில்யனுடன் ஐக்கியமான சமயம் அவனை சந்தித்தேன். என்னடா இன்னும் ஜெயகாந்தன் எல்லாம் படிச்சிட்டு இருக்றயா என்று கேட்டேன். "அற்ப மானிடா, என்னை பார்த்தா இந்த கேள்வி" என்ற தோரணையில் ஒரு மந்தகாசத்தை சிந்திவிட்டு, "அதையெல்லாம் தாண்டி இப்போ இந்திரா பார்த்தசாரதிக்கு வந்தாச்சு" என்றான். அதை நினைவில் வைக்காமல் விட்டது என் தப்புதான்.

கிருஷ்ணா கிருஷ்ணாவை படித்து விட்டு அந்த வேகத்தில் இ.பாவின் நாவல்களை வாங்கி வந்தேன். அப்போது அவன் சொன்னது நினைவில் வரவில்லை, வந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். பாலகுமாரன், ஜெயகாந்தன், வரிசையில் போய் சேரவேண்டிய இடம்தான். (இது வரிசை படுத்தல் அல்ல)

எப்போதும் தர்கித்து கொண்டிருக்கும் பாத்திரங்கள், காபி சாப்பிடலாமா என்றால் கூட, "காபி சாப்பிடுவதன் மூலம் உன்னுடைய பிரக்ஞை விழித்து கொண்டிருக்கும் வேளையில் நானும் உடனிருந்தேன் என்று நிரூபிப்பதை என் கடமையாக கருதுகின்றேன், சரி காபி கொண்டுவா" என்று பேசும் பாத்திரங்கள். கொஞ்சம் பேசினால் சரி, சும்மா எதெற்கெடுத்தாலும் பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி சாமி. எல்லாம் அறிவுஜீவி சுய சொறிதல்கள்.

கதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க, புருஷன் கம்பேனில பெரியாளு, ஆனா பொண்டாட்டி பத்தி ஒன்னும் தெரியாது. ஒரு நாளைக்கு பொண்டாட்டிக்கு இந்த வாழ்க்கை போரடிச்சு போய், ஒரு ஓவியரோட வீட்டுக்கு போய் ஒரே ஒரு க்ளாஸ் விஸ்கி குடிச்சிட்டு வந்துடறா. புருஷனுக்கு ஒரே கோபம், வீட்ட விட்டு போன்னு சொல்ல அவளும் அந்த படக்காரன் வீட்டுக்கு போய் படம் வரையறா. புருஷன் ஆபிஸ்ல் கூட இருக்ற பொண்ணோட இருக்கான். படம் வரையறவன், அந்த பொண்ணு கிடைக்கலன்னு குடிச்சு செத்து போய்ட்றான். கதை முடிஞ்சும் போச்சு.

து மாதிரியான கதைகளை வெவ்வேறு வடிவங்களில் படித்திருப்போம். இ.பா தருவது அவரது வெர்ஷன். பாத்திரங்கள் அனைத்தும் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கின்றனர். இது போன்று என்றாவது நான் என் வாழ்க்கையில் ஒரு வார்த்தையாவது பேசியிருப்பேனா என்று எனக்கு மிகவும் வெட்கமாக போய் விட்டது.

ஆசிரியரின் குரல் கதை முழுவதும் ஒலிக்கின்றது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது போன்ற வடிவம், உரையாடல்களின் தொனி.

சிலருக்கு புத்தகம் படிப்பது என்பது அதிலிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள. அதாவது பாடபுத்தகம் போல, அது ஏதாவது போதிக்க வேண்டும். வெளிப்படையாக அறிவுரை கூற வேண்டும். சிலருக்கு புத்தகம் என்பது பல முற்போக்கு கருத்துக்களை அடித்து கூற வேண்டும், அது அவர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ, பிடிக்கின்றதோ இல்லையோ. அவர்கள் அதை தம் சொந்த கருத்துக்கள் போல அடித்து விட உதவும். அவர்களை அறியாமல் அக்கருத்துக்களை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு இது சரியாக இருக்கும்.

புத்தகங்கள் என்பது ஒரு சிறிய திறப்பை உண்டாக்கி, அதன் மூலம் நம்மை சிந்திக்க வைத்து பல புதிய பரிமாணங்களை காட்ட வேண்டும். சுருக்கமாக நமது மூளையை கொஞ்சம் வேலை செய்ய வைக்க வேண்டும், இல்லை என்றால் கொஞ்ச நேரம் மூளையை கழட்டி வைக்கும் படி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.இது இரண்டும் இல்லை. நான் அசோகமித்திரன், சுஜாதா, தி.ஜா கட்சி. இது சரிப்பட்டு வராது.

சுமாரன கதை. அறிவுஜீவித்தனமாக பேசவும், நடிக்கவும் மிகவும் உதவும். 

1 கருத்து:

  1. முதல் பாராவில் செம எள்ளல்!

    //பாத்திரங்கள் அனைத்தும் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கின்றனர்.//

    கஷ்டம்தான்!

    இ.பா கதைகள் எதுவும் நான் படித்ததில்லை. அதே போல இ.சௌ னும்! இ.பா இப்போது வரும் கணையாழியில் கடைசிப் பக்கக் கட்டுரை எழுதி வருகிறார்.


    பதிலளிநீக்கு