10 மார்ச் 2017

போக புத்தகம் - போகன் சங்கர்

போகன் சங்கர் என்ற பெயர் ஃபேஸ்புக்கில்தான் பரிச்சியம். அவ்வப்போது அவர் எழுதும் மூன்று நான்கு வரி கட்டுரைகள் கண்ணில் படும். சான்றோர்கள் கவிதை என்றார்கள். அவ்வப்போது சின்ன சின்ன சம்பவங்கள், கட்டுரைகளையும் எழுதுவார். சின்னஞ்சிறு கதைகள் எனலாம். அவற்றை தொகுத்து போக புத்தகம் என்ற பெயரில் தொகுத்திருக்கின்றார்கள். பெயரை மட்டும் கேட்டால் கொஞ்சம் தயக்கம் இருக்கும். வீட்டம்மா என்ன நினப்பார்களோ, வீட்டிற்கு வருபவர்கள் கண்ணில் பட்டால் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் தோன்றும். ஆனால் நல்ல புத்தகம். 

அட்டை எப்படி இருக்கின்றது என்று சரியாக தெரியவில்லை. ப்ளாஸ்டிக்காக இருக்காது என்று நம்புவோமாக.

நாவலை விட சிறு கதை மிகவும் கடினமானது. இரண்டு மூன்று பக்கங்களில் சில திறப்புகளை உண்டாக்குவது மிகக்கடினம். வடிவம் குறைய குறைய அது கடினமாகிக் கொண்டே செல்லும். ஆனால் அது முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதும் போதுதான். நிஜவாழ்விலிருந்து நாம் பெறும் அனுபவங்களை எழுதும் போது, அதை பெரிய சிறு கதையாக மாற்றுவதுதான் கடினம். உதாரணம் அசோகமித்திரனின் ரிஷ்கா. அதைப் படிப்பவர்கள், அது போன்ற அனுபவத்தை வாழ்வில் ஒருமுறையாவது அடைந்திருப்பார்கள். அது போன்ற சில தருணங்களை, பட்டென்று ஒரு புகைப்படம் போல ஓவியம் போல காட்சிப்படுத்தி மனதில் வைத்துக் கொள்ள பயன்படுவது இந்த குட்டி வடிவம். அதை வளர்த்தி எழுதினால் வளவளவென்றுதான் போகும்.
கதைகள் பல சின்ன சின்ன மனித உணர்வுகளை, புதிய மனிதர்களை நமக்கு காட்டுகின்றது. இப்படியும் மனிதர்கள் இருக்கலாம், இப்படியும் நடக்கலாம் என்று. சில அமானுஷ்யக்கதைகள், இரண்டு மூன்று பாராக்களில் ஒரு மர்மம், அமானுஷ்யம் என்பதை காட்டுவது கடினம். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது.

எனக்கு விதவிதமான மனிதர்களை பற்றி படிப்பது மிகவும் பிடிக்கும். பல மனிதர்களை காண முடிகின்றது. விதவிதமான பெண்களும். பெரும்பாலும் கதைகளில் காண முடிந்த பெண்கள். 

சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் படித்து நான் இப்படி சிரித்ததில்லை. பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு விகடனில் வந்த ஒரு துணுக்கை படித்து விட்டு நான் சிரித்ததைக் கண்டு, "என்னாச்சு மாமி அவனுக்கு" என்று அக்கம் பக்கம் மாமிகள் எல்லாம் கூடிவிட்டனர். அதன் பின் உருண்டு புரண்டு சிரித்தது இதைப்படித்துதான். நடு இரவு,பன்னிரெண்டு மணிக்கு கெக்கெபிக்கே என்று சிரிக்கும் கணவனை காண பீதியாகத்தான் இருந்திருக்கும். அடுத்தநாள் அம்மாவும் பெண்ணும் அப்பாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று பெசிக்கொண்டிருந்தார்கள். நல்ல நகைச்சுவை நூல்கள் என்பது மிக அரிது. ஜெயமோகன் "நகைச்சுவை" என்னும் தலைப்பில் எழுதுவதில் ஒரு சில கட்டுரைகள் அதில் சேரும். அதுகூட அவர் நகைச்சுவை கட்டுரை என்று எழுதுவதைவிட, அவரது அனுபவக்கட்டுரைகளில்தான் அதிக நகைச்சுவையை காணமுடியும். நிஜவாழ்வில் நடக்கும் அபத்தங்கள் கற்பனைக்குள் சிக்காதவை. அதை இதில் காணலாம்.

இந்த குட்டி கதைகளை இதற்கு முன் சுஜாதா முயற்சி செய்திருக்கின்றார். குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் நிறைய கதைகள் வந்துள்ளன. பெரும்பாலும் அனைத்தும் கடைசி பார, வரி திருப்பங்களை உத்தேசித்து எழுதப்பட்டவை. படித்ததும் கிழிக்கவும் கதைதான். இப்புத்தகத்திலும் அது போன்று சில இருக்கின்றன, ஆனால் பெரும்பாலானவை ஒரு நல்ல சிறுகதைக்கான சாத்தியத்தை கொண்டவைகளே. இந்த சிறிய வடிவம் கதை கருக்கான நியாயத்தை செய்திருக்கின்றது.

பலர் அவர்களுக்கு நடந்த கதையை நமக்கு சொல்லும் போது "அதுக்கு என்ன இப்ப" என்று தோன்றும். ஆனால் அதை கொஞ்சம் புனைவு சேர்த்து எழுதும் போது நல்ல கதையாகும். கலவை, ஆசிரியரின் திறமை. இப்புத்தகத்தில் பெரும்பாலும் அவரையே நாயகனாக்கி கதையை சொல்கின்றார். புனைவு எது, உண்மை எது என்று குழப்பிக்கொள்ளாமல், எல்லம் புனைவு அல்லது எல்லாம் உண்மை என்று எண்ணிக் கொண்டு படிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. கதை தரும் அனுபவம் அப்படியே இருக்கும். என்ன, உண்மை என்று நினைத்து படிக்கும் போது கொஞ்சம் கிசுகிசுத்தன்மை வந்து அடுத்த முறை அவரை எங்காவது பார்த்தால், இந்தாள்தான அப்படி பண்ணினது என்று நினைத்து அது தரும் வம்பு சுகத்தை ரசிக்கலாம். முடிந்தால் "சார் இந்த சார்பியல் கோட்பாட்டுக்கும், மீள் ஒருமைத்தன்மைக்கும் என்ன சார் சம்பந்தம்" என்றோ அப்பறம் "அந்த பொண்ணு என்ன சார் ஆச்சு" என்றும் கேட்டு மகிழலாம்

நாகர்கோவில், திருநெல்வேலி வட்டார வழக்கு. அங்கங்கு சுகாவை நினைவு படுத்தினாலும் இரண்டிற்குமான வித்தியாசத்தை காண முடிகின்றது. நல்லவேளை முழுக்க முழுக்க தமிழ் லிபியில் மலையாளக்கதை / கட்டுரை வருமோ என்று நினைத்தேன். இல்லை. நாகர்கோவில் ஏரியா தமிழ்,கிறிஸ்துவ மதமாற்ற கதைகள், விவிலியம், தேவன், சாத்தான் போன்ற வார்த்தைகள் என்பதாலோ என்னவோ ஜெயமோகன் நினைவிற்கு வந்து போகின்றார். 

ஒரு நல்ல வாசிப்பனுவத்தை தரும் புத்தகம்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் என்னை விழுந்து விழுந்து (நிஜமாகவே தலைகாணி மேல்) சிரிக்கவைத்த ஒரு புத்தகத்தை எழுதியதற்கு தனியாக ஒரு நன்றி

2 கருத்துகள்:

  1. இருக்கிறீர்களா? என்ன பெயரில்? நான் ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் (ஆங்கிலத்தில்) என்ற பெயரில் இருக்கிறேன்.

    போகன் தளத்திற்கு முன்பு ரெகுலராகச் சென்று படித்து பிரமித்திருக்கிறேன். அந்தப் பழக்கத்தில் எங்களின் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு கூட அவர் கதை ஒன்று கேட்டிருந்தேன். நேரமின்மையால் தர முடியவில்லை அவரால். அப்போதுதான் புத்தக வெளியீட்டில் அவர் மும்முரமாக இருந்தார்.

    ஆமாம், நீங்கள் கதை எழுதுவீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த பெயரில்தான் Rengasubramani Lakshminarayanan. கதைகள் மாதிரி சிலவற்றை எழுதிப்பார்த்ததுண்டு.

      நீக்கு