16 மார்ச் 2017

டாலர் தேசம் - பா ராகவன்

குமுதம் ரிப்போர்ட்டரில் சுமார் இரண்டு  வருடங்களாக வெளிவந்த தொடர். அமெரிக்காவின் வரலாறு. 

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று பாடப்புத்தகத்தில் படித்த வரலாறு அதோடு நின்று போகின்றது. மார்ட்டின் லூதர் கிங், கருப்பர்களுக்காக போராடினார் என்று படித்திருப்போம். "தாடி வைத்திருப்பது என்பது முகத்திற்கு நாம் செய்யும் மரியாதை" என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னார் என்று யாராவது ஃபேஸ்புக்கில் பரப்பியதை படித்திருப்போம். அனைத்து துண்டு துண்டாக வேறு வேறு காண்டெக்ஸ்டுகளில். அமெரிக்காவின் முழு சரித்திரமும் தெரிந்திருக்குமா என்றால் தெரியாது. அதை தெரிந்து கொள்ள இதைப் படிக்கலாம்.

அமெரிக்கா என்பது இன்று பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. அமெரிக்காவின் பெப்ஸியை எதிர்ப்போம் என்று ஐபோனில் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பொருட்கள் எங்கும் நிறைந்திருக்கின்றது. எப்படி இந்த வளர்ச்சி சாத்தியமானது? உலகில் எது நடந்தாலும் அமெரிக்க சதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு என்று ஆரம்பிக்கின்றார்கள். கூடங்குளத்திலிருந்து, நெடுவாசல், தேவாரம் நியூட்ரினோ வரை அமெரிக்கா வசை பாடப்படுகின்றது. அதே சமயம் அவர்களின் பணமும், தொழில் நுட்பமும் தேவையாக இருக்கின்றது. இதற்கு காரணம் என்ன? உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் இஸ்லாமியர்களில் கொஞ்ச பேரையாவது அமெரிக்க எதிர்ப்பாளர்களாக எளிதில் மாற்ற முடிவதன் காரணம் என்ன? எங்கிருந்து அமெரிக்கர்களுக்கும் பணம் கொட்டுகின்றது? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது.

அமெரிக்காவின் காலனி குடியேற்றங்களில் தொடங்கி, அவர்களின் விடுதலைப் போர்கள் வழியாக அனைத்து அதிபர்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் போர்களை பற்றியே பேசுகின்றது. வியட்னாம், க்யூபா (கூபா என்றுதான் சொல்ல வேண்டுமாம்), ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அவர்கள் நடத்திய யுத்தங்கள் பற்றிதான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பல விஷயங்கள் ஏற்கனவெ இதே ஆசிரியரின் "நிலமெல்லாம் ரத்தம்", "மாயவலை", சதாம் உசேன், ஹிட்லர் புத்தகங்களில் வந்த அதே தகவலகள்.. சில இடங்களில் வார்த்தை அமைப்பு கூட மாறவில்லை. 

அமெரிக்காவை பற்றி மறுபடியும் ஒற்றைப்படையான பார்வையையே தருவதாக தெரிகின்றது. வெளிநாட்டில் அமெரிக்கா ரெளடிதான். உள்ளூரில் எப்படி அந்த வளர்ச்சி சாத்தியமானது. இன்றைய தகவல் தொழில் நுட்ப புரட்சியில் அமெரிக்காவின் முக்கிய பங்கு, அவர்களின் கல்வித்தரம், அவர்களின் இப்போதிருக்கும் வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்புகளின் சிதைவு, ஆன்மீக ஏரியா, போதை கலாச்சாரம், ஹிப்பிகள் போன்ற பல ஏரியாக்கள் தொடப்படவில்லை அல்லது சும்மா கொஞ்சம் எட்டி பார்த்துவிட்டு போயிருக்கின்றார். 

அமெரிக்காவை பற்றி ஒன்றும் தெரியாததற்கு இது எவ்வளவோ பரவாயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக