கிண்டில் கையில் கிடைத்ததும் பல புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. பல புத்தகங்களை படிக்க ஆர்வமிருந்தும் விலை காரணமாக வாங்காமல் விட்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாக படிக்க முடிகின்றது. நன்றாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். நல்ல டீல்.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் வயது நமது சுதந்திர இந்தியாவின் வயதைவிட மிக அதிகம். அடிக்கடி பேப்பரில் வரும் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் என்ற அளவில் மட்டுமே பரிச்சியம். அந்த பிரச்சினையில் அடி வேரில் ஆரம்பித்து அலசும் ஒரு புத்தகம் இது. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக ஒரு வருடம் வந்திருக்கின்றது. பா. ராகவனின் எழுதியிருக்கின்றார்.
இஸ்ரேல் - பால்ஸ்தீன பிரச்சினை இரண்டு நாட்டிற்கான பிரச்சினை என்பதை விட இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதுதான் சரி. சிங்கள - தமிழர் பிரச்சினை போல. யூத - அரேபிய இனத்தவர்களுக்கிடையிலான மோதல் இன்று யூத - இஸ்லாமிய மோதலாக பரிணமித்துள்ளது. எழுதியிருப்பவர் இரண்டு மதத்தை சாராதவர், அதனால் நடுநிலையாக எழுதியிருப்பார் என்று நம்பியிருந்தால் மன்னிக்கவும். இல்லை. வெகு திறமையாக எழுதப்பட்டு, ஒரு வேளை நடுநிலையாக, பக்கச்சார்பில்லாமல் தான் எழுதப் பட்டிருக்கின்றதோ என்ற தவறான தோற்றத்தை தரும் புத்தகம்.
நீண்ட நெடிய வரலாற்றின் ஆரம்பம், ஆபிரஹாமிய மத நம்பிக்கை கதையின் படி, யூதர்களும், அரேபியர்களும் சகோதரர்கள். தேவர்கள் - அசுரர்கள் போல, நம் கதையிலும் அப்படித்தானே, உதாரணம் பிடிக்கவில்லையென்றால் கெளரவ - பாண்டவர்கள், அதுவும் பிடிக்க வில்லையா திமுக அதிமுக. கிறிஸ்துவம் யூதத்திலிருந்து பிரிந்தது, அதன் வெகு காலம் பின்னால் இஸ்லாம் வந்தது. அரேபியர்களை இஸ்லாம் இழுத்தது. அனைவருக்கும் பொதுவான புனித இடம் ஜெருசலேம்.
நமக்கு யூதர்கள் என்றவுடன் நினைவிற்கு வருவது ஹிட்லரின் குரோதம். ஹிட்லர் சுமார் 50,00,000 யூதர்களை கொன்றிருப்பார் என்கின்றார்கள். ஆனால் யூதர்களை கொன்றது ஹிட்லர் மட்டும்தானா? வரலாறு முழுக்க யூதர்களை அனைவரும் விரட்டி அடித்திருக்கின்றனர். ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் அவர்களை அடித்து விரட்டியிருக்கின்றது. கம்யூனிச ரஷ்யா முதல். அனைவரும் வெறுக்கும் அளவிற்கு யூதர்கள் என்ன செய்தார்கள்?
கிறிஸ்துவம் எப்படி யூதமதத்தை பாதித்தது, கிறிஸ்துவம் எப்படி ஒரு நிறுவன மதமானது, சிலுவைப் போர்களை பற்றிய விரிவான தகவல்கள், இஸ்லாமின் தோற்றம், அரசியல். முகம்மது நபிகளின் வாழ்விலிருந்து சில பகுதிகள் என்று வரலாற்றின் பல பக்கங்களை சுவாரஸ்யமாக தந்திருக்கின்றார்.
யூதர்கள் அராபியர்களின் ஆட்சியில்தான் அமைதியாக வாழ்ந்திருக்கின்றனர் என்பது முரண்நகை. சலாவுதீன் என்னும் ஒரு மன்னரின் கதை பிரமாதம்.
யூதர்கள் மீதான விமர்சனமாக வைக்கப்படுவது எங்கிருந்தாலும் அவர்கள் யூதர்களே. அவர்கள் ஒரு குழுவாகவே வாழ்ந்தனர். என்பது போன்றவை. ஆனால் இப்புத்தகத்தை படிக்கும் போது தோன்றுவது, அவர்களின் முன்னேற்றமே அவர்கள் மீதான வெறுப்பிற்கு காரணம். சிலுவைப் போர்களாலும், அனைத்து நாடுகளாலும், ஹிட்லராலும் விடாமல் அடித்து துவைக்கப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் வளர முக்கியக்காரணம் அவர்களின் திறமை. உண்மையில் வியக்க வைக்கின்றது. எங்கு ஓடினாலும், மீண்டு வரும் அந்த திறமை. அடக்கப்பட்டவர்கள், வாய்ப்புகிடைக்காதவர்கள் முன்னேற ஒரே வழி கல்விதான். மூளைதான் வெற்றியை தேடித்தரும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.
தங்களுக்கென ஒரு நாடு என்பதற்காக ஒரு நாட்டின் பெரும்பாலான இடங்களை விலைக்கு வாங்கி மடக்குவது எல்லாம் அதீத கற்பனையோ என்று கூட சந்தேகம் வருகின்றது.
இப்புத்தகம் யூதர்களின் திறமையை கூறினாலும், அதை கூட ஒரு எதிர்மறையாகத்தான் வைக்கின்றது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வன்முறையகளை "வேறு வழியின்றி" அவர்கள் கைக்கொண்டதாக காட்டுகின்றார். மிகத்தெளிவாக பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேலிய எதிர்ப்பை தனது எழுத்து வன்மையால் கலந்துவிட்டிருக்கின்றார். சிறிய உதாரணம், "அங்கு நடந்த கலவரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தவர்கள் கொல்லப்பட்டனர், (சுமார் 15யூதர்களும் கொல்லப்பட்டனர்), இழப்பு இரண்டு பக்கமும், ஆனால் முன்னிறுத்துவது கலவரக்காரர்களின் மரணத்தை, கலவரக்காரர்களால் தாக்கப்பட்டவர்கள் அல்லது கலவரத்தை அடக்க சென்றவர்களின் மரணம் அடைப்புக் குறிக்குள். குழந்தைகளை முன்னால் நடக்கவிட்டு நடத்தும் போராட்டத்தை, பயங்கரவாதம் என்ற பெயரில் அழைக்காமல் போராட்டம் என்ற பெயரில் அழைப்பதே கேவலம். அந்த போராட்டங்களை பற்றிய விவரிப்பில், எங்கும் அந்த குழந்தைகளை கேடயமாக்கி போராடுவதை பற்றிய விமர்சனம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கின்றார். படிப்பவர்களுக்கு அது தவறு என்ற எண்ணம் வராத அளவிற்கு எழுதியிருக்கின்றார். பாராட்டுக்கள்.
இஸ்ரேல் என்ற தேசம் உண்டான பின்பு, தினம் ஒரு தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் கும்பலை அங்கிருப்பவர்கள் போராளிகள் எனலாம், ஆனால் நேர்மையாக பார்த்தால் அது பயங்கரவாதம்தான். கோழைத்தனம் தான். நமது நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களை கண்டும் அதை போராட்டம் என்ற பெயரில் அழைப்பதை எவ்விதத்திலும் ஏற்று கொள்ள்வே முடியாது. ஹாமாஸ் மற்றும் அராஃபத் இயக்கத்தவர்களின் பயங்கரவாத தாக்குதல்கலை ஏதோ போர் சாகச ரேஞ்சிற்கு எழுதிவிட்டு, இஸ்ரேல் பதிலுக்கு நடத்தும் தாக்குதலை பயங்கர தாக்குதல் என்று வர்ணிப்பதற்கு ஏதாவது உள்ளூர் அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகம் வராமல் போகாது. மதவாத தீட்டு கூட காரணமாக இருக்க்கலாம்.
நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர்களின் உரிமை என்று பக்கம் பக்கமாக பேசும் போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை வரும் போதெல்லாம் விரட்டியடித்து வாழ்ந்ததே அந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகள் என்பதை பேசாமல் தவிர்க்க முடியாது. காஷ்மீர் பற்றி ஆசிரியர் ஏதாவது புத்தகம் எழுதியிருந்தால் படிக்காமல் விடுவதே நல்லது.
கடைசியில், யூதர்கள் மீது மரியாதைதான் வருகின்றது. இத்தனை தீவிரவாத தாக்குதலையும் மீறி, அவர்களுக்கு அடிபணியாமல பதிலுக்கு பதில் விரட்டும் அவர்களின் தைரியம் பிடித்துபோனது. அதுமட்டுமல்லாது, அந்த குட்டி தேசத்தை பல வகையிலும் முன்னேற்றியும் இருக்கின்றார்கள். விவசாயத்தில் தன்னிறைவு, இஸ்ரேலிய விவசாய முறை பிரபலமானது, ஆயுத தயாரிப்பு, ராணுவம், மிகப் பெரிய உளவுத்துறை என்று சாதித்து வருகின்றனர். தீவிரவாதிகள் மீதான் இந்தியாவின் நடவெடிக்கையும், இஸ்ரேல் மாதிரி மாற வேண்டும், ஆனால் இஸ்ரேல் தந்து கொண்டிருக்கும் விலையை இந்தியாவால் தர முடியுமா என்பத் சந்தேகமே.
இறுதிப்பகுதிகளில் வரும் அந்த கலர் கண்ணாடி பார்வையை விட்டு விட்டு பார்த்தால், சுவாரஸ்யமான புத்தகம். பல தகவல்களை தரும் புத்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக