21 ஏப்ரல் 2017

மொஸாட் - சொக்கன்


சொக்கன் தமிழ் இலக்கண சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றார். திருக்குறள் முதல் சங்க இலக்கியங்கள் வரை பயின்ற ஒரு நல்ல தமிழறிஞர் என்று சொல்லலாம். தமிழில் எழுதுவதே இன்று கடினமான நிலையில், பிழையின்றி எழுதுவோம் என்று பல நல்ல விஷயங்களை பரப்பி வருகின்றார். பெங்களூரில் அவரது அலுவலகத்தில் வாராவாரம் கம்பராமயாண வாசிப்பை நடத்தி, இப்போது சிலப்பதிகாரம் வாசித்து வருகின்றனர். அவர் எழுதிய ஒரு பரபரப்பான நூல் மொஸாட்.

மொஸாட்டை பற்றி சினிமா, வரலாறு அறிந்தவர்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்ரேலியர்களின் உளவுத்துறை. நெருப்பிற்கு நடுவிலிருக்கும் கற்பூரக்கட்டி போன்ற நாடு இஸ்ரேல். சுற்றி இருப்பவர்கள் எந்த நேரமும் தாக்கும் அபாயம் கொண்ட நாடு. அதனாலேயே அவர்கள் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கின்றது. அதனை பூர்த்தி செய்வது மொஸாட். அவர்களின் உளவுத்துறை. இஸ்ரேலியர்களை பாதுகாக்க உண்டாக்கப்பட்ட அமைப்பு. 

உளவுத்துறையின் வேலை, வரும்முன் தடுப்பது என்பதே பொதுவான நடைமுறை. மொஸாட் தேவைப்பட்டா இறங்கி அடிக்கவும் செய்யும். ம்யூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய வீரர்களை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் மொஸாட் தேடித்தேடி கொன்றது. அந்த கதையுடன் ஆரம்பமாகின்றது புத்தகம். பல பக்கங்களை அந்நிகழ்வே சாப்பிட்ட பின்னர் மெதுவாக மொஸாட்டின் சரித்திரத்திற்குள் வருகின்றது.

மொஸாட்டின் பல சாகசங்கள் பக்கங்களை நிரப்பியுள்ளதால் சுவாரஸ்யமான புத்தகமாகவே இருக்கின்றது. எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை. முக்கியமான ஒன்று சரித்திரத்தை சொல்கின்றேன் என்று ஒரு பக்கச்சார்புடன் எதுவும் எழுதப்படவில்லை. 

சொக்கன், கே.ஜி.பி என்று ரஷ்ய உளவுத்துறையை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றா. இதோடு ஒப்பிடுகையில் அது கொஞ்சம் வெண் பொங்கல், இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள் வகையறா. படித்தவுடன் தூக்கம் வந்துவிடும். இப்புத்தகம் உங்களை தூங்க விடாது, வேகமாக படிக்க வைக்கும். 

1 கருத்து: