பிரபலமன முகம். சும்மா ஒரு மூக்கையும் அதற்கு கீழே ஒரு பெரிய மீசையையும் வரைந்தால் போதும், அட இவரா என்று அடையாளம் கண்டுவிடலாம். பல திரைப்பட கருக்களுக்கு சொந்தக்காரர். வீரப்பன், சே வீரப்பர் என்று சொல்ல வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார். பாவம், அன்பழகருக்கு கூட கிடைக்காத பெருமை வீரப்பருக்கு கிடைத்தது. இருக்கட்டும் நாம் வீரப்பன் என்றே அழைப்போம். நமக்கு ஓட்டு பிச்சை தேவையா என்ன?
சுமார் 169 மனிதர்கள், ஏராளமான யானைகள், கணக்கில்லாத சந்தன மரங்களை அழித்த வீரப்பன் வேட்டையைப் பற்றி, வீரப்பனை ஒருவழியாக சுட்டு கொன்ற படைக்கு தலைவராக இருந்த விஜயக்குமார் எழுதிய புத்தகம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஒரு சாகசநாவலுக்கு இணையாக இருக்கின்றது. என்ன, முடிவு நமக்கு ஏற்கனவே தெரிந்தது. அதேசமயம் இதில் வீரப்பன்தான் சாகச நாயகனாக இருக்கின்றான். எல்லா ஆட்டங்களையும் தொடர்ந்து ஜெயித்து கொண்டே வந்திருக்கும் ஒருவனாகத்தான் இருந்திருக்கின்றான். கண் பார்வை கோளாறு மட்டுமிருந்திராவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம், ஆனாலும் இன்றைய டெக்னாலஜி சாத்தியங்களுக்கு தாக்கு பிடித்திக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
விஜயக்குமாரை அதிரடிப்படைக்கு பதவியேற்க ஜெயலலிதா சொல்வதில் ஆரம்பிக்கும் கதை, நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக போய் வருகின்றது. நல்ல யுக்தி. இறுதிப்பகுதிகள் செம பரபரப்பு.
வீரப்பனை தமிழர்களை காக்கவந்தவனாகவும், வனத்தை காக்கும் ஒருவனாகவும் பின்னாளில் கதை கட்டப்பட்டது. என்ன கதை விட்டாலும், அடிப்படையில் அவன் திருடன், கொலைகாரன். அவ்வளவே. தமிழ் முகமூடியெல்லாம் பின்னளில் தேவைக்காக போட்ட வேஷங்கள் என்பதற்கு மேல் மயிரளவிற்கும் முக்கியத்துவமோ, நம்பகத்தன்மையோ கிடையாது.
வீரன் என்பதும் சும்மா காதுல பூ, வீரன் எப்பொழுதும் நேருக்கு நேர் நின்றே மோதுவான், ஆயுதமேந்தாமல் வா, சரணடைகின்றேன் என்று கூறி கழுத்தை அறுக்கும் ஒருவனை படு கோழை என்றுதான் சொல்ல வேண்டும். வீரப்பனின் திறமை என்பது அவனின் அறிவு, காட்டை பற்றிய அறிவு. காடே அவனை பாதுகாத்தது. அடர்ந்த காட்டிற்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்துவது என்பது மிகக் கடினமான செயல். அதை நமது காவல்துறை சாதித்திருக்கின்றது, பல பலிகளை கொடுத்து. கண்ணிவெடிதாக்குதல், நம்பவைத்து கொல்லுதல் என்று அவனிடம் மாட்டி உயிர் விட்டவர்கள் கதைதான் பெரும்பாலும்.
முழுக்க முழுக்க காவல்துறை நோக்கில் எழுதப்பட்டது என்பதால், அதிரடிப்படையினரின் அத்து மீறல்கள் பற்றியெல்லாம் ஏதுமில்லை. "அவையெதுவும் நிரூபிக்கப்படவில்லை" என்று ஒருவரியில் கடந்து செல்கின்றார். அது உண்மையென்றெல்லாம் நம்பமுடியாது. அத்துமீறல்கள் கண்டிப்பாக நடந்திருக்கும். ஆனால் அது வீரப்பனை நியாயப்படுத்தாது.
காவல்துறையின் நடைமுறை, பொதுவான அவர்களின் திட்டமிடல்கள் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றது. Fridenly Fire கேட்க ஜாலியாக் இருந்தாலும், இதற்கு அர்த்தம் தவறுதலாக தமக்குள்ளேயே சுட்டுக் கொள்ளுதல். இரண்டு மாநில படைகளின் தேடலில இதற்கெல்லாம் சாத்தியங்கள் மிக அதிகம். இது போன்ற குட்டி குட்டி தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
வீரப்பனின் தேடுதலில் நடந்த பல தாக்குதல்களில் வெற்றியடைந்து வீரப்பன்தான். காரணம், வலையல் விரித்து வைத்துவிட்டு காத்திருப்பவன் அவன். ஆனால் அவன் வலையில் எளிதில் சிக்குவதில்லை. பல முறை நோட்டம் பார்த்து, ஆழம் பார்த்து இறங்குவதால் தப்பித்து கொண்டே இருந்திருக்கின்றான். அந்த வசதி காவல்துறைக்கு கிடையாது, ஒவ்வொரு தகவலும் முக்கியம். எதையும் அலட்சியப்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே பல உயிரை இழந்திருக்கின்றனர். வால்டர் தேவாரத்தை பற்றி பல தகவல்கள். மூன்று விநாடிகள் மட்டுமே கண்ணில் படக்கூடிய இலக்கையும் குறிதவறாமல் சுடும் திறமைக்காரர், வீரப்பன் சரணடைந்தாலும் சொந்த துப்பாக்கியால் சுட்டு கொல்வேன் என்று அறிவித்து பீதியை கிளப்பியவர். அவரது நேரம், வளர்ப்பு மகன் திருமணத்தில் அவர் நடந்து வந்ததுதான் நினைவில் வந்து தொலைக்கின்றது.
விஜயக்குமாரின் சொந்த வாழ்க்கைப்பற்றி சில பக்கங்கள். அவர்து காஷ்மீர் அனுபவங்கள். பக்திமான். இறுதியாக வீரப்பனின் கண் கோளாறு காரணமாகவே வந்து மாட்டியிருக்கின்றான். ஆனாலும் அதை சரியாக பயன்படுத்தி அவனை வதம் செய்தது சாதனைதான். அதை பற்றிய விவரிப்புகள் ஒரு நல்ல சினிமா.
விஜயக்குமாருக்கும் இந்த புத்தகத்தை எழுத ஒரு நல்ல எடிட்டரின் உதவி இருந்திருக்க வேண்டும், கன கச்சிதமாக இருக்கின்றது.
கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாக படிக்கலாம்
பதிலளிநீக்கு//ஆனால் அது வீரப்பனை நியாயப்படுத்தாது. //
காவல்துறையையும் நியாயப்படுத்தாது!
இந்தப் புத்தகம் வெளியானதும் வீரப்பன் மனைவி சில ஆட்சேபங்கள் சொல்லியிருந்தார். கொஞ்சம் விளம்பரத்துக்கும் உதவியிருக்கும்! படிக்க வேண்டும் என்று லிஸ்ட்டில் வைத்திருக்கும் புத்தகம்தான்.