05 ஏப்ரல் 2017

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

சரித்திரம் எப்போதும் சுவாரஸ்யமானது, அதை முடிந்தவரை கடினமாக்குவது அதை எழுதும் ஆசிரியர்களின் திறமையில் இருக்கின்றது. நமது பாட நூல் ஆசிரியர்கள் அந்த வகையில் மிகவும் கை தேர்ந்தவர்கள். வினாத்தாள் தயாரிப்பவர்கள் சரித்திரத்தை மாணவர்கள் எண்களாக புரிந்து கொண்டால் போதும் என்றே நினைக்கின்றார்கள். வருடங்களை சரியாக எழுதினால் போதும்.  சரித்திரத்தை படு சுவாரஸ்யமாக எழுத முடியும் என்று தமிழ் தொடர்கதை ஆசிரியர்கள்தான் முதலில் கண்டு கொண்டார்கள். ஆனால் பிரச்சினை அதிலிருக்கும் சரித்திரம்தான். முழுக்க முழுக்க சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக, கொஞ்சம் நடுநிலையோடு தர முடியும் என்று காட்டியது மதனின் இந்த தொடர்தான். இதன்  பின்னரே பல தொடர்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.

தைமூரின் படையெடுப்புடன் ஆரம்பித்து கடைசி மன்னர் நாடுகடத்தப்படுவது வரை அனைவரையும் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வைக்கின்றது.  முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பே இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி இங்கு ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் ஒரு காதல் என்பது சோகமான விஷயம். முகம்மது கோரியின் படையெடுப்பிற்கு பின்னரே இங்கு அவர்களின் ஆட்சி என்பது வலுவாக காலூன்றியிருக்கின்றது. பிருத்திவிராஜனின் மனைவி சம்யுக்தை, அவர்களின் காதலை ஏற்று கொள்ளாத சம்யுக்தையின் அப்பா, காலை வாரிவிட பிருத்திவிராஜன் தோல்வி அடைகின்றான். அதுவே இங்கு அன்னியர் காலூன்ற அனுமதித்திருக்கின்றது. ராஜபுத்திர மன்னர்களின் ஒற்றுமையில்லாத தன்மையின் விளைவு பல நூறு வருடங்களுக்கு அன்னிய ஆட்சி.

முகம்மது கோரிக்கு முன்பு வந்த கஜினியின் படையெடுப்பை விரிவாக பேசுகின்றது. தோல்வியடைந்தவனுக்கு உதாரணமாக சொல்லப்படும் கஜினியின் அனைத்து படையெடுப்புமே வெற்றி என்பதுதான் உண்மை என்கிறார். சோமநாதர் ஆலய உடைப்பு போன்ற சரித்திர சம்பவங்கள் இன்று மதவாத பேச்சாகிவிட்டது. 

ஏகப்பட்ட குட்டி குட்டி ரசமான தகவல்கள் புத்தகத்தை சிறப்பாக்குகின்றது. அடிமைகள் வம்சத்தில் ஒரு பெண் ஆட்சி புரிந்தது (ரஸியா) மிக ஆச்சர்யமானது. துக்ளக்கிற்கு ஒரு சூஃபி கொடுத்த சாபம், விடாமல் துரத்தப்பட்ட்ட ஹுமாயூனின் மசக்கை மனைவிக்கு பாலைவனத்தில் கிடைத்த மாதுளை, பாபர் தன்னுயிரை இறைவனிடம் தந்து மகனின் உயிரை காத்தது போன்றவையெல்லாம் நம் சரித்திரப்பாடங்கள் சொல்லிதருவதில்லை.

நடுநிலைமை என்ற பெயரில் வழக்கமாகச் செய்யப்படும் ஒற்றைப்படைத்தன்மை இதிலில்லை. முடிந்தவரை அனைத்து பக்கங்களையும் காட்டியுள்ளார். இஸ்லாமிய மன்னர்கள் கோவில்களை மட்டுமல்ல மசூதிகளையும் இடித்துள்ளனர் என்ற தகவலும் கிடைக்கின்றது. ஒரு வேளை ஷியா,ஸுன்னி பிரச்சினையோ என்னவோ. 

நல்ல புத்தகம். சுவாரஸ்யமான புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக