தலித் மக்களை பற்றிய் நாவல் என்று முன்னுரை கூறுகின்றது. சரிதான், தாழ்த்தப்பட்ட மக்களை பாத்திரங்களாக கொண்ட நாவல். அவர்களின் வாழ்வை பற்றி கூறியிருக்கின்றதா என்றால் ஓரளவிற்கு என்று கூறலாம். ஒவ்வொரு அந்தியாயமும் தனிக் கதை. சில பாத்திரங்கள் பல கதைகளில் எட்டிப்பார்க்கின்றார்கள். கொங்குப்பகுதி வட்டார வழக்கில் படிக்கும் முதல் நாவல். தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, நாஞ்சில் என்று பல வட்டார வழக்கை படித்தாலும் இது கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றது படிக்க. காரணம், பல வார்த்தைகள் முடியாமலே அந்தரத்தில் தொங்குவது போன்ற தொற்றம், மேலும் படிக்கும் போது சத்யராஜ், கோவை சரளா, மணிவண்ணன் போன்றவர்களின் குரல் கேட்பது போன்ற பிரமை வேறு.
கிராமத்தில் தலித் மக்களுக்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றியே கதை. மேய்ச்சலில் விடுபட்ட ஆட்டை தேடிப் போகும் தந்தை மகன்,அவர்களின் உரையாடல் என்று அம்மக்களின் பின் புலத்தை காட்டுகின்றார். அதன் பின்னால் சில பல பகுதிகள் பரவாயில்லை என்று இருக்கின்றது. ஆனால் பிறகு வெறும் ஆண் பெண் உறவில் சென்று அமர்கின்றது. மொத்த நாவலும் அதை பற்றி பேசுவது போன்ற தோற்றத்தை காட்டுகின்றது.
சோ தர்மன், பூமணி போன்றோர் எழுதிய நாவலகளுடன் இதை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. எவ்வித சித்தரிப்பும் இல்லாத மிகுந்த மேலோட்டமான அதை நகர்வு, ஆழமில்லாத பாத்திரங்கள் என்றே பெரும்பாலன பகுதிகள் போகின்றது. தலித் மக்களை பற்றிய நாவல் என்று சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை.
கொங்கு பகுதி மக்களை பற்றி கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொள்ளவும், அந்த வழக்கை பழகவும் படிக்கலாம். அதைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமும் இல்லாத நாவல்.
இதன் பின் இவரது சில நாவல்களையும் படித்தேன்
மரப்பல்லி, மங்கலத்து தேவதைகள், சாந்தாமணியு இன்ன பிற காதல்களும், சயனம், சகுந்தலா வந்தாள் - அனைத்து கதைகளும் காதல், கள்ளக்காதல், காமத்தை அடிப்படையாக கொண்டவை. ஆண் பெண் உறவு மட்டுமே அடிப்படை. நாவல்கள் முழுக்க யாராவது யாருடனாவது படுக்க அலைந்து கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் அனைவரும் ஆண்களை வளைக்க காத்து கொண்டிருக்கின்றார்கள், ஆண்கள் அனைவரும் பெண்களை சாய்ப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். அலுப்பு தட்டும் கதைகள். அனைத்தையும் ஒரே நாளிலில் படித்துவிடலாம். ஒரே மாதிரியான சித்தரிப்புகள், பாத்திரங்கள். சகுந்தலா வந்தாள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு அவல நகைச்சுவை லிஸ்டில் சேர்க்கலாம். கடைகளில் பின்னடித்து தொங்கவிடப்பட்டிருக்கும் கதைகளின் நாகரீக வடிவம். அனைத்தும் கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக