02 பிப்ரவரி 2021

கடன் (அவர் வாங்காதது)

 ஐயப்பன் காலையில் எழுந்து அவர் வீட்டில் காப்பி குடித்துவிட்டு, வழக்கம் போல நமச்சிவாயத்துடன் டீ குடிக்க நமச்சிவாயம் வீட்டிற்கு வந்தார். வழக்கத்திற்கு மாறாக நமச்சிவாயமே வெளியில் நின்று வரவேற்றார்.


"யே, என்னப்பா இது, வழக்கமா நா வரும்போதுதான் பல்ல விளக்கிட்டு இருப்ப, இப்ப என்னடான்னா ரெடியா நிக்கிற"


"ஐயப்பா உனக்கோசோரம் தான் காத்திட்டு இருக்கேன், நம்ம சொசைட்டி பேங்கல இருந்து வந்திருக்காய்ங்க ஏதோ கடன் விஷயமாம்"


"உனக்கு எதுக்குடா கடன், உங்கய்யா  கட்டி விட்ட கடை வாடகை வருது, உங்கண்ணன் வேற உன் பங்க பிரிச்சி கொடுத்துட்டாரு அதுல வேற கொஞ்சம் வருது"


"யோவ் நீ வேற கடுப்பு மயிர ஏத்தாத, அவனுங்க வந்திருக்கிறது கடன் கொடுக்க இல்ல. கொடுத்த கடன வசூல் பண்ண"


ஐயப்பன் மாறிய குரலில், "பாத்தியா ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லாம போய் கடன் எல்லாம் வாங்கியிருக்க. சொன்னா நான் என்ன ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேலயா கேட்டிருப்பேன்"


நமச்சிவாயம் கோபம் முற்றிய குரலில்,"டேய் வெண்ணை. முழுசா கேட்டுட்டு பாட்டுப்படி. நான் எந்த கடன் மயிரும் வாங்கல, இப்ப வந்து கடன கட்டுங்கறாய்ங்க. கேட்டா நீதான் உன் கடைய வச்சி வாங்குனங்க்ராய்ங்க"


ஐயப்பன் சுதாரித்துக் கொண்டு "வா உள்ள போலாம்" என்று கூறிவிட்டு உள்ளே வந்தார்.


உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் ஐயப்பன் தாழ்ந்த குரலில் பேசிவிட்டு வந்தார். ஐயப்பன் “குமார்” என்றார். நமச்சிவாயம் புரிந்து கொண்டு, குமாரை போனில் அழைத்தார். "தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றார்னு வருது"


ஐயப்பன் தலையை சொறிந்தார். 




"யோவ் பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்கான்யா, உங்கண்ணனுக்கு போன போட்டு கேளு"


"அண்ணே, உன் பையன் எங்க"


"என்ன, உன் கடைய வச்சி லோன் வாங்கிட்டானா"


"எப்படிண்ணே தெரியும், நீயும் சேர்ந்துதான் செஞ்சியா"


"உனக்கு கடை எனக்கு வீடு.  இங்கயும் ரெண்டு பேர் வந்திருக்காங்கடா"


"அப்படியா, இரு இந்த ரெண்டு பேரை அங்க கூட்டிட்டு வர்றேன்"


அனைவரும் அவர்கள் அண்ணன் வீட்டிற்கு சென்றனர்.


"அய்யா, என்ன செய்ய போறீங்க, எங்க பேங்க் மேலயும் தப்பிருக்கு. அசல மட்டுமாவது கொடுத்துடுங்க. நீங்க நாப்பது, உங்க தம்பி பத்து. மொத்தம் ஐம்பது கொடுத்துடுங்க போதும், இப்பவே இத முடிச்சி விட்டுட்டு போறோம். இல்ல கோர்ட்டுக்கு போறொம்"


"அண்ணே குமார் எங்க, போன் போகல"


"நாய் எங்க போகும், இங்கதான் உள்ள உக்காந்திருக்கு"


"அவன் எங்க அத்தாச்சி"


அவர் உள்ளே கை காட்ட, குமார் கட்டிலில் குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்தான். "எழுந்துர்றா, இங்க என்ன போய்ட்டு இருக்கு, தூங்கம் வருதாடா உனக்கு"


"வாங்க சின்னப்பா, இந்தப்பக்கம் வந்திருக்கீங்க.ஆச்சர்யமா இருக்கு"


"வெளியவா"


"வரலாம் வரலாம், ஐயப்பன் இருக்காருல்ல.  வர்றேன் பிறகு"


"என் கடை பத்திரத்த எப்படிடா கொண்டு வச்ச"


"உன் கடை பத்திரமா?"


"ஆமாடா, சொத்து பிரிக்கும் போது எனக்கு கொடுத்தது"


"அந்த கடையெல்லாம் உனக்கா கொடுத்திருக்கு, நல்லா பாரு சித்தப்பா"


"டேய் வாடகையெல்லாம் நான்தான்டா வாங்குறேன்"


"அப்டியா,அது நம்ம தாத்த கட்டினதுதானன்னு அதையும், இந்த வீட்டையும் வச்சி கடன் வாங்கினேன். அதுக்கு என்னவோ கோபப்படுறாரு. தாத்தா சொத்து பேரனுக்குதான "


"இருந்தாலும் பங்கு பிரிச்சப்புறம் எப்படிட்டா என் கடைய வைக்கலாம், தப்பில்ல"


"என்ன சித்தப்பா, திரும்ப திரும்ப பங்கு பங்குன்னு பேசுற, நாம எல்லாம் ஒரே ரத்தம் சித்தப்பா, நீ எங்கப்பா கூட பிறந்த பிறப்பு இல்லையா. எனக்கு அந்த உரிமையில்லையா. உன் பையன் எங்கயோ அமெரிக்கால இருக்கான். நீ கூப்டா ஓடி வர நான்தான இருக்கேன்"


உள்ளே போன நமச்சிவாயம் இன்னமும் திரும்பி வராததை கண்டு கவலையுடன் இருந்த ஐயப்பன், வெளியே வந்த நமச்சிவாயத்தின் கண்களில் இருந்த நீரை பார்த்து தெளிந்தார். இனி நமச்சிவாயத்தை காப்பாற்றுவது அவர் பொறுப்பு என்று புரிந்தது. 


ஐயப்பன் எல்லா பேப்பர்களையும் படித்துவிட்டு சொன்னார்,"நாப்பது தர்றோம். இல்ல எங்க கையெழுத்த நீங்களே போட்டு, எங்க பையன் பேர்ல லோன் எடுத்து எங்கள மிரட்டுறீங்கன்னு போலிஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்குறோம். என்ன சொல்றீங்க" 


வந்தவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. யார் யாருக்கோ பேசி. "சரி சார், கொடுங்க" என்றார்கள். ஐயப்பன், "உங்க பேங்க் பேர்ல செக்காதான் கொடுப்போம்" என்றார்.


"சரி சார் கொடுங்க"


நமச்சிவாயத்தின் அண்ணன், செக்கை எடுத்து கையெழுத்து போட போனவர் கை நடுங்கி கொண்டிருந்தது. "டேய் நாயே வா இங்க" என்று கத்தினார். பதிலும் இல்லை.


"வந்து இந்த செக்ல என் கையெழுத்த போட்டு தொலை என்றார்"


மெதுவாக வந்த குமார் செக்கில் விறு விறுவென்று கையெழுத்தைப் போட்டு விட்டு பெருமையாக அனைவரையும் பார்த்தான். "இது ஒரு சாதரண விஷயம் இதுக்கு போய் இவ்வளவு பிரச்சினை"


நமச்சிவாயம் "பய கெட்டிக்காரனப்பா" என்றார்


ஐயப்பன் நமச்சிவாயத்தை பார்த்து தலையில் அடித்து கொண்டார்.


பத்து வருடம் கழித்து.


ஐயப்பன் நமச்சிவாயத்தின் வீட்டிற்குள் நுழைந்த போது, குமார் வெளியே போய்க் கொண்டிருந்தான்.


ஐயப்பன் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொண்டு, "ஒன்னுமில்ல பெரிய வீட்ட விக்கனுமாம். என் ஆதார் கார்டு எல்லாம் வாங்கிட்டு போறான்."


கொஞ்ச நேரம் விட்டு "வெறும் ஆதார வச்சி ஒன்னும் பண்ண முடியாதுல்ல." என்று கேட்டார் நமச்சிவாயம்.


கஷ்டப்பட்டு வரவழைத்த அமைதியான குரலில் "உன் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாது" என்றார் ஐயப்பன்.


இரண்டு மாதம் கழித்து


நமச்சிவாயம் கையில் தபால்காரர் தந்த கடிதத்தை வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். 


"சுத்த நச்சு பிடிச்ச மழையப்பா" என்றபடி உள்ளே வந்தவர் நமச்சிவாயத்தின் நண்பர் ஐயப்பன். "என்னப்பா லெட்டர்".


"இந்தா நீயே படிச்சி என்ன எழவுன்னு சொல்லு, எனக்கு ஒன்னும் புரியல."


ஐயப்பன் படித்து முடித்துவிட்டு, "ஒன்னுமில்லப்பா இன்னைக்கி இருந்து நீ நமச்சிவாயம் இல்ல, சின்னப்பா"

1 கருத்து: