பெரிது பெரிதாக இரண்டு புத்தகங்களை படித்த களைப்பில் குட்டியாக படிக்கலாம் என்று தேடிய போது கிடைத்தது அப்புசாமியும் 1001 இரவுகளும். படு பயங்கர தீவிர வீர இலக்கியவாதிகள் கொஞ்சம் எட்ட நின்று பார்த்துவிட்டு விலகுங்கள், இல்லாவிடில் கெட்ட கனவுகள் வரலாம்.
அப்புசாமி சீதாப்பாட்டியை, குமுதத்தில் நடுப்பக்கத்தை தவிர உள்ளடக்கத்தையும் (முன்பு அது போன்ற ஒரு வஸ்து குமுதம், விகடனில் இருந்தது, இதை படித்துவிட்டு இப்போது போய் தேடி ஏமாந்து என்னை திட்ட வேண்டாம்) படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். நான் குமுதத்தில் படித்ததில்லை, எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. அப்போது மிகவும் பிடித்து ரசித்து படித்த வரிசை. அந்த பழைய நினைவில் வாங்கியிருந்தேன். இப்போது பிடிக்குமோ பிடிக்காதோ என்று நினைத்து படித்து பார்க்கலாமே என்று வாங்கியது. மோசமில்லை. படிக்க முடிந்தது.
பாக்கியம் ராமசாமி, ஜ.ரா.சுந்தரேசன். குமுதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். நகைச்சுவை இலாகா. பல நகைச்சுவை கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அடிக்கடி நான் ரா.கி.ரவுடன் குழப்பிக் கொள்வேன். இவருடைய நகைச்சுவையல்லாத கதைகளில் கொஞ்சம் புஷ்பா தங்கதுரை எட்டி பார்ப்பார். விகடனில் கொஞ்ச நாள் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார், ஓரளவிற்கு சுமாராக இருந்தது.