12 ஜூலை 2020

பாம்பு - சிறுகதை

சும்மா, டச் விட்டு போகக்கூடது என்பதற்கு எழுதி பார்த்தது. 

ராஜு வாட்ஸாப்பில் வந்த வடிவேலு மீம்ஸை பார்த்துவிட்டு மோடியை திட்டிக் கொண்டிருந்த பொழுது, கதவை திறந்து கொண்டு வினோத் வந்தான். 

"வாட்ஸாப்ல வர குப்பைய படிக்கிறத நிறுத்து, அப்பதான் மூளை வளரும், வா வேலை வந்திருக்கு"

"என்ன அண்ணா எங்க தீப்பிடிச்சிருக்கு"

"ஏண்டா, தீப்பிடிச்சா மட்டும்தான் கூப்பிடுவாங்கன்னு உனக்கு எவன் சொன்னது. எல்லா ஆபத்துக்கும் நம்மளதான் கூப்பிடுவாங்க. போலீஸிக்கு அப்புறம்  நாமதான்,வா வா" 

"அண்ண எதுல போறது"

"ஜீப்ப எடு"

"எங்க போறோம்"

"அங்க புது அப்பார்ட்மென்ட் இருக்குல்ல, அங்க ஏதோ பாம்பு வந்திருச்சாம் அதான் பயந்து போய் போன் பண்ணுனாங்க"

ராஜு கொஞ்சம் மிரண்டது தெரிந்தது. "நாமதான் பிடிக்கனுமா, ஏன ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இருந்து வரமாட்டாங்களா?"

"அவங்க வர முன்னாடி இது ஒரு ரெண்டு பேர போட்டா என்ன பண்றது, இதுவும் நம்ம வேலைதான் வா."

அந்த அபார்ட்மென்ட் முழுவதும் கூட்டம், எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தனர், வயதான ஒருவர், "சார் வாங்க, எல்லாம் உயிரை கையில் பிடிச்சிட்டு நிக்கறோம், சாவகாசமா வர்றீங்க" என்றார்.
வினோத் பதில் பேசாமல் அவரை தவிர்த்து விட்டு, அங்கிருந்த கல்லூரி இளைஞனிடம் கேட்டான், "எந்த வீட்ல இருக்கு?". 

"வீட்ல இல்ல சார், மொட்ட மாடியில், டேங்க் அடியில."

"காட்டுங்க" என்றவுடன் அவன் அழைத்துக் கொண்டு சென்றான்.  யாரும் வர வேண்டாம் என்று, மற்றவர்களை நிறுத்தி விட்டு சென்றனர். 

மொட்டை மாடியில் குறுக்கு மறுக்காக போன கேபிள் வயர்கள், காய்ந்து கொண்டிருந்த ஜட்டி, பனியன்களை விலக்கி கொண்டு மூலையிலிருந்த தண்ணீர் தொட்டி அருகில் சென்றார்கள். 

இவ்வளவு உயரத்துல எப்படி வந்தது, என்று யோசித்தப்படி சுற்று முற்றும் பார்த்தார்கள், ராஜூ, "அண்ணே அங்க பாருங்க" என்றான். மாடியின் மறு புரத்தில் ஒரு பெரிய பாதாம் மரம், அதன் கிளைகள் மாடியில் உரசிக் கொண்டிருந்தது.  "அங்க பாருங்க, ஏதோ காக்கா கூடு கட்டியிருக்கு, முட்டைக்கி வந்தா இருக்கும்"

"அங்க தண்ணி தொட்டிக்கு கீழே பாருங்க" என்று கூறி விட்டு அந்த இளைஞன் விலகிக் கொண்டான்.

ராஜூவும், வினோத்தும் உற்று பார்த்தார்கள். எந்த வகை பாம்பு என்று பிடி படவில்லை. "டேய் அந்த டார்ச்ச எடு" என்றான் வினோத், ஐந்து செல் பேட்டரி, அடித்து பார்த்தார்கள், ஒளி பட்டதும் மெதுவாக அசைந்தது.
"டேய் நல்ல பாம்புடா" என்றதுமே ராஜூ ஒரடி பின்னால் நகர்ந்தான். 
"முதல்ல அத அங்க இருந்து வெளியில கொண்டு வரணும், பிடிக்க வசதியில்ல"

"அண்ணே, கோலாவுல மிண்டோஸ் போட்டு ஊத்தி விடலாம்"

"முதல்ல வாட்ஸப்புல கண்டதை பாக்குறத நிப்பாட்டு, அதுகூட எலி வளைக்குள்ள இருந்தாந்தாத்தான்"

அந்த இளைஞனிடம், "கீழ யார் வீட்லயாவது கொஞ்சம் வெது வெதுப்பா தண்ணி கேளுங்க" என்றான் வினோத். 

சிறுது நேரத்தில் கிடைத்த வெந்நீரை பாம்பின் பின்னால் ஊற்றி விட, அது மெதுவாக அசைந்தது. ஒரு பெரிய குச்சியை வத்து தட்ட அது மெதுவாக நகர்ந்துவந்து, அங்கிருந்த ஒரு துளசி மாடம் பின்னால் மறைந்து கொண்டது.

"அண்ணே நல்ல விளைஞ்ச பாம்புன்னே, 4,5 அடி இருக்கும் போல, நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம், எப்படிண்ணே கொல்றது". 

"டேய், நாம அடிச்சி கொன்னா, வேலைதான் போகும். எவனாவது வீடியோ எடுத்து போடுவான், அத பாத்து 4 பேர் வனவிலங்கு ஆர்வலர்ன்னு வருவான். பிடிச்சிதான் வெளியில விடனும்."

ராஜூ கொஞ்சம் மலர்ந்தான்.

நுனியில் குறடு மாதிரி கவ்வும் அமைப்பிருந்து ஸ்னேக் கேட்சரை ராஜூவிடம் தந்தான், எப்படி பயன்படுத்துவது என்றும் சொல்லி தந்தான். இளைஞன் "என்ன சார் செல்பி ஸ்டிக் மாதிரி இருக்கு" என்றான்.

"மெதுவா போய், கழுத்துக்கு கீழே அமுக்கி பிடிச்சிக்க, நான் வாலை பிடிச்சி வளையத்துல மாட்டினப்புறம் அப்படியே எடுத்துட்டு வா, சாக்குல போட்டுடலாம்."

ராஜூவின் கை நடுங்க ஆரம்பித்தது. "டேய் பிடிப்பியா", பலகீனமாக தலையாட்டி விட்டு நகர்ந்தான். மாடியின் மற்றொரு பக்கம் சிறுவர்களுடன் ஏகப்பட்ட கூட்டம். 

வினோத் அந்த இளைஞனிடம் திரும்பி, "அவங்கள கீழ போக சொல்லுங்க, தப்பிச்சா அந்தப்பக்கம்தான் போகும்". போய் சொன்னவுடன் கூட்டம் பதறி ஓடியது.

திரும்பி வந்த இளைஞன், ராஜூ ஒரு ஸ்னேக் கேட்சரும், வினோத்திடம் வளைவு கம்பியும்  இருப்பதை கண்டு, பதற்றமடைந்தான். சுற்று முற்றும் பார்த்து, அவர்கள் கொண்டுவந்த இன்னரு கவண் குச்சியை எடுத்து வைத்து கொண்டான்.

ராஜூ, முன்னே சென்று அதை கழுத்தில் வைக்கப் போகும் சமயம், கால் தொட்டியை தட்ட, பயத்தில் குச்சி பாம்பின் அருகில் போய் குத்தியது. மிரண்ட பாம்பு, சீறி எழுந்தது. 

வினோத், பட்டென்று ராஜூவை பின்னால் இழுத்தான். இரண்டடிக்கு படம் எடுத்து நின்றது. முன்னால் ராஜூவும், வினோத்தும். பின்னால் அந்த இளைஞன்.  வினோத் தன் கையிலிருக்கும் வளைவு கம்பியை அதன் முன் அசைக்க அதுவும் அசைந்தது. சைகையில் இருவரையும் அமர்த்திவிட்டு மெதுவாக அசைத்து அசைத்து வெளியே கொண்டு வந்து, ராஜூவிடமிருந்து வாங்கிய ஸ்னேக் கேட்சரால் அதன் தலையை பிடித்து கொண்டன். வளைவு கம்பியால் தூக்கி சாக்கில் போட்டு, ஸ்னேக் கேட்சரில் மாட்டிய தலையை விடுவித்தான்.

சாக்கை ராஜூ கையில் தர அவன் மறுத்து, மற்ற பொருட்களை, எடுத்து கொண்டான். 

அதே பெரியவர், பாம்பை அடிச்சிட்டீங்களா என்றார். வினோத் சாக்கை திறந்து காட்ட அது சீறியது. பதறி பின்வாங்கினார், "அடிக்கலையா?".
 
"இல்ல காட்ல விட்டுடுவோம்". 

"காடா இங்க எங்க காடு இருக்கு?"

"எங்கயாவது விடுவோம் சார்"

"மறுபடியும் இங்க வராதுன்னு என்ன நிச்சியம்,"

"அந்த மரத்து கிளைங்கள வெட்டி விடுங்க" என்றான் ராஜூ

சாக்கின் வாயை கட்டி, ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு, ஜீப்பை நகர்த்தினார்கள். இளைஞன் ஓடிவந்து "சார் உங்களுக்கு ஏதாவது" என்றான். வினோத் முறைத்ததில் "சாரி சார்" என்றபடி நகர்ந்தான்.

"எங்கன்னே விடுறது" 

"விடுறதா, எங்கயாவது நிப்பாடி, அடிச்சிவிட்டு போக வேண்டியதுதான்"

"கொல்றதா வேண்டாம்னே, பாவம்"

"டேய், சுத்துப்பக்கம் எங்கயும் காடு கிடையாது, இது இரை தேடி எப்படியும் மனுசங்க இருக்குற பக்கம்தான் வரும், மனுசங்கதான் முக்கியம்"

"அண்ணே, அப்ப இதுங்களுக்கு இங்க வாழ உரிமையில்லயா"

"இருக்கு, காட்டுக்குள்ள இருக்கட்டும்"

"காடு எங்கண்ணே இருக்கு, அதனாலதான இது ஊருக்குள்ள வருது. பத்து வருஷம் முன்னாடி இது பெரிய காட்டு பகுதி. இப்ப வீடுங்கதான் இருக்கு"

"சரி விடு, எங்கயாவது விட்றலாம், "

"எங்க ஊருக்கு அடுத்து சின்ன மலை இருக்கு அங்க  விட்டுடலாம், இங்க  இருந்து 5 கிலோ மீட்டர்தான்."

"அப்ப நீ யே கொண்டு போய் விட்டுட்டு"

"வேண்டாம்,நான் அத ஒன்னும் பண்ண மாட்டேன். தொடவே மாட்டேன்"

"ஏண்டா, பயமா. கனவுல வந்து ஏதாவது செய்யுமா"

"இல்லண்ணே, அடுத்த லெப்ட்ல திருப்புங்க, நேரா ஊருக்கு போய்டலாம்."

"சொல்லு, பாம்பு பழிவாங்கும்னு பயமா?"

"அது எல்லாம் இல்லன்னே, பாம்ப கொன்னா, நம்ப பிள்ளைங்களுக்கு பாம்பு கண்ணாகிடும்னு எங்க பாட்டி சொல்லும்"

"அதையெல்லாம் நம்புறியா என்ன, "

"ஆமாம்னே, நான் எந்த பாம்பையும் கொன்னதில்ல, அத பாத்தாலே ஒதுங்கி போய்டுவேன். நம்ம டிபார்ட்மென்ட்ல இது எல்லாம் வரும்ன்னு தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டேன்."

"அண்ணே நிறுத்துங்க, இங்க விட்டுடலாம். இங்க ஒரு பாழடைஞ்ச கோவில் இருக்கு, அது கிட்ட யாரும் போக மாட்டாங்க, அது பாட்டுக்கு இருக்கும். "

வினோத் வண்டியை நிறுத்தி,  அதை அதை தரையில் வைத்து,சாக்கின் வாயை திறந்து, குச்சியால் மெதுவாக அசைக்க, பாம்பு வெளியே வந்து மின்னால் வேகத்தில் புதருக்குள் மறைந்தது

"சரி வா, போகலாம்"

"அண்ணே, வாங்க என் வீடு இங்கதான் இருக்கு, வந்திட்டு போங்க"

"இல்ல, இன்னொரு நாள் வரலாம். டூட்டி டைம். "

"அண்ணே, 6 மணி ஆகிடுச்சு, டூட்டி எல்லாம் முடிஞ்சாச்சு, வாங்க. ஒரு டீ அடிச்சிட்டு போகலாம்"

நல்ல பழைய காலத்து வீடு, திண்ணை எல்லாம் வைத்த வீடு. திண்ணையிலே அமர்ந்தார்கள். ஒரு கிழவி வந்து பார்த்து விட்டு போனது. "இது தான் எங்க பாட்டி"

ராஜூவின் அம்மா வந்தார்கள், வணக்கம் போட்டு விட்டு, திண்ணை சுவரில் இருந்த படங்களை பார்த்து கொண்டிருந்தான். ஒரு பெரியவர், அவரின் விதவிதமான புகைப்படங்கள், எல்லாவற்றிலும் பாம்புகளுடன்.
ஆச்சர்யமாக திரும்பி யாருப்பா இது.

"எங்க தாத்தா, பாம்பு பிடிக்கிறதுல பெரிய ஆளு என்றான்" ராஜூ

"அப்படி இருந்துமா, உனக்கு அத கண்டு இவ்வளவு பயம்"

ராஜூ பதில் பேசவில்லை

ராஜூவின் அம்மா டீயோடு வர டீயை குடித்து விட்டு, "சரி நான் கிளம்புறேன் நீ நாளைக்கு நேர ஆபீஸுக்கு வா," கூறிவிட்டு கிளம்பினான் வினோத்.

வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வரும் போது எதிரே ஒருவர் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார். ராஜூவின் முகச்சாயல் அப்படியே இருந்தது

அப்பாவாக இருக்கும் என்று யோசித்தப்படி கடந்தான்.

ஏதோ ஒன்று சுரீர் என்று உறைக்க வண்டியை நிறுத்தி திரும்பி பார்க்க, அவரும் திரும்பினார்

அவரது இரண்டு கண்களும் இயல்பாக இருப்பது போல் இல்லாமல், பெரிதாக, வட்டமாக இருந்தன. விழிகள் வெளியே விழும்படி இருந்தன.

இவனை  இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு முறை இமைத்த போது, வினோத் உடல் நடுங்கியது. 


2 கருத்துகள்:

  1. `வாட்ஸாப்ல வர குப்பைய படிக்கிறத நிறுத்து, அப்பதான் மூளை வளரும்'-இங்க இருக்கும் நையாண்டி, `எங்க தீப்பிடிசுருக்கு'- என்ற இரு வார்த்தைகளில் அவர்களின் தொழில் விவரம், மொட்டைமாடியில் எப்படி பாம்பு வந்தது என்ற வாசகனின் சந்தேகத்திற்கு ஒரு விளக்கம், பாம்பை பிடிக்கும்போது உள்ள பதற்றம் வாசகனுக்குக் கடத்தப்படுவது, இறுதியில் விழிகள் வெளியே விழும்படி இருந்தன என்ற முத்தாய்ப்பான திகில் முடிவு!. அசத்தலான சிறுகதை தலைவரே.

    பதிலளிநீக்கு