03 பிப்ரவரி 2021

பங்கு (அவர் பிரிக்காதது)

 "நா வரலப்பா, என்ன விடு. எனக்கு பேங்க் வரை போகனும்" என்று ஐயப்பன் அடம் பிடித்துக் கொண்டிருந்தார். 

"பத்து மணிக்கு முதல்ல நம்ம ரிஜிஸ்ட்ரேஷன்தான், முடிஞ்ச உடனே நீ பேங்க் போகலாம்" என்று ஐயப்பனை கிளப்பிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். 


"நீயும் உன் அண்ணனும் பாகம் பிரிச்சி ரிஜிஸ்ட்டர் பண்ற விஷயத்துக்கு என்னை ஏன் கூப்டுற. நீ ஏற்கனவே அவங்க என்ன கொடுத்தாலும் சரின்னு சொல்லிட்டு வந்திருக்க முட்டாப்பய மாதிரி, இப்ப எதுக்கு நான்"


"நீ இல்லாம எப்படி"


"சரி வந்து தொலையுறேன்"


பத்திர பதிவு அலுவலகத்தில் நல்ல கூட்டம். நமச்சிவாயம் கூட்டத்தில் குமாரை தேடி கண்டு பிடித்தார். கூடவே அவரது அக்காவும், தங்கையும். 


"பாருய்யா குமாரோட நல்ல மனச, அவன் அத்தைங்களுக்கும் பங்கு கொடுக்க கூப்பிட்டு அனுப்பியிருக்கான் பாரு, எங்க அவனோட அக்காவ காணோம்”


ஐயப்பன், நமச்சிவாயத்தை பரிதாபமாக பார்த்தார். 



நமச்சிவாயம் அவரின் உடன் பிறந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த குமாரை அழைத்து “பானு எங்க அவ வரலயா” என்று கேட்டார்


“பானு அங்க இருக்கா ”


 "இவங்களுக்கு என்ன எழுதி வைக்க போற, மேற்க இருக்குற தோப்பா, இல்ல தெக்கு காடா.”


" இவங்களுக்கு எல்லாத்தைவிட பெரிய சொத்து இருக்கு, அதுதான் இவங்களுக்கு".


நமச்சிவாயம் பெருமையாக ஐயப்பனை பாக்க. அவர் இன்னொரு பக்கம் கண்ணை காட்டினார். அங்கு பெரிய தட்டில் வெற்றிலை பாக்கு, ரெண்டு ஆப்பிள், ஐந்து ஆரஞ்சு, ஒரு கிலோ மஞ்சள், அரைக்கிலோ குங்குமம், ஒரு புடவை, புடவை மேல் ஒரு நூற்றியொரு ரூபாய் பணமும்.


"சித்தப்பா, பாரு அங்க. பிறந்தவீட்ல இருந்து கிடைக்கிற மஞ்சள், குங்குமம் புடவைய விடவா சொத்து பெருசு. அவங்க எப்ப நம்ம வீட்டுக்கு வந்தாலும் இது கிடைக்கும். இது போதாதா. என்ன அத்த நான் சொல்றது , அதோட அப்படியே விட்டுடுவொமா, கார்த்திகை, பொங்கலுக்கு சித்தப்பா உங்களுக்கு பணம் அனுப்பமாட்டாறா, என்ன சித்தப்பா"


நமச்சிவாயம் சுதாரித்துகொண்டு, "ஆமா வீட்டு பொம்பளை புள்ளைங்க நல்லா இருந்தா தான நாங்க நல்லா இருப்போம்"


“நம்ம கூட சொத்து வேணும்னு சண்டை போட்டா, இது எல்லாம் கிடைக்குமா. என்ன அத்த, இதுதான மரியாதை. அதுவும் மாமா எல்லாம் சுயமரியாதை உள்ளவங்க.”


அவர்கள் இருவரும், "போதும்டா கண்ணு. அம்மா வீட்ல வந்து ஒரு வேளை சாப்பிட்டு, ஒரு ஒத்த ரூவா வைச்சி கொடுத்தாலும் போதும்டா எங்களுக்கு"


"இவங்களே ஒன்னும் வேணாம்னு சொல்லும் போது பானுக்கு மட்டும் கொடுத்தா நல்லாவா இருக்கும் 

"ஆமாடா, ஆனா அவகிட்ட சொல்ல வேண்டாமா"

"நீயே சொல்லு சித்தப்பா" என்று பானுவை அருகில் அழைத்தான். "நானா " என்று அவஸ்தையான குரலில் முனங்கினார். 

"பானு, உங்கத்தைங்க ரெண்டு பேரும் எதுவும் வேணம்னு சொல்லிட்டாங்க. அம்மா வீட்டுக்கு வந்துட்டு போய்ட்டு இருந்தா போதும், சொத்து எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க"


"அக்கா, அத்தைகளுக்கு தராம உனக்கு மட்டும் எப்படி தர்றதுன்னு சித்தப்பா யோசிக்கிறாரு"


பானு "தாத்தா
சொத்துல இருந்து எனக்கு எதுவும் வேணாம், ஆளவிடுங்க" என்று கூறிவிட்டு சென்றாள்

"பாத்தியா சித்தப்பா" என்ற படி நகர்ந்து சென்று, தட்டில் இருந்த நூற்றியொரு ரூபாயிலிருந்த நூறு ரூபாயை எடுத்து பையில் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.


"ஏம்பா அக்கா தங்கச்சிகளுக்கு ஒன்னுமில்ல, அப்ப மிச்சம் இருக்குறது சரிபாதி உனக்கும் உங்கண்ணனுக்குமா?" என்றார் ஐயப்பன்.


"தெரியலப்பா"


"உங்கண்ணன் என்னய்யா எவன் வீட்டு எழவுக்கோ வந்த மாதிரி உக்காந்திருக்காரு! என்ன நடக்குது, என்ன, ஏதாவது பேசுறாரா பாரு. எதுக்கும் பத்திரத்த வாங்கி பாரு ஒருவாட்டி, ஏதாவது முன்ன பின்ன இருந்தா இப்பவே சரியாக்கிடலாம், இரு நானே கேக்குறேன்"


"சித்தப்பா,அப்பா, அத்த இன்னம் ஒரு அரைமணி நேரம் நம்ம பத்திரம்தான்"


"குமாரு, அந்த பத்திர நகல ஒருவாட்டி கொடு நமச்சிவாயம் படிச்சிடட்டும்."


"மாமா, ஏன் சித்தப்பாவுக்கு என் பேர்ல நம்பிக்கை இல்லயா"


"அதுக்கு இல்லப்பா இருந்தாலும் ஒரு வாட்டி பாத்துக்கலாம் இல்ல"


"சித்தப்பா உனக்கு என்ன தெரியனும் உனக்கு என்ன எழுதியிருக்கு அதுதான"


"ஆமாம்"


"இப்ப எப்படி இருக்கோ அத அப்படியே பத்திரமா மாத்தியிருக்கு அம்புட்டுதான்"


"அப்ப வீடு உங்களுக்கு, கடை அவனுக்குன்னா. "


"ஆமா, பாருங்க கடையிலிருந்து வாடகை வருது, வீட்ல இருந்து என்ன வருது. பழைய வீடு வேற"


"இருந்தாலும் கடை மதிப்பு என்ன வீட்டு மதிப்பு என்ன"


"என்ன சித்தப்பா இவர் பேசுறாரு, வித்தாதான அந்த மதிப்பு. விக்காத பொருளுக்கு என்ன மதிப்பு. வீட்ட உனக்கு எழுதி கொடுத்தா வித்துடுவியா நீ. மாட்ட இல்ல, அப்புறம் என்ன. கடையையும் விக்க போறது இல்ல. வீட்டையும் விக்க மாட்ட, கடையையும் விக்க மாட்ட. வீட்ல இருந்து ஒன்னும் வராது, கடையில இருந்து வாடகை வரும், அது போதாதா"


நமச்சிவாயம் ஐயப்பனை பார்த்து சரிதான் என்பது போல தலையை அசைத்தார். ஐயப்பன் பல்லை கடித்தபடி திரும்பிக் கொண்டார். முகத்தை சரி செய்து கொண்டு, "அப்ப நிலம்." 


"நிலத்துல சித்தப்பா போய் பாடு பட போறாரா, இல்ல சத்யா ஜப்பான்ல இருந்து வந்து நிலக்கடல பயிர் வைக்க போறானா. வழக்கம் போல நான்தான் கிடந்து அல்லாடனும். சித்தப்பாக்கு புளி, கடலை, தேங்காய் எல்லாம் யார் தர்றது, சித்திக்கு சமையல தவிர என்ன தெரியும். சித்தப்பா என்ன மாமா இப்படி எல்லாம் கேக்குறாரு, நீ அதுக்குதான் அவர கூட்டிட்டு வந்தியா"


"இல்லடா, அவன் எனக்கு நல்லதுன்னு நினைச்சி கேட்டிருப்பான்"


"என்ன சித்தப்பா, நாம எல்லாம் ஒரே ரத்தம் இல்லயா, நீ என் அப்பாக்கு என்ன வேணும். "


நமச்சிவாயம் குழம்பி, “என்ன என்ன"


"தம்பி சித்தப்பா, தம்பி.  தம்பி இல்லையா, நாளைக்கு ஒரு நிலத்துக்கு சண்டை போட்டா என்ன ஆகும். உன்ன வீட்டுப்படி ஏறக்கூடாதுன்னு என் வாயால சொல்றது எவ்வளவு கஷ்டமா இருக்கும். அத நீ யோசிச்சியா, என்ன கஷ்டப்படுத்தி பாக்கதான் இவரு ஆசப்படுறாரா."


"டேய், அவரு நிலத்துல பங்கு கேட்டா வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லுவியா. சண்ட போடுவியா" என்றார் ஐயப்பன்


"ஏன் என் சித்தப்பாவ அப்படி சொல்ல எனக்கு உரிமை இல்லையா, நீ சொல்லு சித்தப்பா"


"உனக்கு இல்லாத உரிமையாடா, நீ என் அண்ணன் பையன்டா". ஐய்யப்பனுக்கு வயிறு லேசாக கலக்கியது.


"பாத்தீங்களா மாமா இதுதான் ரத்த பாசம்க்றது. நீ நிலம் எனக்கு வேணும்னு கேட்டு, நான் கேவலம் ஒரு பத்து குழி நிலத்துக்கு ஆசப்படுற நீ ஒரு ஆளான்னு நான் கேட்டு, இனி வீட்டுப்படி ஏறாத சித்தப்பான்னு நான் சொல்லி, நான்  அதனால மனசு வேதனைப்படனும்னு நினைக்கிறீங்களா மாமா. அப்படி சொன்னா என் மனசு என்ன பாடு படும், சோறு எறங்குமா? நீ எப்பவும் போல எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, திண்ணையில படுத்து தூங்குறது எவ்வளவு சுகமா இருக்கும். சொல்லு சித்தப்பா, என்ன அப்படி சொல்ல வைக்க போறியா, என் வீட்டுக்கு வராத சித்தப்பான்னு என் வாயால கேக்கனும்மா உனக்கு"


"வேணாம்டா, வேணாம்டா. அவன் அங்க எங்கயோ கண் காணா ஊர்ல இருக்கான், நீதான்டா இங்க இருக்க" என்றபடி கண்ணீர் விட


இருவரும் கட்டி பிடித்து கண்ணீர் விடுவதை பார்த்துக் கொண்டே நமச்சிவாயத்தின் அண்ணன் அய்யனார் அருகில் சென்று அமர்ந்தார் ஐயப்பன். அவரை நிமிர்ந்து பார்த்த ஐய்யனார், கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்தார், வாங்கி பாட்டிலை பாதி காலி செய்து விட்டு வைத்தார்.


யாரோ வந்து குமாரை தொட, வாங்க வாங்க என்று அவசர அவசரமாக அனைவரையும் உள்ளே அழைத்து சென்றான். முதலில் குமாரின் அப்பா சென்று கையெழுத்து போட்டு விட்டு வந்தார். நமச்சிவாயத்திடம் "ஒரு வாட்டி படிச்சிடு, அப்புறம் என்னை குறை சொல்லாத " என்றார். நமச்சிவாயம், பத்திரத்தை படிக்க முயன்ற போது, "சித்தப்பா" என்ற குரல் கேட்க, நமச்சிவாயம் பட பட வென அனைத்து பக்கங்களிலும் கையெழுத்தை போட்டு விட்டு வந்தார். அடுத்து குமாரின் அத்தைகள். சாட்சி கையெழுத்து போட்ட ஐய்யப்பன் வேகவேகமாக பத்திரத்தை படித்தவாரே கையெழுத்தைப் போட்டார். கடைசிப்பக்கங்கள் லேசாக நனைந்திருந்தைப் பார்த்து, “முட்டப்பய” என்று முனங்கிக் கொண்டார்.


இரண்டு அத்தைகளிடம் தட்டை கொடுத்தவுடன் இருவர் கண்களிலும் கண்ணீர். "அழுகாத அத்த தட்டோட எடுத்துக்கங்க. தட்டும் உங்களுக்குத்தான்" என்றவுடன் கண்ணீர் மறைந்து சிரிப்பு பொங்கியது. பானு தட்டை வேண்டா வெறுப்பாக வாங்கி கொண்டாள்.


காரில் ஏறியபின், "அத்தை விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்தாச்சுன்னு வீட்டு பக்கம் வராமா இருந்தீங்க அவ்வளவுதான், எனக்கு பயங்கர கோபம் வரும். வருஷத்துக்கு ஒருவாட்டியாவது கண்டிப்பா வரணும். உங்களுக்காக சீர் காத்திருக்கும்." 


காரின் உள்ளே


“ஏண்டி அது விடுதலைப் பத்திரமா என்ன” 


“தெரியலையேக்கா, பானு நீ கையெழுத்து போட்டதும் அதுதானா”


"தெரியலத்த"


“யோவ், கடை உன் பேர்ல இருக்கா இல்லையான்னே கண்டு பிடிக்க முடியாதபடி பத்திரத்தை ரெடி பண்ணியிருக்கான்யா”


இரண்டு மாதம் கழித்து


"வணக்கம் மேனஜர் சார், லோனுக்கு ஷூரிட்டி கேட்டீங்க இல்ல, இந்தாங்க எங்க கடை பத்திரம், போதுமா"


ஒரு வருடம் கழித்து


“இங்க நமச்சிவாயம்”


“நான்தான்”


“கடன் வாங்க தெரியுதுல்ல, அத திருப்பி கட்ட தெரியல”


“கடனா? நானா? ஐயப்பா!!!”



2 கருத்துகள்: