பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது.
ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும்.
கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட் போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.