20 நவம்பர் 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி இந்த நாவலை பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தார். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்தது. எனக்கு அவ்வளவு சிறப்பாக தோன்றவில்லை. ஆதவனின் கதாநாயகன், பாலகுமாரன் நாவலில் வந்து குதித்தது போல இருந்தது. ஆதவன் கதைகளில் நாயகர்கள் எப்போதும் அனைத்தையும் பிளந்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள். எல்லாரையும் விட நாம் ஒரு படி மேல் என்பது போல. அது போன்ற ஒரு நாயகன், பாலகுமாரன் கதைகளில் வரும் பெண்கள் கலந்த நாவல்.

இது முப்பது வருடங்களுக்கு முந்தய காலகட்டத்தை பற்றி பேசுகின்றது. ஆர்வியே அந்த நாயகனுடன் தன்னை பொருத்தி பார்க்க முடிவதாக கூறியிருந்தார்.  கனவுகளுடன் திரியும் விஸ்வம், அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு பிழைப்பை பார்க்க போவதுதான் நாவல். முகவரி படத்திற்கான இன்ஸ்ப்ரேஷன் என்று படித்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பான ஒரு காலகட்டத்தை காட்சிப்படுத்வதில் வெற்றிதான். அதுவே இன்று இந்த நாவலை கொஞ்சம் பழையதாக்கி விட்டது.  நாவலை என்பதை விட, அந்த சூழலை பழையதாக்கி விட்டது. மொத்தமாக படிக்கும் போது எனக்கு ஓரளவு நல்ல முயற்சி அவ்வளவுதான். இதற்கு  மேல் எழுத ஒன்றும் தோன்றவில்லை.

09 செப்டம்பர் 2020

பதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்

தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி.  ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.

ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.

முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான்  ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.

12 ஆகஸ்ட் 2020

மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில், 

//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன். 

இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். 

03 ஆகஸ்ட் 2020

கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்

சாரு நிவேதிதா அவரது தளத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியிருந்த ஒரு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். அதிலும் குறிப்பாக இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தார். பொண்டாட்டி நாவலின் சூடு நினைவிலிருந்தாலும், இவர் பழைய எழுத்தாளர், அதனால் பரவாயில்லை என்று ஒரு எண்ணம். 

இந்நாவலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முன் வசதியாக இருந்த பல குடும்பங்கள், கால மாற்றத்தை உள் வாங்கததால் தேய்ந்து போனன. அது போன்று கால மாற்றத்தை சந்திக்கும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தின் சமூக கதையோடு பெண்களின் கதைகளையும் சொல்லியிருக்கின்றார். இரண்டையும் ஒன்றாக சேர்த்ததில் குழம்பிவிட்டது. கதை உடைப்பெடுத்த காவிரி வெள்ளம் போல நாலாப்பக்கமும் ஓடுகின்றது. 

வாழ்ந்து கெட்ட ஒரு வீட்டின் கதையையும், வீட்டி வெவ்வேறு வகைகளில் அடைக்கப்பட்ட பெண்களின் கதைகளும் இணைந்து வருகிறது. ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு வீடு. காவிரி அலைகள் எப்போதும் சுவற்றில் மோதும் சத்தக் கேட்கும் ஒரு வீடு. வீட்டு வெளிச்சுவரில் ஏறி காவிரியில் குதிக்கலாம், ஈரம் பட்டு பட்டு பாசி படிந்த சுவர்கள். இதுதான் முதலில் நாவலில் உள்ளே ஈர்க்கும் கண்ணி. இறுதியில் அதுவே இறுக்கவும் செய்கின்றது.