"உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே."
"உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே."
ஒரு இளைஞனுக்கு இரவில் முகமறியா ஒருவர் செய்யும் உபதேசத்தில் ஆரம்பிக்கின்றது.
ஆகாயத்தாமரை என்பது குளம் குட்டைகளை நாசப்படுத்தும் ஒரு தாவரம் என்றுதான் தெரியும். ஆனால் ஆகாயத்தாமரை என்பதை, ஆகாயத்தில் உள்ள தாமரை என்று இல்லாத ஒரு பொருளுக்கு உவமையாக்குகின்றார்.
ஒரு இளைஞன் அலுவலகத்தில், அடுத்த வாரம் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று அறிவித்து விடுப்பு எடுத்துக் கொண்டு, வேறு ஒரு பணியில் ஈடுபடுகின்றான். அதற்கு பரிசாக அலுவலகத்திலிருந்து தற்காலிக பணி நீக்கம். விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் செய்த பணி அவனுக்கு பிடித்த வேலை, அதனால் அவனுக்கு கிடைப்பது சொற்ப தொகையும் ஒரு அயல்நாட்டு தூதரின் நட்பும். அந்த நட்பே அவனுக்கு அவன் வேலையை மீண்டும் தருகின்றது.
இதனிடையில் ஒரு பெரியமனிதரை சந்திக்கின்றான்.அவர் ஒரு பணக்காரர்.
"என் வரைக்கும் சுதந்திரம் ஒரு ஆகாயத்தாமரை மாதிரி. அதைச் சொல்லறப்போ ஏதோ நிஜமானது போலே இருக்கு. ஆனா அதுக்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானது கிடையாது."
இதனிடையில் அவனின் பழைய தோழி, பக்கத்து வீட்டுக்காரர், அவனின் அம்மா என சில பாத்திரங்கள்.
ஜெமினி மேம்பாலம் கட்டும் போது எழுதப்பட்ட கதை என்று அசோகமித்திரன் கூறுகின்றார். அதை தினமும் பார்த்து பார்த்து அதையும் கதையில் சேர்த்து விட்டார்.
சென்னையின் பல இடங்களைப் பற்றிய வர்ணணை, அக்கால சென்னையைப் பற்றி அறிய பயன்படும்.
கோர்ட் நடவடிக்கைகளையும், கை ரேகைக்காரனின் திறமையையும் அவர் எழுதியுள்ளது நல்ல கிண்டல் எழுத்து.
இக்கதை அவரது மற்ற கதைகள் போல என்னைக் கவரவில்லை. ஒகே ரகம். ஒரு சிறுகதையாக எழுதவேண்டியதை நீட்டி, கிளைக்கதையை சேர்த்து நாவலக்கியது என்ற தோற்றம் ஏற்படுகின்றது எனக்கு. கதையும் திடீரென முடிவது போல உள்ளது. கதை என்ன சொல்ல வருகின்றது என்பதும் புரியவில்லை. அதுசரி, கதை என்றால் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக