07 நவம்பர் 2012

மானசரோவர் - அசோகமித்திரன்

அசோகமித்திரனைப் பற்றி நான் புதிதாக சொல்ல ஏதுமில்லை. இது அவரின் மற்றுமொரு சினிமா துறை பற்றிய நாவல். ஒரு எழுத்தாளனுக்கும், ஒரு சினிமா நடிகனுக்கும் உள்ள நட்பை பற்றிய கதை. கரைந்த நிழல்கள் போல் முழுவதும் சினிமா பின் சுற்றாமல் அந்த இருவரைச் சுற்றியே வருகின்றது.

கதையை எழுத்தாளனும் அவரது நண்பன் சினிமா நடிகனும் மாறி மாறி கூறிச்செல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் நடிக்கும் இந்தி நாயகன் சத்தியன் குமார், அவன் சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு  எழுத்தாளர் கோபாலைக் கண்டு அவரிடம் நட்பு கொள்கின்றான். அந்த நட்பால் கோபாலுக்கு  அந்த கம்பெனியில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது. ஒரு நாள் கோபாலனின் மகன் இறந்து போகின்றான், மனைவியின் மனநிலையும் தவறுகின்றது. மகன் இறந்ததை விட அவன் இறப்பிற்கு காரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. வீட்டை விட்டு கிளம்பி எங்கோ செல்கின்றார்.

சத்தியன் குமார் அவரைத் தேடி அலைகின்றான் இதனிடையில் கோபாலனுக்கு தெரிந்த ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் வைத்துக் கொள்கின்றான். கடைசியில் ஒரு கிராமத்தில் ஒரு ஓடைக் கரையில் ஒரு சித்தருடன் இருக்கும் எழுத்தாளரை சந்திக்கின்றான். சித்தர் அவனின் மானசரோவரை அவனுக்கு அடையாளம் காட்டுகின்றார்.

எழுத்தாளரும், நடிகனும் மாறி மாறி கதையை சொல்கின்றார்கள். இதில் சினிமா என்பது ஒரு சிறிய இழை அவ்வளவுதான். இதற்கு பதிலாக வேறு எதை வேண்டுமானாலும் நிரப்பலாம். கதை இரண்டு நண்பர்களுடையது. 

கதை ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சுற்றி வருகின்றது. எழுத்தாளரின் குடும்பம், அவரது மனைவி, மகள், மகன். அவர்களின் வாழ்க்கை முறை. துண்டு துக்கடா நடிகையின் கதை என பல கிளைக்கதைகள்.

கோபாலனைப் போன்றவரை நிஜ வாழ்வில் பார்க்க முடியுமோ என்னவோ. படிக்கும் போது அவர் ஒரு இல்லற சந்நியாசி என்னும் தோற்றம் தருகின்றது. சத்தியன் குமார் ஆரம்பம் முதலே குற்ற உணர்ச்சியுடனே இருக்கின்றான். பாகிஸ்தானிலிருந்து வந்து,  பெயரை மாற்றிக் கொண்டது முதல், தன் குடும்பம் அனுபவிக்க வேண்டியதை, வேறு யாரோ அனுபவிக்க செய்தது வரை. மனமும் இங்குமங்கும் பாய்கின்றது. கோபாலுக்கு தெரிந்த பெண்ணை கண்டவுடன் வீட்டிற்கு அழைத்து போகின்றான், மருத்துவ மனையில் நர்ஸை கட்டி அணைக்கின்றான். அந்தக் குற்ற உணர்வு அவனை தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது. கடைசியில் ஒரு மானசரோவர் ஓடையில் அது அவனை விட்டு போகின்றது.

வழக்கம் போல முதல் தடவை விட்டு விட்டு படித்தேன் விளைவு குழப்பம். பின் மீண்டும் கவனமாக படித்த பின் தான் விடுபட்டவை புரிந்தது. ஒரே ஒரு வரியில் ஒரு பெரிய திருப்பத்தை சொல்லிவிட்டு போகின்றார்.

அசோகமித்திரனின் பூடக கதை சொல்லலை இதில் தான் முழுவதும் உணர முடிந்தது. கடைசி பகுதியில்.

அசோகமித்திரன் தன் கதாபாத்திரங்களை நிஜ வாழ்விலிருந்து பிடிக்கின்றார் போல. கதைகளுக்குள் ஒரு தொடர்பு இருக்கின்றது. இக்கதையில் வரும் எழுத்தாளர், அவரது "யுந்தங்களுக்கு இடையில்" என்னும் கதையில் வரும் சம்பவங்களுடன் இணைகின்றார். "யுந்தங்களுக்கு இடையில்" வரும் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு விழுது, அப்புத்தகத்தில் இடமில்லாமல் இங்கு வந்து விட்டார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக