06 நவம்பர் 2012

கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி

 
"இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்து கிருஷ்ணனும் தெரிவான்;21ம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்" புத்தகத்தின் பின்னட்டையில்
 
இந்திய இதிகாச நாயகர்களுள் முக்கியமானவன் கிருஷ்ணன். பாகவதம், மகாபாரதம் போன்ற காவிய இதிகாசங்களின் முக்கிய பாத்திரம். அவற்றின் நாயகன் அவனல்ல, அவனில்லாமல் அக்காவியங்களில் ஒன்றுமில்லை. ராமாயணம், பாரதம் என்ற இரண்டு பெரும் இதிகாசங்களில் ராமாயணம் மக்களை சேர்ந்த அளவிற்கு பாரதம் போய்ச் சேரவில்லை என்பது என் எண்ணம்.

ராமாயணத்தைப் பற்றி எத்தனை விவாதம், எத்தனை மொழிபெயர்ப்பு, வித விதமான ராமாயணம். ஆனால் பாரதம்? தமிழில் கம்பராமாயணம் அனைவருக்கும் தெரியும், ஆனால் பாரதம் என்றால் சற்றே யோசித்தால் தான் வில்லிபுத்துரார் நினைவிற்கு வருகின்றார். அதைவிட்டால் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.

பாரதம் மக்களிடம் முழுமையாக போய் சேராவிட்டாலும், அதன் கதைகள், கிளைக் கதைகள் மக்களிடம் உள்ளது. அதில் முக்கியமானது கிருஷ்ணனின் கதைகள்.

மகாபாரதம் முழுவதும் பேசப்படுவது தர்மம். எது தர்மம் என்பதை விட எந்த சூழ்நிலையில் எது தர்மம் எனக் கொள்ளப்படும் என்பதே முக்கியம். எப்போதும் உண்மை பேசுவது தர்மம், தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனை உண்மை பேசிக் காட்டிகொடுப்பது அதர்மம். பாரதம் முழுவது பரந்து கிடக்கும் தர்ம வியாக்கியனங்களை வாழ்ந்தே காட்டுகின்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் எல்லாருக்கும் பிடித்தமானவன்; குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள், யோகிகள், முனிவர்கள் என அனைவருக்கும் நெருக்கமானவன்.
 
அந்த கிருஷ்ணனின் தர்மத்தைப் பற்றி பேசுகின்றது இப்புத்தகம்.
 
கிருஷ்ணரின் கதையை சொல்ல ஆசிரியர் தேர்ந்தெடுத்த முறை அபாரம். நாரதரைக் கொண்டு கிருஷ்ணரைப் பற்றி பேசுகின்றார், நாரதர் திரிலோக சஞ்சாரி. கதையில் கூறுவதைப் போல அக்கால மீடியா. நாரதரை நிகழ்காலத்துடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதில் எவ்விதப் பிரச்சினையும் வருவதில்லை.

கிருஷ்ணன் தன் மீது அம்பெய்த ஜரா என்ற வேடனிடம் தன் கதையை கூறுகின்றான். ஜரா நாரதரிடம் கூற, நாரதர் நம்மிடம் கூறுகின்றார். கிருஷ்ணரை ஒரு ராஜதந்திரியாக காட்டுகின்றார். இதில் பார்ப்பது கடவுள் கிருஷ்ணரல்ல. தர்மத்தை காட்டும் அவதார கிருஷ்ணன்.

பாரதப்போரில் அதர்மமாக போரிட்டவர்கள் யார் என்றால் அது பாண்டவர்கள்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் என அனைவரையும் போர் தர்மத்தை மீறி தான் பாண்டவர்கள் வென்றனர்.

"எதிராளியின் தர்மம் என் தர்மத்தை நிச்சயிக்கின்றது" என்று அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கின்றான். அனைத்து அவதாரங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் (இன்ஸ்டென்ஸ் அவதாரம் - அஜெண்டா). கிருஷ்ணாவதாரத்தின் காரணம் பூபாரத்தை குறைக்க என்பார்கள். அதை விளைவு மகாபாரதப் போர் என்னும் பேரழிவு. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் யுந்தம் என்றாலும், இருபக்கமும் பேரழிவே. இதற்கு சூத்திரதாரி கண்ணன். கிருஷ்ணன் நினைத்தால் தடுக்க முடியாதா என்ன, ஆனால் செய்யவில்லை. போரை நடத்தியவனே அவனல்லவா?
 
இருந்தாலும் கிருஷ்ணன் செய்தது தவறு என்று யாரும் வாதிடுவதில்லை. சில அறைகுறைகள் கிருஷ்ணனின் பிருந்தாவன லீலைகளை தற்கால அளவுகோலில் அளந்து புலம்புவதுண்டு. அவன் குழந்தைகளுக்கு குறும்பான விளையாட்டு தோழன், இளைஞர்களுக்கு ஒரு விவேகியான் நண்பன், பெண்களூக்கு ஆதர்ச ஆண்மகன், பக்தர்களுக்கு கடவுள், யோகிகளுக்கு அவன் ஒரு ஞானி, தத்துவவாதி. அவனது கீதை அனைவருக்கும் தன் தரப்பு நியாயத்தை வலுவாக்கப் பயன்படும் நூல்.
 
இது போன்ற கிருஷ்ணனின் பல பிம்பங்களை நாம் காணச்செய்கின்றது இப்புத்தகம்
 
இப்புத்தகத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் சில கேள்விப்படாதவை, பல நாம் கேள்விபட்டவை, சிலவற்றின் வெர்ஷன் வேறாக உள்ளது. பாஞ்சாலி கண்ணனை மணக்க விரும்பினாள் என்பதும் புதியது. நான் படித்த வெர்ஷன், "துரோணரைக் கொல்ல ஒரு மகனும், அர்ச்சுனனை மணக்க ஒரு மகளும்" என்றுதான் துருபதன் யாகம் செய்கின்றான்.
 
சியமந்தகமணி கதை எல்லாம் எப்போதோ சிறுவயதில் படித்தது. போலி வாசுதேவன் கதையும் அப்படித்தான், ஆனால் அதில் வந்த ஷைல்பியா புதிது. உஷை - அநிருந்தன் கதை, அக்ரூரர் துவாரைகையிலிருந்து ஓடிப் போனது எல்லாம் புதிதாக இருக்கின்றது. கடைசி அந்தியாயம் மட்டும் ஆசிரியரின் கைச்சரக்காக இருக்கலாம்.
 
கிருஷ்ணனின் வாழ்க்கையை ஒரு ஸ்னாப் ஷாட் மாதிரி கூறிக் கொண்டே செல்கின்றார். முன்பின்னாக இருந்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது. அங்கங்கு இ.பாவின் நகைச்சுவையும் கிண்டலும் புன்னகையைத் தருகின்றது.
 
நாரதர் "நான் உங்களுக்கு இதைச் சொல்லுகின்றேன், நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லும் போது உங்கள் முத்திரையும் இருக்க வேண்டும்" என்கின்றார். இ.பாவின் முத்திரை பல இடங்களில் இருக்கின்றது. ஏகப்பட்ட ஆங்கில வார்த்தைகள் இருந்தும் ஒன்றும் வித்தியசமாக படவில்லை.
 
மகாபாரத பைத்தியங்கள் தவற விடக்கூடாத ஒரு புத்தகம்.
 
இப்புத்தகத்தை ஏற்கனவே வெகுநாட்களுக்கு முன்னரே படித்து விட்டேன் இருந்தாலும், இது அடிக்கடி என் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை படித்தேன். அடுத்து என்ன செய்வது, படித்ததை எழுதுவது. எழுதிவிட்டேன். இனி நிம்மதியாக தூங்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக