இரவு தூக்கம் வராமல் கைக்கு கிடைத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அது "நில்லுங்கள் ராஜாவே". நல்ல விறுவிறுப்பான நாவல்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு போகும் போது உங்களுக்கு பதில் வேறு யாரோ உங்கள் பெயரில் உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, யார் நீ என்றால் எப்படி இருக்கும்? ஒருவனின் ஐடென்ட்டி இன்னொருவனால் உபயோகப் படுத்தப் பட்டு, இரண்டு நான் கள் இருந்தால் என்ன ஆகும்.
ஜவகர்விட்டல் அலுவலகத்திலும், வீட்டிலும் அவன் அவனிலை என்று விரட்டப் படுகின்றான். குழந்தை, மனைவி, மச்சினிச்சி முதல் பக்கத்து வீட்டுக்காரன் வரை அடையாளம் தெரியவில்லை. காவல் துறையும் அவனை ஏற்க மறுக்கின்றது.
கடைசியில் தன் இடத்தில் உள்ளவனை கொலை செய்ய முயற்சி செய்து, போலிஸ் கஸ்டடியில் செல்கின்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், அவன் நார்மல் என்று அறிக்கை அளித்தாலும், சந்தேகப் பட்டு கணேஷிடம் அவன் கேஸை ஒப்படைக்கின்றார். ஜாமினில் கொண்டுவரப்படும் அவன் காணாமல் போக, கதை அதன் பின் ஒரே மூச்சில் பாய்கின்றது.
டிபிகல் சுஜாதா டச். வசந்தின் குறும்பு "மச்சினிச்சி அடையாளம் ஏதாவது சொல்லுங்க", மருத்துவ விஷயங்கள், மூளையை வசப்படுத்துவது பற்றிய விஷய்ங்கள், சிஐஏ, கம்யூனிசம் என்று எங்கெங்கோ போகின்றது. கடைசியில் ஒரு சர்வதேச சதியை கண்டறிவதில் முடிவடைகின்றது.
கதையின் தலைப்பை முதலில் தந்து விட்டு கதையை யோசித்திருப்பார் போல, சும்மா அதை நடுவில் சேர்த்திருக்கின்றார். (ஒரு பெண் தன்னைத் தேடும் அவனைப் பார்த்து "நில்லுங்க ராஜா" என்கின்றாள், அவ்வளவுதான் கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு) தொடர்கதையை எந்த வேகத்தில் எழுதினாரோ, மருத்துவமனை ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு பெயரை வைத்து, அடுத்த அந்தியாயத்திலேயே மீண்டும் வேறு ஒரு நாமகரணம் செய்து வைத்துள்ளார்.
அங்கங்கு கொஞ்சம் காதுல பூ என்றாலும் நல்ல விறுவிறுப்பான நாவல். இதைப் படிக்கும் போது எப்போதோ படித்த "மூன்று நிமிஷம் கணேஷ்" நினைவிற்கு வருகின்றது.ஒருவன் "நிமிஷா நிமிஷா நிமிஷா" என்று கூறிவிட்டு இறக்க, அது கணேஷையும் வசந்தையும் எங்கோ கொண்டு செல்லும். இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான் இதில் மருத்துவம், அதில் பொறியியல்.
உயிர்மையின் சுஜாதா குறுநாவல் தொகுப்பு பாகம் 4ல் உள்ளது.
சாவி முதல் இதழிலேயே, சாவியின் வேண்டுகோளுக்கிணங்க சுஜாதா துவங்கிய கதைதான் 'நில்லுங்கள் ராஜாவே!'
பதிலளிநீக்குமிக அருமையான நாவல்.!
கணேஷ் வசந்த் புத்தகம் என்றால் தேடித்தேடி படிப்பேன்.. தீவிரத்திற்கும் தீவிர வாசகன் என்றும் கொள்ளலாம்.. 'மூன்று நிமிஷம் கணேஷ்' இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டிருந்தாலும் எங்கும் கிடைக்கவில்லை .. எங்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் கிடைத்தால் 'பாக்யவானாவேன்' சார் :-)
பதிலளிநீக்குநில்லுங்கள் ராஜாவே நாவலில் ராஜாவின் ஊர் நெல்லை என்பதை 'அந்த ஊர்க்காரங்க தான் எல்லாத்தையும் அங்க வச்சி இங்க வச்சி பார்ப்பாங்க' என்ற ஊர்பாசையின் மூலம் கூறியிருப்பார்.. எனக்கு மிகவும் பிடித்த நாவல் :-)
நான் படித்ததே ஒரு பழைய்ய்ய்ய் புத்தகம். பயந்து பயந்து பக்கங்களை திருப்பி படித்தேன் (ஓசி புத்தகம்) அச்சில் உள்ளது போல் தெரியவில்லை. நான் படித்ததும் பைண்ட் செய்யப்பட்டது.
நீக்கு