தாயார் சன்னதி எழுதிய சுகாவின் மூன்றாவது புத்தகம் சாமானியனின் முகம். அதிகம் சினிமா பற்றிய கட்டுரைகளே உள்ளது அதிலும் குறிப்பாக சினிமா இசை பற்றிய கட்டுரைகள்.
யாரும் அறியாத புதிய விஷயம் எதுவும் சொல்லவில்லை. சினிமா ஆள் என்பதால் சினிமா வம்புகள் தேடினால் ஒன்றுமில்லை. சும்மா அங்கங்கு நாலு கிசுகிசுவை சேர்த்திருக்கலாம்.
சுகா சிறுவயதிலிருந்து இசை கற்றவர் என்பது, இசைக் கருவிகளை வாசிப்பவர் என்பதும் அவரது முதல் புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இதில் அவரது திரையிசை பற்றி பல கட்டுரைகளும் நடுவில் மானே தேனே என்று வேறு சில கட்டுரைகளும் உள்ளது.
இப்புத்தகம் இளையராஜா ரசிகனால், இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுதப்பட்டது. நான் ஏ.ஆர். ரகுமான் ரசிகனாக இருந்து ராஜாவிற்கு மாறியவன். ரேடியோ கேட்டு வளர்ந்ததில்லை, டீவி அவ்வளவாக பார்ப்பதுமில்லை. சொந்தமாக டேப் வாங்கி பாடல் கேட்கும் வசதி வந்த போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். சென்னை வந்தபின், ரேடியோ மிர்ச்சியில் இரவும் 11 - 1 வரை ஒலிபரப்பாகி வந்த காதல் காதல் (பெயர் சரிதானோ என்னவோ?) ராஜாவை அதிகம் கேட்கவைத்து, ராஜாவை மட்டும் கேட்க வைத்துவிட்டது.