04 டிசம்பர் 2012

ப்ரியா - சுஜாதா

ஒரு கணேஷ் வசந்த் கதை. வசந்த் பாவம் இதில் முதல் அத்தியாயத்துடன் கிளம்பிவிடுகின்றான். கதை நடக்குமிடம் லண்டன் என்பதால் எதற்கு வீண் செலவு என்று விட்டு விட்டு கணேஷ் மட்டும் போய்விட்டான்.

ப்ரியா ஒரு சினிமா நடிகை அவளின் கணவன் ஜனார்த்தனன் அவள் காதலனுடன் ஓடிவிடக் கூடாது என்று கண்காணிக்க கணேஷை ப்ரியாவுடன் லண்டன் அனுப்புகின்றான்.  ஜனார்த்தனன் லண்டன் வரும் போது ப்ரியா காணாமல் போகின்றாள். அவளை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சி நடக்கின்றது. இரு நாட்களில் ப்ரியா கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள். யார் கொலை செய்தது என்பதை ஸ்காட்லாண்ட் யார்டுடன் சேர்ந்து கணேஷ் கண்டுபிடிப்பது மிச்சக் கதை.


இதை சினிமாவாக ஏற்கனவே பல முறை பார்த்தாகி விட்டது. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் இன்றும் நள்ளிரவு நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. (இளையராஜா பாடல்களை இரவிலோ, மாலையிலோ ஒளிபரப்பினால் கேட்க மாட்டோம் என்று யாராவது சொன்னார்களா என்ன? எப்போதும் நள்ளிரவில் சூப்பரான பாடல்களைப் போட்டு தூக்கத்தை விரட்டுகின்றனர்). அக்கதை சினிமாவிற்காக சிதைக்கப் பட்டதை சுஜாதா பல இடங்களில் கூறியுள்ளார். அப்படி என்ன சிதைத்து விட்டார்கள் என்று பார்ப்பதற்காக வாங்கினேன்.

பாவம் உண்மையில் கொத்தி எடுத்துள்ளனர். லண்டன் சிங்கப்பூராகி, ரஜினி ஒரே நாளில் குங்ஃபூ கற்று, பாட்டு பாடி அப்பப்பா. கல்யாணமான ப்ரியாவை தமிழ்கலாச்சார விதிக்காக கல்யாணமாகாதவளாக மாற்றிவிட்டனர். ரஜினிக்காக க்ளைமாக்ஸ் சண்டை, சீசர் நாடகம் (மீசை வைத்த சீசர் என்று அக்காலத்தில் கிண்டலடிக்கப்பட்டதாக எங்கோ படித்தேன்).

கதை குமுதத்தில் வந்துள்ளது. ஓஹோ என பாராட்டும் அளவிற்கு சிறப்பான கதை இல்லை. ப்ரியா கொலைக்கு பின்னால் கதை தட்டு தடுமாறி போகின்றது.  எஸ்.ஏ.பி சொன்ன திருப்பமும் ஒட்டாமல் திணிக்கப்பட்டதாகத் தெரிகின்றது (இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல் பக்கத்தில்). குமுதத்திற்கு இது போதும் என்று   எழுதிவிட்டார் போல.

கிழக்கின் பதிப்பு. பல நாட்களான சந்தேகம், யார் இந்த புத்தகங்களின் அட்டைப் படத்தை டிசைன் செய்வது, யார் அதை அப்ரூவ் செய்வது. இதற்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சகிக்கவில்லை. இதே போலத்தான் ஜீனோவிற்கு ஒரு ரோபோட் நாயும், ஒரு பமரேனியன் நாயும். விஷ்ணுபுரத்திற்கு ஒரு சின்ன விஷ்ணுசிலை, அட்டைப் படத்தை பார்த்தாலே ஒரு பிரம்மிப்பு வர வேண்டாமா?

4 கருத்துகள்:

 1. ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..

  1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார். அந்தக் கதை ‘ப்ரியா’.

  ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.

  ‘‘குமுதம்’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது. குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார்.

  ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில், ‘இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி. அவர்களுக்கு’ என்று சமர்ப்பணம் செய்தேன்.

  'ப்ரியா’ சினிமாவானது வேறு கூத்து.

  Nothing succeeds like success என்பார்கள். ஒரு காலத்தில் மகரிஷி, ஜெயகாந்தன், அனுராதாரமணன், சிவசங்கரி, உமாசந்திரன் போன்றவர்களின் பத்திரிகைக் கதிகள் சினிமாவில் வெற்றி கண்டன. புவனா ஒரு கேள்விக்குறி, சில நேரங்களில் சில மனிதர்கள், சிறை, 47 நாட்கள், முள்ளும் மலரும் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம். இப்போது இந்த வழக்கம் அறவே ஒழிந்துபோய், கதை என்கிற வஸ்து படம் பிடிக்கும்போது தான் தேவைப்பட்டால் பண்ணப்படுகிறது.

  பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

  பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

  ‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார். லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.

  இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

  கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

  அதன் துவக்க விழாவில், முதல் காட்சி… சென்டிமெண்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி ‘உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு’ என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

  ‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 2. ‘ப்ரியா’ விகடன் திரை விமர்சனம் (1978) 52/100

  ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்ச்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !

  ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !

  அடிக்கடி ‘ரைட்’ என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் ‘ஹோல் டான்’ என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !

  கண்ணுக்கு குளிர்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களூம் கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.

  ரீ ரெகார்டிங்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான ‘பெப்’ இல்லையே..! டார்லிங்…டார்லிங் தவிர.

  ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் நாவல் மாதிரி விறு விறுப்பு!

  தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் – டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோட காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!

  ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. ‘சீஸர்’ நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் ‘சாக்ரடீஸ்’ நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?

  இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த ‘ப்ரியா’ கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்த்து விட்டார்கள்.

  சிங்கப்பூர் 97% கதை 3% – கலவை விகிதம் சரியாக இல்லையே!

  ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா ‘ப்ரியா’ என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து ‘நைஸாக’ இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் ‘காப்பி’ அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது – நம்கேன் வம்பு!

  Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி…. மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!

  முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100
  -விகடன் விமர்சனக்குழு

  பதிலளிநீக்கு
 3. ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

  அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், “நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்கள். ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.

  “சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்” என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் “அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது” என்றார்கள். ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன. ஓய்வு எடுக்காமல், இரவு – பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

  ரஜினிகாந்த் நடித்த “ப்ரியா” படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

  “ப்ரியா” படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.

  ரஜினிகாந்துக்கு தற்காலிக “நெர்வ்ஸ் பிரேக் டவுன்” (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

  பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

  எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா’ ஷூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட “நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்” வந்து விடும்.”

  இவ்வாறு சுஜாதா கூறினார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.// வசந்த் ரசிகர்களுக்கு ஒரு தண்டனை. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிகர் பாண்டுவைப் பார்ப்பது போல.

   விகடனின் விமர்சனம் இப்பொது வெறும் குப்பை. கடைசி தகவல் புதிது. ரஜினி மனநிலை, உடல்நிலைப் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரியும். அதற்காக அவரை கிண்டலடிப்பவகளுக்காக இது //ஓய்வு எடுக்காமல், இரவு – பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.//

   //இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட “நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்” வந்து விடும்.”// சுஜாதாடச்

   நீக்கு