வருடா வருடம் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது. அதற்கு செல்ல முடியாமல் தடுப்பது அது நடைபெறும் காலம். பொங்கல் சமயம். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது, இதற்கு தனியாக செல்ல முடியாது. நேற்று பத்ரி அவர்களின் தளத்தில் பெங்களூருவில் புத்தக கண்காட்சி நடைபெறுகின்றது என்று அறிவித்திருந்தார். நடக்கும் இடம் என் அலுவலகத்திற்கு மிக அருகில், பேலஸ் கிரவுண்டில்.
பேலஸ் கிரவுண்ட் என்பது பெரிய இடம், எந்த பகுதி என்பது சரியாக தெரியவில்லை. அவ்வழியாக செல்லும் அலுவலக நண்பருடன் வண்டியில் தொற்றிக் கொண்டேன். ரீட் புக்ஸ் என்று பெரிய பேனர். புத்தக கண்காட்சி நடப்பதே தெரியவில்லை. இருபது ரூபாய் கட்டணம்.
அதிக கூட்டமில்லை. திருப்பதி போன்று அனைத்துப் பக்கமும் தடுப்புகள் வைத்து, உள்ளே நுழைபவர்கள் அனைத்து கடைகளையும் தரிசனம் செய்த பின்பே வெளியே செல்ல முடியும் என்பதாக செய்து வைத்துள்ளனர். இது அறியாமல் வெட்டியாக போன வழியிலும், பின்புறமும் முன்புறமுமாக அரைமணி நேரம் சுற்றித் திரிந்தேன்.
புத்தக கடைகளுடன் வேறு சில கடைகளும் இருந்தன. உடற்பயிற்சி கருவிகள் விற்பனை நிலையம் ஒன்று போகின்றவர்களை வழிமறித்து உள்ளே கடத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஏகப்பட்ட ஆங்கில புத்தக கடைகள். கன்னடம் குறைவாக இருந்தது போன்ற பிரமை.
இஸ்கான் பக்தர்கள் கடந்து செல்பவர்களை எல்லாம் உள்ளே இழுத்துக் கொண்டிருந்தார்கள். பக்தி ஸ்டால் வரிசையில், ராமகிருஷ்ண மடம், ஜக்கி வாசுதேவ், இன்னும் பெயர் தெரியாத இரண்டு மடங்கள். ஒரு இஸ்லாமிய புத்தகக்கடை. குழந்தைகளுக்கான புத்தகங்கள்.
வெளியே வருமிடத்தில் ஒரு ஸ்டாலில் நாலைந்து பேர். உள்ளே பரம்ஹம்ச நித்தியானந்தர் (பத்திரிக்கை நாமகரணப்படி நித்தி) படம், மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் குழப்பமடைந்து விட்டேன், நல்லாதான இருந்தாரு, எதுக்கு மாலை எல்லாம் என்று. பின்னர் தெரிந்தது அது அவரின் புத்தகங்கள் விற்கும் ஸ்டால், உள்ளே இரண்டு சாமியார்கள் காவியுடன் அமர்ந்து கொண்டு வந்திருந்த இரு பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
புத்தகங்கள் வாங்குவதற்கு அதிக சமயம் தேவைப்படவில்லை. ஏற்கனவே நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்களை வாங்கி பையில் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன். கிழக்கு, பாரதி புத்தகாலயம், உயிர்மை, காலச்சுவடு, விகடன் எல்லாம் கடை விரித்திருந்தனர். எல்லாவற்றிலும் உள்ளே சென்று பார்த்தேன் விகடன் தவிர. அவர்களின் புத்தக அமைப்பே எனக்கு பிடிக்காது, எனவே உள்ளே எட்டி பார்க்கவில்லை.
கல்கியும், சுஜாதாவும் இல்லாத புத்தக கண்காட்சியே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விதவிதமான பொன்னியில் செல்வன்கள் கிடைக்கின்றது. குண்டு, ஒல்லி என வித விதமாக. உயிர்மை சுஜாதாவின் குறு நாவல்களை ரயில்வே கால அட்டவணை போன்று கையடக்க பதிப்பாக வெளியுட்டுள்ளனர். 50 ரூபாய். அதிகம் தான், யார் வாங்குவார்கள்?
கிழக்கில் விற்பனையாளர், ஆழம் பத்திரிக்கை வேண்டுமா என்று கேட்டார். நான் ஆன்லைனில் படித்து விடுகின்றேன், முழு புத்தகத்தையும் அங்கு வெளியிட்டு விட்டு இங்கு விற்றால் யார் வாங்குவார்கள் என்றேன். சிரித்துக் கொண்டார்.
உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள் சிறியதாக இருந்தாலும், அவர்கள் மட்டுமே என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டது. நான் சும்மா புரட்டி பார்த்த புத்தகங்களை பற்றி தகவல்கள், அது மாதிரியான வேறு புத்தகங்கள் என பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு புத்தகங்களையும் வாங்க வைத்து விட்டனர். மற்றவர்கள் ஏதோ வருகின்றான் வாங்கினால் வாங்கட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலச்சுவடில் விற்பனையாளர் ஒரு பெண்ணிடம் பல புத்தகங்களைப் பற்றி கூறி, விளக்கி கொண்டிருந்தார். அப்பெண்ணும் கடைசியில் எப்படியும் ஒரு பதினைந்து புத்தகங்களை வாங்கிச் சென்றிருப்பார். நான் பார்க்கும் போதே அவர் கையில் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
என்னதான் புத்தகங்களை ஆன்லைனில் வாங்கும் வசதி இருந்தாலும், கடையில் சென்று புரட்டிப் பார்த்து கையில் வாங்குவது தனி. அதற்கு கொஞ்சம் அவர்களும் உதவ வேண்டும். அனைத்து புத்தகங்களும் கலந்து கிடைக்கின்றது.
மதுரையில் சனிக்கிழமை ஒரு புத்தக கடைக்கு சென்று அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பு உள்ளதா எனக் கேட்டேன். அவருக்கு அப்பெயரே சட்டென்று பிடிபட வில்லை. விளக்கி கூறியபின் அது எல்லாம் இல்லை என்று ஒரே வரி. முடிந்தது கதை. மற்றொருவர் வாடிவாசல் தேடிக் கொண்டிருந்தார். அவருக்கும் அதே கதிதான்.
புதிதாக படிப்பவர்களுக்கு புது ஆசிரியர்கள், புத்தகங்களை அறிமுகம் செய்வது என வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும். பாதி பேர், முன் முடிவின்றி வருபவர்கள்தான். அவர்களை முடிவெடுக்க வைப்பது விற்பனையாளர்களின் கையில்.
ஒரு வேளை சென்னையில் இதைவிட சிறப்பாக நடைபெறுமோ என்னவோ.
புத்தகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பள்ளி, கல்லூரிகளிலும் வாசிப்பை வளர்ப்பதில்லை. அப்படியான சூழலில் கடைகள் இப்படித்தானே இருக்கும். ஆனால், இதற்கு விதிவிலக்காக பலர் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. மதுரை புத்தகத்திருவிழாவிற்கு ஒருமுறை வாருங்கள்.
பதிலளிநீக்குகண்டிப்பாக ஒரு முறை வரவேண்டும். ஊருக்கு போகும் போது அங்கு போனால்தான் உண்டு. எப்போது மதுரை போனாலும், அங்கு புத்தகக் கடையை எட்டிப் பார்த்துவிட்டு வருவதுண்டு. எங்கள் பள்ளியில் நூலகம் என்று ஒன்று இருந்ததே எனக்கு தெரியாது. கல்லூரியில் எப்புத்தகத்தையும் வெளியே கொண்டு செல்ல விடமாட்டார்கள். ஊர் நூலகத்தில் சிறுவர்களைப் பார்த்தாலே விரட்டுவார்கள். இதில் எங்கிருந்து குழந்தைகள் படிக்க, அவர்களுக்கு அவர்கள் புத்தகத்தைப் படிக்கவே நேரமில்லை. நம் மக்களும் கடைசி பக்கத்தை கிழித்து வைப்பது, முடிவை முதல் பக்கத்தில் எழுதிவைப்பது என்று தங்களால் ஆன சேவையை செய்கின்றார்கள்.
பதிலளிநீக்கு