28 டிசம்பர் 2012

சிங்கிள் ஸீட்

திருமணம் ஆனபின் நான் அடைந்த முக்கிய நன்மை பஸ்ஸில் சிங்கிள் ஸீட் புக் செய்ய வேண்டியதில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு இருக்கைகள். அவள் பிரசவத்திற்கு போன பின் மறுபடியும் அப்பிரச்சினை.

சிங்கிள் சீட் முன்பதிவு செய்வதென்றால் எப்போதும் எனக்கு கொஞ்சம் பயம். பஸ்ஸில் ஏறி எல்லாம் செட் செய்துவிட்டு அமர்ந்தால், யாராவது ஒரு பெண்மணி / ஆண்மணி வந்து "சார், கொஞ்சம் மாறி உட்கார முடியுமா?" என்பார்கள். சிலர் அதிகாரமாக "சார் என் ஸீட் அங்க இருக்கு, நீங்க அங்க போய்டுங்க" என்பதுண்டு.

இது அடிக்கடி நிகழ்வதுண்டு. என்னைப் பார்த்தால் அவர்களுக்கு இவன் சொன்னபடி கேட்பான், மாற்றிக் கொண்டு போய்விடுவான் என்று எப்படித் தெரியும் என்று தெரியவில்லை. எப்போதும் நான் மாறி அமரும் சீட்டின் அடுத்து இருப்பவனிடம் கேட்பதில்லை. டிரெயினில் ஒரு தடவை ஏழு இடம் மாறி இருக்கின்றேன், ஏழாவது D1 ல் இருந்து D7. அதனாலேயே எப்போதும் அப்பர் பெர்த் வாங்கி ஏறி படுத்து விடுவது. எவனும் கேட்க மாட்டான். பஸ்ஸில் ஏற்கனவே யாரவது புக் செய்த இருக்கைக்கு அடுத்த இருக்கையை புக் செய்து விடுவேன். அதனால் கொஞ்ச காலம் நிம்மதியாக இருந்தேன்.


இம்முறை ஊருக்கு செல்லும் போது, மறந்து போய் ஜன்னல் சீட்டை புக் செய்து விட்டேன். போக வர இரண்டிலும். பெங்களூரிலிருந்து போகும் போது, கடைசி வரிசைக்கு முதல் வரிசை. பேருந்து ஏற்கனவே நிறைந்து இருந்தது. என் இருக்கைக்கு அருகில் ஒருவன், தாரளமாக அவன் இவன் எனலாம். +1 அல்லது +2 படிக்கும் வயது. அவன் என்னை பார்த்த பார்வையில் அவ்வளவாக ஸ்னேகம் இல்லை.

நான் இடத்தில் அமர்ந்து கொண்டு, திரும்பி பார்த்தால் அச்சிறுவனை காணவில்லை. பின் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண். எனக்கு இலேசாக பயம் வந்தது, போச்சுடா, இடம் மாற வேண்டியிருக்குமோ என்று. அப்பெண்ணின் அருகில் பெண், நிம்மதி. மாற்றிக் கொள்ள முடியாது. அப்பையன் அருகிலிருந்த சிலரிடம் கேட்டான். ஒன்றும் நடக்க வில்லை. இரவு முழுவதும் பேசிக் கொண்டே வந்தனர். அரைகுறை தூக்கத்தில் கேட்ட வரை, ஒரே லவ் தான் இருந்தது. காலையில் முழித்து பார்த்தால் ஆள் இல்லை, தேனியில் இறங்கி இருக்க வேண்டும். நான் இறங்கும் போதுதான் பார்த்தேன், அப்பெண் எப்படியும் அவனைவிட ஒரு 5 வயது பெரியவளாக இருக்கக் கூடும்.

திரும்பும் போது, எனது பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அடுத்து தேனியில் பஸ் நிறைந்து விடும். எனக்கு நல்ல தூக்கம், தூங்கிவிட்டேன்.

தேனியில் பஸ் நின்றது முழித்துக் கொண்டேன். பெண்கள் கூட்டம் ஏறியது தெரிந்தது, அவர்களின் சத்தம் தூங்குபவனையும் எழுப்பி விடும். மெதுவாக பயம் வந்தது, அவர்களின் பேச்சில் அவர்கள் ஸீட் வேறு வேறு இடத்தில் இருந்தது தெரிந்தது, கண்ணைத் திறந்து பார்த்து, "சார் மாறி உக்காருங்க" என்றால் என்ன செய்வதென்று, சால்வையை முகத்தில் போர்த்திக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டேன்.தீடிரென யாரோ என் ஸீட்டில் வந்து விழுவது தெரிந்தது. அதிர்ச்சியில் முழித்து பாத்தேன். ஒருவர் எனக்கு அருகில் அமர்ந்து இருந்தார். இருக்கை அவருக்காக செய்தது போலிருந்தது. முகத்தில் கர்ச்சீப் கட்டி பாதி முகத்தை மூடியிருந்தார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு, சால்வையால் மீண்டும் முகத்தை மூடிக் கொண்டேன். அவர் போனில் பேசுவது கேட்டுக் கொண்டிருந்தது.

"ஏறிட்டியா, நான் ஏறிட்டேன்"

"ஆமா, பக்கத்துல ஒருத்தர் தூங்கிட்டு இருக்கார்"

"சரி இரு கண்டெக்டர் வர்றார், கூப்ட்றேன்"

நான் தூங்கவில்லை என்பதை உணர்த்தலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தேன். பஸ் தேனியை விட்டு வெளியேறி வேகமெடுத்தது.

"ம் சொல்லுடி"

"நானா, பெவெண்டோ சாப்ட்டுட்டு இருக்கேன் வேணுமா உனக்கு, கொண்டுவரவா. இல்லை நீ வர்றியா?"

சரிதான் லவ்வர் ஊருக்கு போகின்றார் போல், இவர் இங்கிருந்து வழியனுப்புகின்றார் என்று நினைத்துக் கொண்டேன்

"சரி, உங்க வீட்ல ஏதாவது சொன்னாங்களா?"

"இல்லையா, நான் இன்னிக்கு அங்க வந்திட்டு போனேனே?"

"சத்தமா எல்லாம் பேச முடியாது, இங்க பக்கத்துல இருக்கறவர் நல்லா தூங்கறாரு. டிஸ்டர்ப் பண்ணக் கூடாது"

"இன்னக்கி என்ன நடந்தது தெரியுமா?, நம்பி மாமா வந்துட்டாரு"

"தேனி பஸ் ஸ்டாண்டுக்கு. நான் போடி போய்ட்டு அப்படியே தேனி வர்றேன்னு சொன்னேன். அப்பா அம்மா கேக்கல. அதோட அவரும் வந்து பஸ் ஏத்திவிட்டுட்டு போறோம்னு சொல்லி இங்க  வந்துட்டாங்க"

"வந்து திண்டுக்கல் பஸ்ல ஏத்திவிட்டுட்டுதான் போனாங்க, சரி பஸ் கிளம்ப நேரமாகும் போங்கன்னாலும்,  மாமா போகல. இருந்து பஸ் கிளம்பினப்புறம்தான் போனாங்க"

"நான் வெளியில் சிக்னல்ல குதிச்சு, அங்க இருந்த ஹோட்டல்ல போய் ஒரு மணி நேரம் காபி குடிச்சிட்டு, பக்கத்துல இருந்த கடைக்கு போய பனியன் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்"

"அதுதான் ஏறும் போது முகத்துல கர்ச்சீப் கட்டியிருந்தேன். எவனாவது கண்டு பிடிச்சி போட்டு குடுத்துட்டா என்ன பண்றது".

"இரு இரு கூப்டறேன்"

"சொல்லுங்கம்மா, திண்டுக்கல் கிட்ட போய்ட்டேன். அங்க இருந்து மாறி போய்க்கிருவேன், சரி சரி"

"சொல்லுடி, பவண்டோ வேணுமா? சொல்லு நான் வந்து குடுக்குறேன்"

"பக்கத்துல இருக்ற பொண்ணு எங்க இறங்குது"

எனக்கு மெதுவாக சந்தேகம் வர ஆரம்பித்தது.

"உன்ன கொண்டு விட்டது யாரு?"

"சரி சரி"

"அவரு நல்லா தூங்கறாரு, உன் ப்ளான்ல தீய வைக்கணும்"

"பேசாம வேற பஸ்ல புக் பண்ணியிருக்காலாம், நீதான் ஐடியா குடுத்த"

"எப்படி முடியும், நீயே பாரு"

எனக்கு கன்ஃப்ர்ம் ஆனது, அவன் பேசிக்கொண்டிருக்கும் பெண் இந்த பஸ்ஸில்தான் இருக்கின்றாள். மறுபடியும் இடமாற்றமா?

யார் அந்தப் பெண் எங்கிருக்கின்றாள் என ஒரே ஆர்வம். பக்கத்திலிருந்தவனோ நிறுத்துவது போல  தெரியவில்லை. மெதுவாக தூக்கம் கண்ணை சுழட்டியது.

திண்டுக்கல் தாண்டி பஸ் உணவிற்கு நிறுத்தப்பட்டது. வேகமாக முழித்துக் கொண்டு யார் அந்த பெண் என்று தெரிந்து கொள்ள ஆர்வமானேன். அவன் நேராக முதல் வரிசைக்கு சென்று அங்கிருந்த பெண்ணிடம அந்த பெவெண்டோ பாட்டிலை தந்துவிட்டு பேசாமல் கீழே இறங்கினான். அருகிலிருந்த மற்றொரு பெண் அதைக் கண்டு முழித்து கொண்டிருந்தாள். அவள் அந்தப் பக்க உரையாடலை கேட்டு கொண்டிருப்பாள் அல்லவா?

கீழே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

பஸ் கிளம்பியது. மறுபடியும் போன்

"அது எப்படி கேக்க முடியும்"

"அவர் பாவம் நல்லா தூங்கிட்டு வேற இருக்காரு, எப்படி எழுப்புறது"

"அப்ப அவர் எங்க போய் உக்காருவாரு"

"நான் கேட்க முடியாது, நீ இங்க வந்தா அவர் எங்க போய் உக்காருவாரு"

"அப்ப நீ அந்த பொண்ணுகிட்ட கேளு, சீட் மாறி உக்காருமான்னு கேளு"

"நா மட்டும் எப்படி கேக்றது. பேசாம பத்திரமா தூங்கு"

"எலெக்ட்ரானிக் சிட்டி நிக்குமான்னு கேட்டியா"

"சரி, நான் மெஜெஸ்டிக் இறங்கி பஸ் பிடிச்சி போய்டுவேன். குட்நைட் செல்லம்"

நானும் தூங்கி விட்டேன்.

நடுநடுவே முழித்த போதேல்லாம் அவனின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

காலையில் "எலெக்ட்ரானிக் சிட்டி" என்று கண்டெக்டரின் குரல் கேட்டு முழித்தேன். அருகில் இருந்தவனை காணவில்லை. முன்னால் நின்று கொண்டிருந்தான். அப்பெண் இறங்கிய பின், சீட்டில் வந்து அமர்ந்தான். நான் பொம்மனஹள்ளி வந்ததும் என்னுடை சால்வையை மடித்துக் கொண்டிருந்தேன்.

"சார் இது மெஜெஸ்டிக் போகுமா?"

"போகாது, மடிவாலா அப்புறம் கலாசி பாளையம்"

"டீ, மெஜெஸ்டிக் போகாதாம், பேசாம நானும் உன்னோட எலெக்ட்ரானிக் சிட்டியிலே இறங்கி உன்ன கொண்டு விட்டுட்டு போயிருக்கலாம்"

மிச்சத்தை கேட்பதற்குள் கண்டெக்டர் "மடிவாலா" என்று கத்த நான் இறங்கிவிட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக