11 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2

இதன் முந்தைய பகுதி

11. இசைப் பயிற்சி

            சிலருக்கு பழமை மீது கோபம் இருக்கும், பழைய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் அவர்களின் சூழல், வளர்ப்பு, அக்கம்பக்கம் அவர்களை மா(ற்)ற விடாது. அப்படிப்பட்ட ஒருவர் மல்லி. ஒரு கிறிஸ்தவனுக்கு சங்கீதம் சொல்லித்தர ஆசைப்படும் அவர், அவரின் சுற்றத்தை தாண்ட முடியாமல், தோட்டத்தில் நாற்பதடி தூரத்தில் வைத்துக் கற்றுத்தருகின்றார். கடைசியில் அவர் உணரும் பயமும், தனிமையும் யதார்த்தம்

12. விளையாட்டு பொம்மை

           ஒரு கட்டத்திற்கு மேல் உடலுக்கு வயது ஏற ஏற முதியவர்கள் மனம் இளமையாகிக் கொண்டே வருகின்றது. சிங்கம் போன்ற ஒரு வக்கீல், வயதாகி ஒரு குழந்தை போல் அனைத்தையும் மறந்து, மூன்று வயது குழந்தை சொல் படி கேட்டு நடக்கின்றார். நல்ல கதை, அப்பெரியவருக்கும் மனைவிக்கும் உண்டான பாசம், காதல் உருக்கம். பல வருடம் வாழந்தவரை விட்டு பிரிவது என்பது சாதரணமல்ல.

13. அக்பர் சாஸ்திரி

          ரயில் பயணங்களில் பல வித மனிதர்களை கண்டிருப்போம். சிலர் பேசுவது எரிச்சலாக இருக்கும், சிலர் பேசுவதைக் கேட்டால் வியப்பாக இருக்கும். நாம் மட்டும் ஏன் இப்படி மக்காக இருக்கின்றோம் என்று தோன்றும்.  அப்படிப்பட்ட ஒருவர் இந்த சாஸ்திரி. ஒரு முற்போக்கான சாஸ்திரி அவரின் குணத்தால் அக்பர் சாஸ்திரி என்று நாமகரணம் செய்யப்படுகின்றார். கடைசி மூச்சு வரை வைத்தியரிடமே போகாத அவரின் கதை.

14. துணை

          சம்பளத்தை விட பென்ஷனை அதிகமாக வாங்கி வரும் இரண்டு கிழவர்கள் மஸ்டர் டேக்கு துணையாக ஒரு இளைஞனை கூட்டி செல்கின்றார்கள். வரும் வழியில் நடந்த விபத்தில் தான் யாருக்கு யார் துணை என்று தெரிகின்றது. கதை சொல்லும் முறை , நகைச்சுவை அபாரம், கேலியும் கிண்டலும் இழையோடுகின்றது.

15. மரமும் செடியும்

       ஒரு சுமாரான கதை. ஏமாற்ற நினைத்தவன் ஏமாந்து போவான் என்ற நீதி போதனை. காய்க்காத எலுமிச்சை தோப்பை விற்று ஏமாற்ற நினைத்த மூங்கில்காரர் லாபம் கிடைத்து ஏமாற்ற முடியவில்லை என்று ஏமாந்து போகின்றார்.

16. காட்டு வாசம்

           வானப்ரஸ்தம் என்று ஒர் வாழ்க்கை முறை கூறப்படுவதுண்டு. கடைசி காலத்தில் வனத்தில் சென்று தவம் செய்வது. சந்நியாசிகளுக்கு குடும்பம் கிடையாது, வானப்ரஸ்தம் செல்பவர்கள் குடுமத்துடன் செல்லலாம். புகையிலை, காப்பியுடன் வானப்ரஸ்தம் இருப்பவரின் கதை.

17. கள்ளி

           கள்ளி பாலைவனத்தில் வளர்வது, அதற்கு தண்ணீர் தேவையில்லை. அதனால் பிரயோசனமுமில்லை. ஆனால் அது ஒரு தொட்டியில் அமர்ந்து கொண்டு நம் வீட்டை அழகு செய்கின்றது. நாமும் அதை பாதுகாக்கின்றோம். அது போலவே சில மனிதர்கள் யாருக்கும் பிரயோசனமில்லை என்று நினைத்தாலும், அவர்களையும் நம்பும் சிலர் இருப்பார்கள். அவர்களுக்காகவாவது நாம் அக்கள்ளிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது. வாழ்ந்து கெட்ட வித்துவானுக்கு நள்ளிரவில் மழையில் நனைந்து கொண்டு வந்து உதவும் கிருஷ்ணன், அவருக்கு உதவ தூண்டும் கள்ளி.

18. குளிர்

           தனியாக இருக்கும் ஒரு கிழவியை பாடாய் படுத்து அவளின் சக குடித்தனக்காரர்கள். அவருக்கு உதவும் பக்கத்து வீட்டுக்காரர். முடிவு செம நக்கல், சத்தமாக சிரித்துவிட்டேன்.

19. ஐயரும் ஐயாறும்

          தியாகராஜரைப் பற்றி ஆராயச்செல்லும் குழுவின் கதை. சரியான நக்கல் கதை. பல கோணங்களை, பலர் கூறும் அபத்தக் கருத்துக்களை சரியாக கிண்டலடித்துள்ளார்,

20. குழந்தைக்கு ஜுரம்

           ஜெயமோகனின் அறம் கதையைப் போன்ற கதை. புத்தகம் எழுதும் எழுத்தாளர், அவரின் பதிப்பகத்தாரிடம் மிச்சப் பணத்தை கேட்கின்றார். அவரோ பணம் குடுத்தாகிவிட்டது என்கின்றார். தன் குழந்தையின் ஜுரத்திற்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லாததால் கோபத்துடம் பதிப்பாளரின் இல்லத்திற்கு போக, அங்கு பதிப்பாளரின் மனைவி கவலைக்கிடமாக உள்ளர். கடைசியில் அவருக்கு உதவி விட்டு வெறும் கையுடன் வீடு செல்கின்றார். நம்மில் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கின்றோம்.

அடுத்த பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக