31 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6


முந்தைய பகுதிகள்


பகுதி 1
பகுதி 4

51. நடராஜக் கால்

       என் உறவினர் ஒருவர், நான் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சைன்ஸ் சேர்ந்த போது அவர் அவர் பெண்ணிற்கும் அதே சீட் தேடினார். கிடைக்காமல் பி.சி.ஏ சேர்த்து விட்டார்.  அதோடு நில்லாமல் எங்கள் வீட்டில் வந்து, பி.எஸ்.ஸி எல்லாம் வேஸ்ட், இப்ப எல்ல்ல்லாம் பி.சி.ஏ தான் என்று கொளுத்தி போட ஒரு வாரம் எரிந்தது. எல்லா ஊரிலும் இது போல வெட்டிப் பந்தா மாகானுபாவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சகலமும் தெரியும், எல்லாம் தூசி. தாம் வாழும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அது பெரிது, மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் வெறும் வெற்றுவேட்டு. அப்படி பட்ட நடராஜரின் தாண்டவம். வெட்டியாக பூர்வீக சொத்தை உக்கார்ந்து அழிக்கும் நடராஜர், ஊரான் பெண்ணின் திருமணத்திற்கு உபதேசம் செய்கின்றார். அக்கால மிராசுதார்களின் வெட்டி பஞ்சாயத்தை சரியாக கிண்டலடித்துள்ளார்.

52. நடேசண்ணா

       தன்னை போல பிறரையும் நினை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ள மக்கள் நிறைந்த உலகம். தன் மன அழுக்குகளை அடுத்தவர் மேல் ஏற்றி, தான் அவ்விடத்தில் இருந்தால் நாம் எப்படி நடப்போமோ அப்படித்தான் அவரும் நடப்பார் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஒரு பாடகருக்கும் அவரது ரசிகைக்கும் இடையிலான் உறவை கொச்சைப் படுத்தி ஊரே பேச, பாடகரின் பாடல் வெளியில் யாருக்கும் கேட்காமல், உள்ளே இறைவனுக்கு மட்டும் கேட்கும் படியாகின்றது. நல்ல கதை. விவரிப்பு, உள்ளாடும் மெல்லிய கேலி.

53. ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்

    டைப்ரைட்டர் சொல்லும் கதை. யாரையோ, எதையோ மையப்படுத்தி எழுதியது போல இப்பொது ஒன்றும் புரியவில்லை.

54. மறு பிறவி

       இதுவும் எனக்கு புரியவில்லை. மட்டன்வாலா (என்ன பெயர் இது), அவர் சொந்த வீட்டிலேயே பூட்டை உடைத்து திருடும் திருட்டு மகனுக்கு, ஜாதகம் பார்த்து பூட்டு தொழில் அமைத்து தருகின்றார். மகன் நான் அசமஞ்சனின் அவதாரம் என்று கூறுகின்றான். அதுவும் அசமஞ்சனின் ஒவ்வொரு அம்சமும் பல இடங்களில் பிரிந்து பிறந்துள்ளது என்று கூறுகின்றான். ஒரு வேளை நிறைய மோசமான பிள்ளைகளை பார்த்து நொந்து போய் கதை எழுதிவிட்டாரோ என்னவோ.

55. மயில்சாமியின் தேவை

      ஆயிரமாயிரம் சம்பாதித்தாலும், சேமிப்பு இருந்தாலும் சில சமயம் கையில் பணமிருக்காது. அப்போது முழிக்கும் முழி அப்பப்பா. சமீபத்தில் மாட்டினேன். பர்ஸை அலுவலகத்தில் வைத்து விட்டு வந்து, பணமில்லாமல் இரண்டு கி.மீ நடந்து சென்ற அனுபவம். மயில்சாமி என்னும் நடிகனுக்கும் அதே பிரச்சினை. காலையில் ஒரு லட்ச ரூபாய் காண்டிராக்டில் கையெழுத்திட்டவனுக்கு இரவு நாற்பது ரூபாய் இல்லாமல் போகின்றது பாவம்

56. கடைசி மணி.

      அலுவலகத்தில் திடீரென நம்மிடம் ஒரு புது பொறுப்பை தந்தால் எப்படியிருக்கும். அதுவும் நம்மை கட்டி மேய்க்கும் ஒருவரின் பொறுப்பை நம்மிடம் தந்தால்? அதை நன்றாக செய்ய வேண்டும் என்ற பயம் உள்ளே இருந்து கொண்டே இருக்கும், அது நம்மை விட்டால் வேறு யாராலும் முடியாது என்ற எண்ணமும் ஓடிக் கொண்டே இருக்கும். மற்றவர்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம் தோன்றும். ஆராவமுது ஒரு நாள் தலைமை ஆசிரியர் ஆகின்றார். தைரியம் வேண்டும் என வேலையாள் சொன்னதை நினைத்து நினைத்து எரிச்சலாகி, தைரியமாக கடைசி மணியை விரைவாக அடிக்கச் சொல்கின்றார். அவரது பெயர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது.

57. பாப்பாவிற்கு பரிசு

       குழந்தை மனது என்பார்கள், யாரையும் துன்புறுத்தாத மனது. ஒரு சிறு குழந்தையை இதைவிட அழகாக சித்தரித்த கதை எனக்கு தெரிந்து வேறு இல்லை. திருடனை பிடித்து கொடுக்கும் தைரியமான பெரிய பெண்ணான பாப்பா, அவனை அனைவரும் அடிப்பதை கண்டு குழந்தை பாப்பாவாகின்றாள். எனக்கு மிகவும் பிடித்த கதை. திருடன் அடிப்பட்டு அழுவதைக் கண்ட குழந்தையின் கோபம், பரிதாபம், அது பேச்சும் பேச்சு என்று குழந்தையைக் கண் முன் நிறுத்துகின்றார்.

58. மூர்ச்சை

        மிகவும் உணர்சிகரமான கதை. மற்றுமொரு பிடித்த கதை. ராயரும், நாகராஜ பிள்ளையும் நண்பர்கள். ராயர் மரணப்படுக்கையில் விழுந்த நாள் முதல் பிள்ளை அருகிலேயே வருவதில்லை. அனைவரும் அவர் பயந்து ஒதுங்கியதாக நினைக்க அவர் ராயரின் உயிரை மீட்டு வருகின்றார்.

59. தங்கம்

      அடங்கப்பிடாரியாக திரியும் பையனை அடக்க நினைக்கும் ஆசிரியர், தன் வீட்டிலேயே வைத்து படிப்பை திணிக்க முயற்சிக்கின்றார். அனைத்தும் முயற்சிகளும் வீணாகின்றது, கடைசியில் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கின்றான்.


       தவறுக்கு பரிகாரம் செய்வது எதற்கு? ஒன்று தவறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்வதற்கு, அவர்களுக்கு இழப்பிருந்தால் அதை சரி செய்வதற்கு. மற்றொன்று தவற்றை மறப்பதற்கு, குற்ற உணர்விலிருந்து விடுபடுவதற்கு. குழந்தையிடம் இருந்து திருடிய ரூபாயில் சாமியாருக்கு கருணையும், பழமும் வாங்கிச் செல்லும் செட்டியாருக்கு குற்ற உணர்வு துரத்துகின்றது. சாமியார் கையால் அடிவாங்கிக் கொண்டு, பிடி கருணையை எடுத்துக் கொண்ட் திரும்பிச் செல்கின்றார்.

அடுத்த பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக