30 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5


முந்தைய பகுதிகள்


பகுதி 1

41. இவனும் அவனும் நானும்
            தி. ஜாவின் கதைகள் சில கொஞ்சம் வரம்பு மீறிய உறவுகளை, மன விகாரங்களைப் பற்றி நாசுக்காக தொட்டுச் செல்லும். பல இசையுடன் இழைந்து செல்லும். இவன் அவன் மனைவியைப் பற்றி மனதில் சேர்த்து வைத்திருக்கும் குப்பையை அவன் தன் இசையால் சுத்தப்படுத்துகின்றான். நான் என்னும் மனசாட்சி மீண்டும் குப்பை சேருமா? என கேட்டுக் கொண்டுள்ளது. பிடித்த கதையில் ஒன்று. அவன் பாடும் வர்ணனை நாமும் ஒரு தூய இசையை கேட்கும் அனுபவத்தை தருகின்றது. ஒரு அருமையான கதை.

           பல பழங்கால பெரியவர்கள் பேசுவதைக் கேட்டால் அப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லையே என்று ஒரு ஏக்கம் உண்டாகும், சில சமயம் நமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது நேர்மைக் குறைவு என்பது அப்போது மரியாதை, அந்தஸ்த்தாக இருந்திருக்கின்றது. ராஜா காலத்து காணிக்கை மரியாதை சில காலம் வரை அதிகாரிகளுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரியவர் கதை. தி. ஜாவின் தஞ்சாவூர் வர்ணனை ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கின்றது. லஞ்சமாக பெற்ற பணத்தை பெருமையாக பேசும் அவர் நித்திய நியமை தருவது ஒரு அருவெருப்பைத்தான்.


          பிடித்த சிறுகதை. முத்து ஒரு சமையல்காரர். வயது அவரின் திறமையின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவரது ஒரே மகன் அக்கண்ணா குட்டி, உருப்படாதது என்று ஆசிர்வதிக்கப்பட்டும், வெளியே எங்கோ வேலைக்கு சேர்ந்து அப்பாவிற்கும் பணம் அனுப்புகின்றான். அவனுக்கு சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் தரும் புண்ணியவானைப் பார்க்க போகும் முத்து, அவ்வளவு பணம் தரக்காரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். முடிவில் அவர் மனம் மெதுவாக மாறக் காரணம் பணமா? இல்லை உண்மையான அறிதலா?

44. தேடல்

         கொஞ்சம் பெரிய கதை.  ராமரத்தினமும் கண்ணனும் நண்பர்கள். ராமரத்தினம் தனியே இருப்பவர். கண்ணனுக்கு ராமரத்தினத்தின் கதை ஒரு நாள் தெரிய வருகின்றது. ராமரத்தினத்தின் மனைவி அவரது ஷட்டகருடன் சென்று விட்டதும், அவரின் பெண் கல்லூரியில் படிப்பதும் தெரிய வருகின்றது. ராமரத்தினம் அவரது மகளை தேடி கண்டு பிடிக்கின்றார், தன் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துக் கொள்கின்றார். இது போன்ற விவகாரமான் விஷயங்களை கையாள்வதில் தி. ஜா ஒரு மாஸ்டர். இதிலும் அவர் மனைவியின் அயல் உறவை சர்வசாதரணமாக ஒரு வார்த்தையில் சொல்லி செல்கின்றார்.

45. அருணாச்சலமும் பட்டுவும்

          துறவு கொண்டு ஓட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலனோருக்கு வரும். அதாவது பொறுப்புகள் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை. திருமணமாகி சாஸ்திரப்படி வாழ்ந்துவரும் அருணாச்சலம், ஈஸ்வரனிடம் (எனக்கென்னவோ காஞ்சி பெரியவரை குறிப்பிட்டுள்ளாரோ என்று சந்தேகம்) சென்று துறவரம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார். அவர் அருணாச்சலம் ரிட்டையர்ட் ஆனபின் பார்க்கலாம் என்று அனுப்பி வைக்கின்றார். ஆனால் அருணாச்சலம் பட்டு என்னும் அவரது மாணவியுடன் சேர்ந்து கொண்டு, துறவரத்தை துறக்கின்றார்.


      வீட்டில் திருடும் ஆயாவை சந்தேகப்பட்டு வேலையிலிருந்து நிறுத்துகின்றனர். மகன் திருட்டை கண்டித்து அவளை ஒத்துக் கொள்ள சொல்கின்றான். ஆயா அதை மறுக்கின்றாள். இக்கதையை அவன் தன் நேர்முகத் தேர்விற்கு செல்லும் பள்ளியில் சொல்கின்றான். கடைசில் மகனுக்கு வேலை கிடைக்கும் முன் ஆயாவிற்கு வேலை கிடைக்கின்றது.

47. சுளிப்பு

         ஒரு ஆசிரியர் படும் பாடு, மூணும் மூணும் ஆறு என்பதை தலையில் ஏற்ற அவர் தலைகீழாக நிற்கின்றார். பையன் அவரை ஏமாற்றி விட்டு வீட்டிற்கு ஓடி போகின்றான். அப்பையனின் முகச்சுளிப்பு, அவர் ஜெயித்த மனைவியின் முகச்சுளிப்பை நினைவுபடுத்துகின்றது. திருமணத்தின் போது அவரின் அம்மை முகத்தைக் கண்டு சுளிக்கும் மனைவி, சில நாள் கழித்து அவரின் உடலை ரசித்து சிரிக்கின்றாள். மாணவனைத் தண்டிக்க சென்ற ஆசிரியருக்கு அவர் மனைவி நினைவு வந்து வீட்டிற்கு போகின்றார். கூடப்படிப்பவனுக்கு அடிவாங்கி வைக்க ஆசைப்படும் சிறுவர் உலகம் அழகாக வெளிப்படுள்ளது.

48. ஆடை

     வெறும் உரையாடல்கள் மட்டும் தான் கதை. ஒரு பிராமணர், சாஸ்திரிகளாக இருக்கலாம். ஊரில் டிராமா ஆடும் பெண்ணை பார்த்து நிலை தடுமாறுகின்றார். அவள் அவருக்கு ஆடை தானம் மூலம் மெலிதான அதிர்ச்சி வைத்தியம் தந்து அவரை வழி மாற்றுகின்றாள். அவ்வாடை கடைசியில் அப்பெண்ணுக்கே பயன்படுகின்றது, அதை அறியும் நிலையில் அவளில்லை. எதையும் விளக்கவில்லை, யார் உரையாடுகின்றார் என்பதுமில்லை, பெயர்களுமில்லை. ஒரே பெயர் துரைக்கண்ணு, ஆனாலும் கதை நமக்கு புரிகின்றது. இது போன்ற உத்தியைத்தான் சுஜாதா கிட்டத்திட்ட அனைத்து கதைகளிலிலும் பயன் படுத்தினார்.

49. கிழவரைப் பற்றி ஒரு கனவு

       இரண்டு மாதம் சாப்பிட்டதற்கு பணம் கேட்காமல், தகப்பனை ஊருக்கு அனுப்பும் ஒரு தாரள மனம் படைத்த பெரிய மனிதர். அனேகமாக தி. ஜா டெல்லியில் பார்த்த யாரவது ஒரு பெரிய மனிதராக இருக்கும். அப்பெரிய மனிதர்களின் அந்தஸ்து மோகத்தை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

50. எருமைப் பொங்கல்

       மாட்டுப் பொங்கல் கொண்டாடி பசுக்களை கொண்டாடும் நாம், பாவம் எருமைகளை விட்டு விடுகின்றோம். எருமைகள் பேசிக் கொண்டால்? பசுவை தெய்வமாக்கி, எருமையை மகிஷியாக்கி விட்டோம். பசு எருமை என்று மனிதர்களின் பிரிவினையைப் பற்றி பேசுகின்றாரோ என்னவோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக