பொங்கல் விஜயத்தின் போது ஊரில் படித்தது. அப்புத்தகம் எப்படி என் வீட்டில் வந்தது என்று இன்னும் தெரியவில்லை. எப்போதோ எங்கோ ஓசி வாங்கி வைத்திருந்திருக்கின்றேன். குப்பையை குடைந்த போது கிடைத்தது. பொங்கல் தின்ற மயக்கத்தில் அரைத் தூக்கத்தில் படிக்க ஆரம்பித்தேன். நடுநடுவே தூக்கம் கலைக்க அலுவலகத் தொல்லைகள். மீண்டும் தூக்கத்தை விரட்டிப் பிடிக்க உதவி செய்த புத்தகத்தை பற்றி எழுதாவிட்டால் தூக்கம் வருமா?
தமிழ்வாணனின் சங்கர்லால் கதாபாத்திரம் அக்காலத்தில் மிகவும் பிரபலம் என்று கேள்விபட்டிருக்கின்றேன். அவரும் பிரபலம்தான், தொப்பியும் கண்ணாடியும் மட்டுமே விலாசத்தில் போட்டால் போதும், கடிதங்கள் அவருக்கு போய்சேர்ந்துவிடும் என்பதாக சரித்திரம் சொல்கின்றது.
பல கதைகள் மூலம் பிரபலமானவர். இக்கதை மிக முக்கியமானது, சங்கர்லாலுக்கு திருமண ப்ராப்தம் இக்கதையில் தான் கிடைத்துள்ளது.
கதை எல்லாம் அக்கால கதை, ஒரு பணக்காரர் கொலை செய்யப்படுகின்றார். கையில் கத்தியுடன் அவரது பெண் பிடிபடுகின்றார். அவளைப் பார்த்து கண்ணீர் விடும் போலிஸ்காரர் வகாப், சங்கர்லாலை துப்பறிய அழைக்கின்றார். அவர் ஸ்டெயிலாக மாது குடுத்த தேநீரை குடித்துக் கொண்டே மர்மங்களை அவிழ்த்து, கத்தியுடன் பிடிபட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்.
சங்கர்லால் ஒரு வானத்தில் பறக்கவில்லை அவ்வளவுதான், மற்றபடி அவர் ஒரு மேதாவி. ஹோட்டல் பையன் கூட அவருக்கு திருமணம் ஆகவில்லையே என்று விசனப்படும் அளவிற்கு பிரபலம். சிகரெட் பெட்டியில் கேமெரா, பெண்வேடம், கான்ஸ்டபிள் வேடம் என பல வழிகளில் புகுந்து குற்றவாளியை கண்டு பிடிக்கின்றார்.
தூக்கம் வர வேண்டுமா, கண்டிப்பாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கின்றேன். கண் மேல் பலன் கிடைத்தது எனக்கு. தலைப்பு கூட சரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படித்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக