01 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 7


முந்தைய பகுதிகள்


பகுதி 4

61. சந்தானம்

        எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும், நாய்கள் போன்று விசுவாசமானவை அல்ல என்றாலும், குழந்தை போல நம் மீது உரிமை எடுத்து விளையாடும். முத்தையா என்னும் சாகச போலிஸ்காரருக்கு பூனை என்றால் கொள்ளை பயம், அவரின் எதிர் வீட்டுக் காரருக்கு பூனைதான் குழந்தை. முத்தையாவின் பூனை பயம் யாருக்கும் தெரியாது. முதலியார் வளர்த்த பூனையை வைத்து, முத்தையாவின் மகன் அவரை பயப்படுத்தியதால் முதலியாருக்கும் அது தெரியவருகின்றது. முத்தையா இறந்த நாளன்று, பூனை கிணற்றில் விழ, முதலியார் துடித்து போகின்றார். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், தமக்கு வலி வந்து துடிப்பதை விட, அவைகளின் வலி கண்டு துடிப்பது அதிகம்.


      ஈகோ (சரியான தமிழ் வார்த்தை என்ன?). மனிதனின் மனதினுள் உள்ள அழுக்குகளை, அதன் விகாரங்களை, அதன் நியாய அநியாய வாதப்பிரதிவாதங்களை இது போல வேறு எந்தக் கதையும் சொன்னதில்லை அல்லது நான் படித்ததில்லை. தி.ஜாவின் மாஸ்டர் பீஸ். சாமநாது தன் அண்ணண் மகனைக் கண்டு பொறாமைப் படும் ஒரு வலுவான, வயதான பெரியவர். அவரின் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை, அழுக்கை அழகாக எழுதியுள்ளார். ஆரம்ப வர்ணனையிலிருந்து, அவரின் மனதிற்குள் நினைக்கும்  சம்பாஷணைகள், இறுதியில் அவர் பாயசத்தை கவிழ்த்துவிட்டு ஒரு கணம் தடுமாறும் நிலை வரை அருமையான விவரிப்பு. அருமையான நடை. அந்த காவேரித்தமிழை இவரை விட அழகாக செய்தவர்கள் யாரவது உள்ளார்களா?

63. தாத்தாவும் பேரனும்

       "சுத்த ஷத்திரியர்கள் தோற்றுப் போகலாம், தற்கொலை செய்து கொள்ளலாம், எந்தப் பெண்ணையும் தீண்டிச் சுவைக்கலாம், அவர்கள் தொட்டதை மட்டும் சாப்பிடக் கூடாது. என்ன அழகான தர்மம்" 

ஷத்திரியன் அல்ல என்பதால் தாத்தா மகாநாபரால் ஒதுக்கி வைக்கப்படும் விடூபன், அவரின் மீது படையெடுத்து வெல்கின்றான். தான் ஷத்திரியன் அல்ல என்பதால் தன்னுடம் உண்ண மறுத்த தாத்தாவவிற்கு அதையே தண்டனையாக விதிக்க, அவர் அதைவிட மரணத்தை தண்டனையாக பெருமையாக ஏற்கின்றார். போலித்தனமான தர்மத்தை தலையில் அடிக்கும் கதை.

64. புண்ணிய பாங்க்

       ஒரு மத்தியமர் கதை. ஒரு சாதரணன், வேலை ஏதுமில்லாமல் ரத்த தானம்(?) செய்து அதில் வரும் பணத்தில் தன் நோயாளி மனைவிக்கு சாப்பாடு வாங்கிச் செல்கின்றான். ரத்ததை விற்றது வெளியே சென்றதும் அது சேவையாகின்றது. அதோடு ஒரு மனத்திருப்தி வேறு, ரத்த தானத்தால் கிடைத்த புண்ணியத்தை எண்ணி.

65. அதிர்வு

        கொஞ்சம் சரித்திரம். கரூவூர்த் தேவர் கதாபாத்திரம். அவர் ராஜராஜனிடம் இருந்தவர் என்று தெரியும். அவர் சித்தர் என்பது இதைப் படித்த பின் தான் தெரியும். செங்கமலம் என்னும் தாசி, கரூவூர்த்தேவரை தன் வீட்டிற்கு அழைக்கின்றாள். அவரின் அதிர்வு அவளின் கசப்பை போக்குகின்றது. எல்லையற்ற வடிவத்தின் ஒரு சிறிய புள்ளியை கண்டதே அவளை மாற்றுகின்றது, முழுவதும் கண்டவர்?

66. ஒரு விசாரணை

           மாதவன் படம், திருமணம் ஆன அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரின் தங்கை வந்து "அண்ணா எங்காத்துல உன்ன கூப்டறா" என்பார். மாதவன் ஒரு முழி முழித்து "இது எப்ப இருந்து" என்று முனங்கிக் கொண்டு செல்வார். அது எல்லா இடத்திலும் நடப்பதுதான், திருமணமான உடன் பெண் புகுந்த வீட்டை தன் வீடாக்கி கொள்வது. நாடக குழுவில் இருக்கும் லீலா தனக்கு பிடித்தவனை திருமணம் செய்து கொள்கின்றாள். நாடக முதலாளியிடம் பஞ்சாயத்து, அவரும் வேலையை விட்டு இதை விசாரிக்கின்றார். அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருக்கின்றாள். கடைசியில் "எங்க வீட்டிற்கு போறேன்"என்று கூறிவிட்டு போகின்றாள். கடைசியில் விநாயகர் சதுர்த்திக்கு அழைக்கும் அம்மாவிடம் "எங்க வீட்டிற்கு போகின்றேன், எங்க வீட்ல பிள்ளளையார் இல்லையா? கொழுக்கட்ட கொண்டு வந்தா மாமியார், நார்த்தனாருக்கும் சேர்த்து கொண்டு வா" என்று கூறிவிட்டு அவள் வீட்டிற்கு போகின்றாள்.

67. பஸ்ஸும் நாய்களும்

       டில்லி நகர வாழ்க்கையின் ஒரு சாம்பிள். சாமான்யர்கள் பஸ்ஸில் மிதிப்பட்டு போக, அதிகாரிகள் காரில் நாயுடன் வாக்கிங் போகின்றார்கள். அவர்கள் வாக்கிங்க் போகும் இடத்தில் தெருநாய்கள் இருப்பது அவர்களுக்கு அவமானமாக இருக்கின்றது. பெரிய இடத்து மனிதர்களைப் பற்றிய அழகான கேலி.

68. நேத்திக்கு

     குதிரைப் பந்தயத்திற்கு ஆச்சரமாக போகும் தாத்தா. பல நாட்களாக ஏமாற்றிய குதிரை, இன்று ஜெயித்து கடமையை முடித்துக் கொண்டு போகின்றது. குதிரைப் பந்தயத்திற்கு போவது என்னவோ ஒரு யக்ஞத்திற்கு போவது போல இருந்திருக்கின்றது. "பசு மாட்டு பார்ப்பான், எருமை மாட்டு பார்ப்பான்" கேட்க நன்றாக இருக்கின்றது. யாரையாவது கோட் வேர்டில் திட்ட பயன்படுத்தலாம்

69. மாப்பிள்ளைத் தோழன்

        அடித்து பிடித்து ஓடி நண்பனின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக அமர்கின்றான். பெண்ணை பார்த்து அவனுக்கு அதிர்ச்சி. இவனுக்கு இப்படி ஒரு பெண்ணா என்று. ஒவ்வொன்றையும் பார்த்து நொந்து கொண்டே வருகின்றான்.  கடைசியில் சமையல்காரனின் பேச்சு அவனை நெகிழ வைக்கின்றது.

          ஏதோ கான்வென்ட் பாட்டு "மேரியின் ஆட்டுக்குட்டி". இது எல்லாம் படித்தது போல நினைவில்லை. ஒரு வேளை இது எல்லாம் 80களுக்கு முன் இருந்த பாட்டோ, இல்லை ஆங்கில பள்ளிகளுக்கு மட்டுமான பாட்டோ என்னவோ?திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்றுக் கொண்ட சாவித்திரிக்கு அவள் குழந்தை ராஜமணிதான் மேரியின் ஆட்டுக்குட்டி. ஏமாற்றியவன் திரும்பி வந்தாலும் அவள் ஆட்டுக்குட்டியுடன் ஹாஸ்டலிலேயே இருக்கின்றாள். பாட்டை முழுவதும்படித்தால் கதையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்க முடியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக