19 ஜனவரி 2013

பயாஸ்கோப் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கட்டுரை தொகுப்பு. சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டும். அசோகமித்திரன் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்து வந்திருக்கின்றார். அந்த அனுபவங்கள் ஏற்கனவே நாவல்களாக மாறி இருக்கின்றது. அதைத் தவிர சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

இந்திய சினிமா, உலக சினிமா (இந்தியா வேறு உலகம் என்பது பலரின் எண்ணம் போல, பெரும்பன்மையோர் வழியே நம் வழி) பற்றி விபரமாக எழுதியுள்ளார். 

கட்டுரைகளை சினிமா புள்ளிகளை பற்றியவை, குறிப்பிட்ட சினிமாக்களை பற்றியவை, ஜெமினி ஸ்டூடியோவின் வரலாறு (கிழக்கில் இருந்து ஏன் இன்னும் ஜெமினி ஸ்டூடியோ - கனவின் கதை வரவில்லை?)  என பல வகையாக பிரிக்கலாம். பல சுவாரஸ்யமான தகவல்களை அவருக்கே உரித்தான சுருக் நறுக் நடையில் எழுதியுள்ளார். சில தகவலகள் மிகப் பழையவை, அது தேவையா, அது ஏன் இப்போது என்று கூட எண்ணலாம், அதற்கு பதில் அவரே தருகின்றார். "மனித நினைவு, மனித தேர்விற்கும் கட்டுபாட்டிற்கும் உட்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது"

முக்கிய கட்டுரைகள் என்றால் ஜெமினி ஸ்டூடியோவைப் பற்றிய கட்டுரைகள். ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் கதையை கொஞ்சம் சுருக்கமாக எழுதியுள்ளார். ஏகப்பட்ட தகவல்கள், ஒளவையார் படம் பற்றி அனைவருக்கும் தெரியும், அது சுமார் ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம் என்றும், சுமார் பத்து மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருந்ததை வாசன் எப்படி மூன்று மணி நேரத்திற்கு மாற்றினார், அதை வெற்றி பெற வைக்க எப்படி மார்க்கெட்டிங் செய்தார், என்பதைப் பற்றியெல்லாம் ஏகப்பட்ட தகவல்கள். ராஜாஜி பார்த்த படம், அதுவும் இரண்டு முறை பார்த்த படம், அதை விட அப்படத்தை பற்றி ராஜாஜியின் உண்மையான கருத்து என பல புதிய தகவல்கள். அவர் எழுதியிருப்பதைப் படித்தால் ஜெமினியின் படங்கள் அனைத்தும் சோக காவியங்கள் போல, அனைவரும் அழுது கொண்டே வர வந்திருக்க வேண்டும்.

பராசக்தி என்னும் திரைப்படம் எப்படி தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக இருந்தது, அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை பல கட்டுரைகளில் விவரிக்கின்றார். அதே சமயம் அப்படத்திற்கு ஒரு கொட்டும் வைக்கின்றார்.

அக்கால திரைப்படங்கள், வட இந்திய முக்கிய திரைப்படங்கள், நான் பிறப்பதற்கு பல வருடம் முன்பு வெளிவந்த திரைப்படங்கள் பற்றி விவரங்களை படிக்க கொஞ்சம் போரடிக்கின்றது. அதே சமயம் உத்தம புத்திரன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம், எந்த திரைப்படங்கள் எப்படி திருடப்பட்டன என்பதான வம்புகள் தேவையாகத்தான் இருக்கின்றன.

// இன்று ரஜினி, கமல் பேசும் வசனங்களை கேட்கும் போது, மவுனப் படங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வருகின்றது//

சிவாஜி நடிப்பையும் கிண்டலடித்துள்ளார். பல பழைய்ய்ய்ய்ய்ய்ய கதாநாயகிகள் பற்றிய தகவல்கள். 

சில முக்கிய திரைப்படங்கள் பற்றிய சிறிய விமர்சனம். ஒரு சந்தோஷம், அனைவரும் புகழும் என்டர் தி டிராகன், படம் ஒரு சாதரணப் படமாக்த்தான் எனக்கு தெரிந்து. லீயை தவிர்த்தால் அது ஒரு குப்பை. இவரும் அதைத்தான் சொல்கின்றார். புதுமைபித்தனை அவ்வளவாக இவருக்கு பிடிக்காதோ, அவரை "அந்த எழுத்தாளர்" என்று ஒரு விதமாக குறிப்பிடுகின்றார். அவரது சிற்றன்னையின் பாதிப்பில் வந்த உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள், பசி போன்ற திரைப்பட விமர்சனங்களும் இதில் அடக்கம்.

பல இடங்களில் வாய்விட்டு சத்தமாக சிரிக்க வைத்துவிடுகின்றது இவரது குசும்பு. பல இடங்களில் தத்துவமும், வாழ்க்கையைப் பற்றிய அலசல்களும் நிறைந்தது. வெறும் சினிமா தகவலகளை மட்டும் தருவதாக இருந்தால் அதற்கு எதற்கு அசோகமித்திரன், வண்ணத்திரை போதும். சினிமா வழி வாழ்க்கையைப் பற்றியும் பேசுகின்றார். சினிமாவில் பெண்களின் போக்கு, சினிமா உலகு அடைந்துள்ள மாற்றம் அவரின் கவலையைப் பார்த்தால் ஒரு பெரியவரின் வழக்கமான கவலை போலத்தான் தோன்றுகின்றது. பழைய படங்கள் மீதான அவரது நினைவுகள் புதிய மாற்றங்களை முழுவதும் ஏற்க மறுக்கின்றது, அதே சமயம் அவரது அறிவு புதிய மாற்றங்களை முழுவது நிராகரிக்கவும் மறுக்கின்றது.

திரைப்பட உலகைப் பற்றிய ஒரு அருமையான அலசல்கள் நிறைந்த கட்டுரை.  சில கதைகளும் உண்டு, கட்டுரையே ஒரு சிறுகதை போல அமைந்துள்ளது. திரைப்பட ரசிகர்களும், அ. மி ரசிகர்களும் படித்து ரசிக்க கூடிய புத்தகம்.

கிழக்கு பதிப்பகம் - 240 (சினிமா தியேட்டரின் ஒரு கம்போ பாப்கார்ன் விலைதான்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக