05 ஜனவரி 2013

1945ல் இப்படி இருந்தது - அசோகமித்திரன்

மற்றுமொரு அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு. முன்பு சொன்னதே மீண்டும். இது ஒரு சிறிய அறிமுகம், கதையின் அனுபவம். அவ்வளவே

காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகம். ஒரு விநோதம், ஒரே பக்கம் இரண்டு தடவை அச்சாகியுள்ளது. தலைப்பு இரண்டு தடவை, நூல் அறிமுகம் இரண்டு தடவை, மறுபடியும் உள் தலைப்பு இரண்டு தடவை, அட்டவணை இரண்டு தடவை. பார்த்ததும் பயந்து போனேன். கதைகளும் இரண்டு இரண்டு பக்கம் இருக்குமோ என்று. நல்லவேளை இல்லை.

அசோகமித்திரனின் செகந்திராபாத், சென்னை அனுபவங்கள் கதையாகியுள்ளது, சாதாரணச் சம்பவங்கள் என்று தோன்றுவது எப்படி ஒரு கதையாக மாறுகின்றது என்பதற்கு உதாரணம் இக்கதைகள்.
1. கோல்கொண்டா

       கோல்கொண்டா எப்போதோ என் மாமா போய்விட்டு வந்து காட்டிய புகைப்படங்களில் பார்த்தது. அதைப் பற்றி அதிகம் கேள்விபட்டதுமில்லை.  கோல்கொண்டாவை ஆண்ட மன்னன் டணாஷா, கோல்கொண்டா மீது படையெடுத்து வருகின்றான் ஒளரங்கசீப். இவனைப் பற்றி மதனின் தயவால் கொஞ்சம் தெரியும். ஒளரங்கசீப்பின் விநோத நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால், டணாஷவிற்கு அவனை எதிர்ப்பதை விட வேறு தெரியவில்லை. கடைசியில் அவனது மந்திரி மாதண்ணா, அந்நிபந்தனையை நிறைவேற்றுகின்றார்.

2. உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள வித்தியாசம்*
       
          நீண்ட தலைப்பு. உண்மையை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலும் உண்மைக்கும் புரிதலுக்கும் நடுவில் ஒர் இடைவெளி இருக்கும் சாத்தியம் அதிகம். குழந்தையில்லா தம்பதியர் வீட்டில் உறவாக வரும் அத்தை, அவள் இறந்த பின் தெரியவரும் உண்மை, தம்பதியரின் நெருக்கத்தை காட்டுகின்றது. தலைப்பையும் முடிவையும் சேர்த்தால் அவர்களுக்கு ஏன் குழந்தையில்லை என்று ஒரு யூகம் செய்ய வைக்கின்றது. கதை ஏற்கனவே கேள்விபட்ட கதை, படத்தில் கூட நகைச்சுவை பகுதிகளில் வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.


3. கோணல் கொம்பு எருமை மாடு*
   
      வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்களுக்குத்தான் தெரியும் அவைகளின் அருமை. முதலில் அவைகளிடம் எரிச்சலாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கூட மெதுவாக அதனிடம் நெருக்கிவிடுவார்கள். வாய்பேச முடியாத அப்பிராணிகள், தம் கண்களாலும், உடலாலும் தன் அன்பைக் காட்டுவதை, நம்மால் காட்ட முடியாது. 18ம் அட்சக் கோட்டில் வரும் எருமை மாடு, அதிலே ஒரு சின்ன காட்சியாக வருவதை நீட்டி ஒரு சிறு கதையாக எழுதியுள்ளார்.  

"அதுக்கு வலிக்காது  என்று சிரித்துக் கொண்டே சொன்னார், எங்களுக்கு வலித்தது"

4. ஒரு சொல்

          "நீங்கள் கொடுமைப் படுத்தி எனக்கு சர்க்கரை வியாதி வந்ததுவிட்டது" என்று கூறும் மனைவியின் கணவன் (" மனைவியின் கணவன்" என்ன ஒரு மோசமான வாக்கிய அமைப்பு) கதையைப் படித்தால் யார் யாரை கொடுமை படுத்துகின்றார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலான் வீடுகளில் நடப்பதுதான், அப்பாவி கணவன், இது போன்ற சொற்களை கேட்டு விட்டு, கடைசியில் ஒரு வாரம் சமையல் செய்ய வேண்டாம் என்று சந்தோஷப்படுகின்றான் பாவம்

5. சுப்பாராவ்*
     
        சுஜாதாவின் ஒரு அருமையான கதை "பேப்பரில் பேர்", அது போன்ற ஒரு கதை. சுஜாதா கதை ஒரு மாதிரி இது வேறு மாதிரி. ஒரு குட்டி அணி ஒரு பெரிய அணியுடன் மோதி ஜெயிக்கின்றது. அமைதியான நடையில் அழகாக எழுதியுள்ளார். நடுநடுவே அவரது நகைச்சுவை 

"எறும்பு வேகத்தில் போலிங்க் போட்டால் கூட அவன் விக்கெட்டில்ருந்து பத்தடி தள்ளியிருப்பான்"

"அவன் பந்து போட்டால், நீயூட்டனின் விதியிலிருந்து விலக்கு, உருண்டு உருண்டு போகும்"

ஆட்டத்தில் வென்றால் கூட, ஸ்லிப்பி கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தது பெரிய தோல்வியாகின்றது.

6. தேள்

      இது கதை லிஸ்டில் வராது. ஆசிரியரின் அல்லது வேறு யாரோ ஒருவரின் அனுபவம். அவரின் அப்பாவை வரிசையாக தேள் கடித்த கதை, அவர் இறக்கும் முன் கதை சொல்லி பாம்பை பார்த்த கதை.இது எப்படி கதை லிஸ்டில் வருமோ. அந்தக் கடைசி பாரா மட்டும் தான் இது கதையில்லை என்று தோன்ற வைக்கின்றது. அது இல்லை என்றால் ஒரு கதை வடிவம் இருந்திருக்கும் என்று தோன்றுகின்றது

7. யார் முதலில்
 
            மோகன் ஒரு ட்ரெய்னர், நாய்களுக்கு. நாய்கள் சொல்படி கேட்பவை, இருந்தும் அதை சரியாக வளர்க்காவிட்டால் கஷ்டம்தான். இங்கு தெருவில் வாக்கி அழைத்துச் செல்லப்படும் நாய்களைக் கண்டால் எப்போதும் பயம்தான். ஆனால் அவை நம்மை எவ்விதத்திலும் மதிக்காது. மோகனின் குழந்தைக்கு ஜுரம், மனைவி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க, அவன் வழக்கம் போல பயிற்சி அளிக்க ஒரு வீட்டிற்கு செல்கின்றான். அங்கு வீட்டு எஜமானியம்மாளுக்க உடல்நிலை சரியில்லை. நாய்க்கும் ஜுரம். அம்மாள் வீட்டை விட்டு மருத்துவ மனைக்கு போக மறுக்கின்றாள். மோகன் வீட்டிற்கு வந்த பின் நாயின் மரணச்செய்தி கேட்கின்றது. நாய்தான் முதலில்.

8. வெள்ளை மரணங்கள்*

         சிறுவயது உலகத்தில் எதையும் ஒரு முறை செய்து பார்க்கத்தொன்றும். ஒரு ஆர்வக்கோளாறு இருந்து கொண்டே இருக்கும். ரயில்வே குவார்ட்டர்சில் இருக்கும் சிறுவன் ஊர் சுற்றி. எப்படியோ ஒரு அனுமார் கோவிலிக்கு வழி கண்டுபிடித்து, தன் அக்காவையும் கூட்டிக் கொண்டு போகின்றான். அக்கா அவனைவிட பெரிய ஆள், அக்கோவிலுக்கு அவனுக்கு தெரியாத குறுக்கு வழி கண்டுபிடித்து போகின்றாள். அவனுக்கு ஏற்பட்ட கடுப்பில் அக்குறுக்கு வழியை கண்டறிந்து போகும் போது, வழியில் ஒரு இடுகாட்டை காண்கின்றான். அது அவனை அடிக்கடி இழுக்கின்றது. அது வெள்ளைக்காரர்களின் இடுகாடு, எங்கோ பிறந்து வேறு நாட்டில் வந்து மூச்சை நிறுத்தியவர்களின் இடம். மரணம் யாருக்கு நிகழ்ந்தால் என்ன, அது கொடுமையானது. குழந்தைமனம் கலங்குகின்றது. அவனுக்கு எப்போதோ இறந்த அண்ணனை நினைத்து அழும் அம்மா நினைவு வருகின்றது, இறந்தவன் ஒவ்வொருவனும் யாருக்கோ மகன், அண்ணன், கணவன், தகப்பன் என்ற எண்ணம் அவனை அழவைக்கின்றது.

9. கடை திறக்கும் நேரம்
   
        வடிவேலுவின் பிரதீபா ஒயின்ஸ்(?) கடை சீன் தான் கதை. இது என்ன கதை என்று லிஸ்டில் சேர்த்துள்ளார்கள். யாராவது பெரிய இலக்கியவாதி இதன் அர்த்தத்தை விளக்குவாராக

10. நாடக தினம்
  
       சண்முக சுந்தரம் நாடக நடிகர், ஆசிரியர். அவரின் ஆஸ்தான நடிகை நாடக தினமன்று, இவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போகின்றாள். வேறு வழியின்றி அவரின் முன்னாள் கதாநாயகியின் காலில் விழுந்து அவளை நடிக்க கேட்டுக்கொள்கின்றார். அந்த கடைசி பாராவில் ஒரு ட்விஸ்ட். சண்முகசுந்தரத்தின் முகத்தை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

11. புத்தகக் கடை.

       ஒரு சிறுவன் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் சென்று புத்தகம் வாங்குவதுதான் கதை. சிறுவர்களுக்கு ஒரு தொந்தரவு எப்போதும் உண்டு, பெரியவர்கள் சிறுவர்களிடம் எடுத்துக் கொள்ளும் அதீத உரிமை. சிறுவர்களின் பொருட்களை வைத்து விளையடுவது, தன்னையொத்தவர்களிடம் காட்ட முடியாத அதிகாரத்தை அவர்களிடம் காட்டுவது, அவர்களின் புத்தகங்களை சுடுவது வரை. அப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக் கொண்ட சிறுவனின் கதை.

12. 1945ல் இப்படி இருந்தது
   
       கங்காராம் என்னும் பள்ளி வாட்ச்மேனுக்கும் பள்ளிச் சிறுவனுக்குமான கதை. கங்காராமை தவறான நடத்தை என்று கூறி டிஸ்மிஸ் செய்து அனுப்புகின்றார்கள். சிறுவன் கங்காராம செய்திருக்க அதை செய்திருக்க மாட்டான் என்று பிரின்ஸ்பாலிடம் சிபாரிசு செய்கின்றான். பிரின்ஸ்பாலும் அவன் மீது புகார் செய்தவனின் தராதரத்தை கணக்கிட்டு மீண்டும் செர்த்துக் கொள்கின்றார். இக்கதைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கண்டு பிடித்து சொல்பவர்கள் உண்மையில் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய வாசகராவார்.

13. நிஜம்

       சினிமா பார்க்கும் பூபதிக்கு நிஜம் என்றால் என்ன என்று சந்தேகம் வருகின்றது. வாழ்வில் நிஜம் என்று உரைக்கப்படுவது எல்லாம் எத்தனை சதம் உண்மை, எது உண்மை என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு செல்கின்றான். வீட்டிற்கு வந்தபின் வீட்டு உண்மையைக் கூட எளிதாக கண்டு கொள்ள முடியாத நிலையில், உலக உண்மையை எங்கு காண்பது என்ற ஞானம் பெறுகின்றான்

14. குடும்ப புத்தி*
 
        கலப்புத்திருமணம் செய்த இருவரின் கதை. பிராமணப் பையனும், கிறிஸ்தவப் பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன். அதன் பின்னர் அவர்களின் சண்டை ஆரம்பிக்கின்றது, சேர்ந்து வாழ்வதின் பிரச்சினைகள் ஒன்றொன்றாக வருகின்றது. உணவில் ஆரம்பித்து உறவுகள் வரை.

15. தோஸ்த்*

            செகந்திராபாத்தில் சுதந்திர இந்தியாவுடன் இணைய போராட்டங்கள் நடைபெற்ற காலக்கதை. பெயர்கூட தெரியாத ஷெர்வானி அணிந்தப் பையன் செய்த சேட்டைக்கு, இவன் தண்டனை அடைகின்றான். அப்பையன் சொல்வதைக் கேட்காமல் போராட்டத்திற்கு போய் தலையை உடைத்துக் கொண்டு வருகின்றான். சொன்னதைக் கேட்டிருக்கலாம். பாவம்.

16. நாய்க்கடி*

      இன்று அனைவரையும் பயப்படுத்தும் விஷயம் நாய்க்கடி, சுப்பரமணியனை நாய்க்கடித்துவிட்டது. கை வைத்தியமாக கடித்த இடத்தில் நைட்ரிக் அமிலத்தை ஊற்ற, நாய்க்கடியுடன் அமில வைத்தியத்திற்கும் சிகிச்சை. சிகிச்சைக்கு அழைத்து செல்ல வரும் குதிரைவண்டிக்காரன், கடைசி நாட்களில் காணாமல் போகின்றான். விசாரிக்கும் போது தெரிகின்றது, அவன் நாய்கடித்து இறந்து போனான் என்று.

17. உங்கள் வயது என்ன?

      கர்ண பரம்பரைக் கதை, வழக்கத்தில் உள்ளதுதான். கடவுள் கழுதையின் ஆயுளையும், நாயின் ஆயுளையும் மனிதனுக்கு குடுத்த கதை. இதையெல்லாம் இவர் எழுதினாரா என்று ஆச்சரியம்தான் வருகின்றது. அதுவும் குமுதத்தில்.

18. கொடுத்த கடன்*

        உபகாரிகள். தன் கையில் பணமில்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது கடன் குடுப்பார்கள்.பெரும்பாலும் அது எள்ளுதான். கதைசொல்லியின் தந்தை அது போல வாங்கித்தந்த கடன், வாங்கியவன் ஊரைவிட்டு ஓடிப்போகின்றான். கடன் என்னவானது என்பது மிச்சக் கதை.

19. கோவில்*

           அமானுஷ்யக்கதை. பல வருடம் கழித்து ஊருக்கு வரும் அப்பு, தன் சித்தப்பா வீட்டில் தங்குகின்றான். கோவிலுக்கு சென்றவன் அங்கு காணும் காட்சி அவனை தாக்குகின்றது. நல்ல விவரிப்பு, கோவிலின் ஊரின் வர்ண்னை, கடைசி காட்சி எல்லாம் அருமை

20. குழந்தைகள் இறக்கும்போது*

      தலைப்பே சற்று கலக்குகின்றது. நினைத்து பார்க்கவே கஷ்டமான விஷயம். அக்காலத்தில் அது சர்வ சாதரணமாக இருந்துள்ளது. குழந்தைகளைப் பெற்று வாரி வாரிக் கொடுத்த அம்மாவின் கதை.

21. ஜொதிடம் பற்றிய இன்னொரு கர்ண பரம்பரைக் கதை

     நீளமான தலைப்பு. முந்தைய பதிவில் பார்த்த கதைகள் ஜோதிடம் எப்படி பலிக்கும் என்று பார்த்தோம், இது இரண்டு முரண் பட்ட ஜோதிடங்களில் எது பலிக்கும். பலமான மாங்கல்ய பலம் உள்ள பெண்ணிற்கு அற்பாயுள் கணவன் வந்தால் எது பலிக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக