15 செப்டம்பர் 2024

I have the streets - Ashwin

சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் 100 டெஸ்ட் ஆடுவது என்பது சாதரண விஷயம் இல்லை என்று பேசியிருந்தார். அவர் பேசியது இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி. ஸ்ரீகாந்த் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல நிலைகளில் இருந்தவர். ஆட்டக்காரர், தேர்வு கமிட்டி தலைவர், வர்ணனையாளர், பயிற்சியாளர். பல உள் விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அந்த கூற்றிற்கு பல வண்ணங்கள் இருக்கலாம்.  

நூறு டெஸ்ட் போட்டிகள் 500 விக்கெட்கள், உலககோப்பை. ஆஸ்திரேலியாவை கலக்கியவர். சயன்டிஸ்ட் அஷ்வினின் குட்டி ஸ்டோரிஸ்தான் இந்த புத்தகம். 

இந்த புத்தகம் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாம் கூறி அவரை வயதானவராக்க வேண்டாம். புத்தகமும் அப்படி எல்லாம் இல்லை. இந்த புத்தகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பேசுகின்றது. அவரது தொழில்முறை கிரிக்கெட் இல்லை. அவது வீட்டு கிரிக்கெட், தெரு கிரிக்கெட், க்ளப் கிரிக்கெட். 

16 மார்ச் 2024

மிளகு - இரா. முருகன்

மிளகு என்றால் நமக்கு பொங்கலில் இருந்து பொறுப்பாக பொறுக்கி தூரப்போடும் ஒரு வஸ்து, இல்லை என்றால் ஜல்தோஷம் பிடித்தால் கஷாயம் வைக்க பயன்படும் ஒரு பொருள். பாரம்பர்யத்தை காப்போம் என்று குதிரைவாலி சோறு உண்பவர்கள், வெளியில் பனங்கல்கண்டு பால் குடிக்கும் போது அதில் கொஞ்சமே கொஞ்சம் போடப்படும் வஸ்து. ஆனால் மிளகு ஒரு காலத்தில் நாடுகளின் வர்த்தகத்தையே ஆட்டி வைத்துள்ளது. மிளகை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளார்கள், இன்றைய அரபு நாடுகள் பெட்ரோல் விற்று கொழிப்பது போல மிளகு விற்று கொழித்த குட்டி நாடுகள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு குட்டி நாட்டின் ராணி மிளகு ராணி.

இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது கொஞ்சம் அரிதான விஷயம், விதிவிலக்குகள் உண்டு. அப்படி வந்தாலும் மிக அதிக காலம் அவர்கள் ஆட்சி நீடித்தது இல்லை. பெரும்பாலான அரசிகள் கணவனை இழந்தபின் அடுத்த வாரிசு பட்டத்திற்கு வரும் வரை ஆட்சி பொறுப்பை பார்த்து கொண்ட கதைதான் அதிகம். சென்ன பைரவா தேவி, தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்து சுமார் 54 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

சாளுக்கிய வம்சத்த்தை சேர்ந்த இந்த அரசிக்கு அன்றைய போர்ட்ச்சுக்கல் அரசு மிளகு ராணி என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. இறுதியில் நெருங்கிய நட்பு நாடுகளால் விழுங்கப்பட்டு ஆட்சியையும், நாட்டையும் இழந்தார்.  அவர் கட்டிய மிர்ஜான் கோட்டையும், சதுர் முக பஸதியும்தான் இன்று மிச்சம்.

01 பிப்ரவரி 2024

தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

 தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாகத்தான் அறிமுகம். பலமுறை பார்த்த படம். சிற்சில இடங்கலை ஓட்டிவிட்டால் சலிக்காமல் பார்க்க முடியும். காரணம் எனக்கு பாலையா, நாகேஷ் & மகாதேவன். ஒரு நாவலை அல்லது தொடரை எப்படி கதையை மாற்றாமல், ஜீவனை கெடுக்காமல் எப்படி படமாக்க வேண்டும் என்பதை ஏ.பி. நாகராஜன் காட்டியுள்ளார். 

இந்த புத்தகம் பல ஆண்டுகள் அச்சில் கிடையாது. உறவினர் வீட்டில் ஒரிஜினல் பதிப்பு இருந்தது. பல வருடம் முன்பு வாங்கி படிக்கும் போது பிடித்திருந்தது. மீண்டும் படிக்க முடியவில்லை. கொடுத்த புத்தகத்தை திருப்பி கேட்கும் கெட்ட பழக்கம் எப்போது போகுமோ தெரியவில்லை. 

சமீபத்தில் விகடன் பதிப்பித்திருந்தது. விகடன் மாதிரியே அதே அளவு, அதே மாதிரி பேப்பர் எல்லாம். 

31 ஜனவரி 2024

மீண்டும்

 கடந்த ஒரு வருடங்களாக இதில் எதுவும் எழுதவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. ஆடி கதையை சுட்டு சமீபத்தில் எழுதியது போலவே உள்ளது. அனைவருக்கும் வரும் அதே வியாதிதான். நேரத்தை சீரிஸ்கள் பறித்து கொண்டதன் விளைவு, அதோடு பெரும்பாலும் புதிய புத்தகங்கள் வாங்கியதும் குறைந்து விட்டது.  வாங்கிய புத்தகங்களும் பெரிய சைஸ். அதோடு கிண்டில் அன்லிமிட்டட் ஒரு மூன்று மாதம் கண்டதையும் படிக்க வைத்து விட்டது. 

அதோடு இதில் எழுதுவதை யார் படிக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றினாலும், இதில் எழுதுவது பெரும்பாலும் எனக்காக என்றாகிவிட்டது. ஒரு புத்தகத்தை மீண்டும் படிக்கும் போது, இங்கு வந்து ஒரு முறை பார்ப்பது வழக்கம். மூளை வளர்ந்திருக்கின்றதா என்று சோதனை செய்யும் முயற்சி பெரும்பாலும் தோல்விதான். பல புத்தகங்களைப் பற்றிய எண்ணம் மாறவில்லை. சில புத்தகங்களை பார்க்கும் கோணம் மாறியிருக்கின்றது. அதனால் மீண்டும் ............. 

27 டிசம்பர் 2022

ஆடி - மகாபாரத கதை

நண்பர்  சிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி எழுதிய மகாபாரத கதையை சொல்வனத்தில் படித்தேன். அந்த கருவும், வடிவமும் எனக்கு பிடித்திருந்தது. அதை கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவரும் இதற்கு எல்லாம் கேட்க வேண்டுமா என்றார். அவருக்கு நன்றி. இனி கதை...

பதினான்காம் நாள் போர் முடிந்த மாலை


துரியோதனனின் வார்த்தைகளால் கோபமுற்ற துரோணர் சிறிய ஓய்விற்கு பின் இரவிலும் போரை தொடர ஆணையிட்டு விட்டு கூடாரத்திற்கு வந்தார், கூடவே அஸ்வத்தாமனும் 


திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது துருபதர் கவசங்களை கழட்டாமல் இருப்பதை கண்டவுடன் ஒரு கணம் ஆச்சர்யம் வந்து சென்றது.