07 ஜூலை 2025

வெளவால் தேசம் - சோ.தர்மன்

வெளவால் சோ. தர்மனின் சமீபத்திய நாவல். தூர்வை, சூல் போன்ற நேரடியான கதை சொல்லலும், கூகை நாவலின் நடையும் கலந்த நாவல். சோ. தர்மன் இன்னமும் கரிசல்காட்டை  எழுதி முடிக்கவில்லை, கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவலில் வரும் ஒரு பாத்திரத்தின் கூற்று "இந்த தாமிரபரணி கரையெல்லாம் கதைதான்". உண்மைதான். இன்னமும் ஒரு பத்திருபது நாவலாவது எழுதுவார் போல.

அவரது அனைத்து முந்தைய நாவல்களின் கரு ஒன்றுதான். நன்றாக வளர்ந்த ஒரு சமூகம் அதன் வீழ்ச்சியை நோக்கி செல்வது. ஒவ்வொரு நாவலிலும் வேறுபட்ட காரணிகள், சில பொதுவான காரணிகளும் உண்டு அல்லது ஒரே காரணத்தின் பல கோணங்கள். இந்த நாவலில் அது போன்ற ஒரு சாத்தியக்கூறை காட்டியுள்ளார். 

சோ. தர்மனின் நாவல்களை படிக்கும் போது அது சொல்லப்படுவதாகவே தோன்றும். சொல்லப்படும் கதைகளுக்கும், எழுதப்பட்ட கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கும். வைரமுத்து விகடனில் எழுதிய தொடர்கள் அனைத்தும் அவரால் சொல்லப்பட்டு யோரோ ஒருவரால் எழுதப்பட்டது என்பதை படிக்கும் போதே விளங்கும், சில விஷயங்கள் நெருடும், ஆசிரியரின் இருப்பு இருக்கும். பாலகுமாரனின் பிற்கால நாவல்களுக்கும் அதுதான் நடந்தது. ஆனால் இந்த சொல்லுதல் என்பது வேறுபட்டது. ஆசிரியரின் இருப்பு என்பதே கிடையாது. உருளைக் குடி கிராமத்தை நாம் காண முடியும். 

30 ஜூன் 2025

வேள்பாரி - சு. வெங்கடேசன்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய தொடர்கதை. வீரயுக நாயகன் வேள்பாரி. விகடனில் தொடராக வெளிவந்து, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகி உள்ளது என்று புத்தக அட்டை சொல்கின்றது. 

இன்றைய நிலையில் ஒரு லட்சம் பிரதி என்பது உண்மையில் ஒரு சாதனைதான். காவல்கோட்டம் இந்த அளவிற்கு போகவில்லை என்று அனுமானிக்கலாம். அதே ஆசிரியர், வரலாற்று தளம் இருந்தும் ஏன் இந்த வித்தியாசம். கண்டிப்பாக விகடன்  காரணம் இல்ல. விகடனில் வரும் அனைத்து தொடர்களும் இப்படி விற்பதில்லை. பின் எப்படி என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள். நமது சினிமா ஆர்வம், புதிதாக கிளம்பி இருக்கும் தமிழர் உணர்வு (தமிழ் உணர்வு இல்லை, தமிழர் உணர்வு) 

இது ஒரு பாகுபலி டைப் கதை. ஏன் பாகுபலி ஓடியது, பிரம்மாண்டமான திரையில் நம்ப முடியாத காட்சிகளை ஒரு காமிக்ஸ் வடிவத்தில் காட்டியது. இது அது போன்ற ஒரு நாவல். தமிழர் என்ற வார்த்தை ஒரு நல்ல வியாபார வார்த்தை. எதோடு சேர்த்தாலும் விற்கும், தமிழனின் பானம், தமிழனின் கலை, தமிழனின் கட்டிடம், தமிழனின் உணவு, தமிழனின் அறிவு  இது அந்த வகையில்  இது தமிழனின் சரித்திரம். புல்லரிப்புகளுடன் படிக்க ஏற்ற கதை.

19 ஜூன் 2025

கர்மன் - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா, சாதேவி, புகைப்படங்களின் கதைகள் என்ற சிறுகதை தொகுப்புகளும், மாயப்பெரு நதி என்னும் நாவலையும் வெளியிட்டுள்ளார். சுவாசம் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுவருகின்றார். அவரின் புதிய நாவல் கர்மன்.

மாயப்பெருநதி குறிப்புகளில் அந்த நாவலின் அட்டைப்படத்தை பற்றி பாரட்டி எழுதியிருந்தேன். இந்த நாவலை படிக்க தூண்டியதில் இந்நாவலின் அட்டை படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் அட்டைபடத்தை வைத்து நான் யூகித்தது மாதிரி இல்லை.

அட்டைப்படம், ஒரு கேத வீட்டை காட்டுகின்றது. ஒருவர் இறந்து போனால் அவருக்கு செய்யும் இறுதி சடங்கையும் கர்மா என்றே சொல்வதுண்டு. "கர்மா செய்யும் வயதா அது", "யார் கர்மாவை செய்வது" என்று எல்லாம் பேச்சு வழக்கில் பேசுவதுண்டு. அட்டைப்படத்தையும், தலைப்பையும் பார்த்து யாருடைய சாவுக்கோ கர்மா செய்யும் ஒருவனைப் பற்றிய கதை என்றே நினைத்தேன். இல்லை. கர்மா என்பது முன்வினைப்பயன் என்று கூறலாமா? கர்மா என்பது நமது செயல்களுக்கான வினை, இங்கு பெங்களூரில் கன்னடர்கள்  கடுப்பாகி போகும் போது, "நன்னு கர்மாபா", "ஹே, ஏனு கர்மாபா" என்று புலம்புவார்கள்.  கர்மன் என்பது கர்மாவிற்கு தந்த உருவம். 

மரண வீடுகள் பலருக்கு பல கேள்விகளை எழுப்பும், அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவானது இந்த நாவல் என்கின்றார் ஆசிரியர். 

02 ஜனவரி 2025

சிபிஐ கதைகள் - விமலாதித்த மாமல்லன்

சிபிஐ என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அரசியல் கட்சிகள் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது வேண்டும் என்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது வேண்டாம் என்று எதிர்க்கும் அமைப்பு. பெரிய குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு, கொலைகளை, பெரிய ஊழல்களை விசாரிக்கும் அமைப்பு. ஆனால் பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு டிடிஆரை பொறிவைத்து பிடிக்க இறங்கும் என்றால் நம்ப முடிகின்றதா? நம்புங்கள் என்கின்றார் விமலாதித்த மாமல்லன்.

புனைவு என்னும் புதிர், விளக்கும் வெளிச்சமும் போன்ற புத்தகங்களுக்கு பின் அவர் வெளியுட்டுள்ள புத்தகம் சிபிஐ கதைகள். 

சிபிஐ கதைகள் விமலாதித்த மாமல்லனின் புதிய புத்தகம். சிபிஐ விசாரணையை மையமாக கொண்ட கதைகள். சிறுகதை தொகுப்பு என்றும் வைத்து கொள்ளலாம், அல்லது அசோகமித்திரனின் ஒற்றன் நாவல் போன்ற நாவல் என்றும் வைத்து கொள்ளலாம். நரஹரி என்னும் பாத்திரம் அனைத்து கதைகளைக்குமான சரடு.